17 வயது சிறுவனிடம் குடி பழக்கம்!! கண் இமைப்பதற்குள் போர்ஷே காரில் எல்லாமே முடிந்தது...
புனேவில் குடிபோதையில் 17 வயது இளைஞன் ஓட்டிய போர்ஷே கார் மோதி இருவர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால இளம் தலைமுறையினர் எதனை நோக்கி செல்கின்றனர்? என கேட்க தோன்றும் அளவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சித் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த செயலில் ஈடுப்பட்ட இளைஞனுக்கு அடுத்த சில மணிநேரங்களில் ஜாமீன் கிடைத்துள்ளது.
மற்ற நாடுகளை போல், இந்தியாவிலும் போக்குவரத்தின் வேகம் அதிகரித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக வாகனங்களில் வேகமாக செல்லவே நம்மில் நிறைய பேர் விரும்புகிறோம். அதேபோல், மது நமது வாழ்வில் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டதால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க போலீஸார் எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒருபக்கம் மது போதையால் நடக்கும் விபத்துகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மே 19ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 3:15 மணியளவில் இளைஞர் ஒருவர் குடிப்போதையில் கார் ஓட்டி 2 உயிர்களை பலியாக்கியுள்ளார்.
இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், குடிப்போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ள இந்த போர்ஷே கார் டிரைவருக்கு வயது வெறும் 17 மட்டுமே ஆகிறது. பள்ளியில் இருந்து வெளியே வந்து கல்லூரியில் சேரும் வயது. ஆனால், இந்த வயதிலேயே குடி பழக்கத்தை கற்றுக் கொண்ட இந்த நபர், குடிப்போதையில் கார் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு சென்றுள்ளார்.

புனேவில் கல்யாணி நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. சில்வர் நிறத்திலான போர்ஷே காரில் குடிப்போதையில் அதிவேகமாக இந்த இளைஞர் சென்றுள்ளார். அப்போது, மெட்ரோ லைனுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, இந்த இளைஞரின் போர்ஷே கார் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேறொரு மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற அனிஸ் அவாதியா என்பவரும், அஷ்வினி கோஸ்டா என்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர், விபத்தை ஏற்படுத்திய காரை மடக்கி பிடித்து உள்ளே போதையில் இருந்த 17 வயது டிரைவரை வெளியே இழுத்து போட்டு சராமாரியாக வெளுத்து வாங்கினர். போலீஸார் வந்த பின்பே அந்த இளைஞர் மக்களின் அடியில் இருந்து தப்பித்தார்.

இந்த விபத்தில் போர்ஷே காரின் முன்பக்கத்தின் இடதுப்பக்கமும் பலமாக சேதமடைந்துள்ளது. இதனால், போர்ஷேவில் இது எந்த கார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. காரின் இடதுப்பக்க ஹெட்லைட் முழுவதுமாக சிதைந்துள்ளது. மோதிய காருக்கே இவ்வளவு அடி என்றால், மோதலை சந்தித்த மோட்டார்சைக்கிள் மற்றும் அதில் பயணித்தவர்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை. விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனை கைது செய்த போலீசார் அவனை சிறார் நீதி வாரியத்தின் முன் நிறுத்தினர்.
2 உயிர்களை கார் ஏற்றி கொலை செய்த காரணத்தினால் இந்த இளைஞனுக்கு பெரிய தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மணிநேரங்களில் அவனுக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது. 15 நாட்களுக்கு போக்குவரத்து போலீசாருடன் பணியாற்ற வேண்டும், முறையாக மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என சில நிபந்தனைகளுடன் இந்த இளைஞனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 17 வயது இளைஞன் கார் ஓட்டுவதே முதலில் பெரிய தவறு. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முறையாக லைசன்ஸ் வாங்கி கார் ஓட்ட வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. ஆனால், இந்த இளைஞன் போர்ஷே போன்ற பவர்ஃபுல்லான காரை மது போதையில் ஓட்டியது மட்டுமின்றி, இருவர் மீது ஏற்றி கொன்றுள்ளான். அவனுக்கும் நீதித்துறை ஜாமீன் வழங்கியுள்ளது...


Click it and Unblock the Notifications









