முதுகலை பட்டதாரி... போலீஸ் ஆசை!! இளம்பெண் செய்யும் வேலை அவரே எதிர்பார்க்காதது!!
உத்தர பிரதேசத்தில் பேருந்து ஓட்டுனராக பெண் ஒருவர் பணி அமர்த்தப்பட்டு உள்ளார். இதே பேருந்தில்தான் அவரது கணவர் பேருந்து நடத்துனராக பணியாற்றுகிறார். உத்திர பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் பகுதியில் பிரபலமாகி உள்ள இந்த தம்பதியை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்றைய காலத்தில், இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் அரசு பேருந்தை ஓட்டுவது எல்லாம் சாதாரண விஷயமல்ல. போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் என்றால், கூட்ட நெரிசல் வேறொரு பிரச்சனை என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கட்டில் தொங்கியபடி பேருந்தில் பயணிப்பவர்களும் இருக்கின்றனர். அதேபோல், ஓடி வந்து பேருந்தில் ஏறுபவர்களும் நம் நாட்டில் அதிக பேர் உள்ளனர்.

இதையெல்லாம் கடந்தே இந்தியாவில் ஒருவர் அரசு பேருந்தை ஓட்ட வேண்டியதாக உள்ளது. இப்படியிருக்கையில், டெல்லிக்கு அருகே உத்திர பிரதேசம் மாநிலத்தின் டெல்லி என்சிஆர் பகுதியில், பிஸியான ஓர் வழித்தடத்தில் பெண் ஒருவர் பேருந்து ஓட்டுனராக பணியமர்த்தப் பட்டுள்ளார். மேலும், இதே பேருந்தில்தான் இந்த பெண்ணின் கணவரும் நடத்துனராக பணியாற்றுகிறார்.
உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் வெட் குமாரி. உத்திர பிரதேச மாநில போலீஸாராக ஆகுவதுதான் இவரது சிறு வயது கனவாக இருந்துள்ளது. ஆனால், வாழ்க்கை இவரை பேருந்து ஓட்டுனராக வந்து நிறுத்தியுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் பரபரப்பான காஸியாபாத் - படாவுன் வழித்தடத்தில் இவர் பேருந்து ஓட்டுனராக பணியமர்ந்தப்பட்டு உள்ளார்.

அலுவலக பணிகளுக்காக இந்த வழித்தடத்தில் நிறைய பேர் பேருந்து சேவையை பயன்படுத்துவதால், இந்த வழித்தட பேருந்தில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும் என்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இருப்பினும், தைரியத்துடன் வெட் குமாரி தனது ஓட்டுனர் பொறுப்பை இந்த வழித்தடத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
லோனி டிப்போவில் இருந்து பேருந்தை எடுக்கும் இவர் கவுஷாம்பி பகுதியில் இருந்து புறப்பட்டு, காஸியாபாத்தை அடைந்து, பின்னர் அங்கிருந்து படாவுன் பகுதிக்கு பயணிகளை பேருந்தில் அழைத்து செல்கிறார். வெட் குமாரி, ஓர் நன்கு படித்த முதுகலை பட்டதாரி ஆவார். சமஸ்கிருதம் படிப்பில் இவர் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இதனால்தான், பேருந்து ஓட்டுனர் வேலை கிடைத்த போதிலும், ஒரு பக்கம் போலீஸ் வேலைக்கு தன் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு போலீஸ் வேலைக்காக வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்த போது, செய்தித்தாளில் பேருந்து ஓட்டுனருக்கான வேலை வாய்ப்பு வெட் குமாரியின் கண்ணில் பட்டுள்ளது. எதர்ச்சையாக அந்த பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.
அதன்பின், உத்திர பிரதேச சாலை போக்குவரத்து துறை சார்பில் வெட் குமாரிக்கு பேருந்து ஓட்டுனர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் 2021இல் நடத்தப்பட்டன. அதன் பின்னர், கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் கவுஷம்பி டிப்போவில் இவருக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வெட் குமாரி அரசு பேருந்து ஓட்டுனராக பணியமர்ந்தப்பட்டு உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, ஓர் வேலைக்கு நாம் முயற்சி செய்துக் கொண்டிருந்தாலும், ஏதேனும் ஒரு நல்ல அரசாங்க வேலை கிடைத்த பின், இதுவே போதும் என மனம் ஏற்க ஆரம்பித்துவிடும். ஆனால், வெட் குமாரி அரசு பேருந்து ஓட்டுனர் வேலை கிடைத்த போதிலும், தொடர்ந்து போலீஸ் வேலைக்கு தனது முயற்சிகளை விடாமுயற்சி உடன் மேற்கொண்டு வருகிறார். இதற்கு, வெட் குமாரிக்கு பக்க பலமாக இருப்பவர், அவரது கணவர் ஆவார்.


Click it and Unblock the Notifications









