உங்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை!! பரிசாக மஹிந்திரா காரை வாங்கிக்கோங்க... சொன்னதை செய்த தொழிலதிபர்!
இந்திய இளம் சதுரங்க விளையாட்டு வீரராக பல வெற்றிகளை குவித்துவரும் ஆர் பிரக்ஞானந்தாவுக்கு ஆனந்த் மஹிந்திரா அறிவித்தப்படி எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கியுள்ளார். வெள்ளை நிறத்திலான மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை டெலிவிரி எடுத்த பின் பிரக்ஞானந்தா தனது எக்ஸ் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆனந்த் மஹிந்திரா ஆவார். அவரது கார்கள் வணிகம் தொடர்ந்து வளர்ந்து வருவதற்கு அவரது கருணை உள்ளமும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்காக, அந்த சமயத்தில் அணியில் இடம்பிடித்து இருந்த 6 இளம் வீரர்களுக்கு மஹிந்திரா தார் வாகனத்தை பரிசாக வழங்கினார்.

அதில் நமது தமிழ்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் ஒருவராக இருந்தார். இங்கிருந்துதான் ஆனந்த் மஹிந்திராவின் பரிசு வழங்கும் செயல்கள் துவங்கின. அதன்பின் நடைபெற்ற ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற குறிப்பிட்ட சில போட்டியாளர்களுக்கு ஆனந்த் மஹிந்திராவின் பரிசு வாகனங்கள் அறிவிக்கப்பட்டன.
மஹிந்திரா தார் வாகனம் மட்டுமின்றி, சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வரிசையில், சதுரங்க உலக கோப்பை 2023 போட்டியில் இறுதி ஆட்டம் வரையில் சென்ற இந்தியாவின் இளம் சதுரங்க விளையாட்டு வீரர் ஆர் பிரக்ஞானந்தாவுக்கு கடந்த ஆண்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 என்கிற எலக்ட்ரிக் காரை ஆனந்த் மஹிந்திரா பரிசாக அறிவித்தார்.

2023 ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் அசர்பைஜான் நாட்டின் தலைநகர் பக்கூவில் நடைபெற்ற 2023 உலக சதுரங்க போட்டி தொடர் முழுவதுமாகவே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறிய போது, நிச்சயமாக இவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுவிடுவார் என இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரக்ஞானந்தாவால் இறுதி ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. இதனால், தொடரில் 2வது இடத்தை பிடித்தார்.
உலக சதுரங்க கோப்பை போட்டி தொடரின் இறுதி ஆட்டம் வரையில் சென்றதே பெரிய சாதனை என பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில்தான், பிரக்ஞானந்தாவுக்கு ஆனந்த் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை பரிசாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் பிரக்ஞானந்தாவின் கைகளுக்கு சென்றடைந்துள்ளது.

வெள்ளை நிறத்திலான எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றதை படங்களுடன் பிரக்ஞானந்தா தனது எக்ஸ் பக்கத்தில், ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரக்ஞானந்தாவின் எக்ஸ் பதிவில், "எக்ஸ்யூவி400 பெறப்பட்டது, எனது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி ஆனந்த் மஹிந்திரா சார்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டில், உலக சதுரங்க போட்டியின் இறுதி ஆட்டம் வரையில் சென்றதற்காக பிரக்ஞானந்தாவுக்கு மஹிந்திரா தார் வாகனத்தை பரிசாக வழங்கலாம் என ஆனந்த் மஹிந்திராவுக்கு பலரும் வேண்டுகோள் வைத்தனர். ஆனால், வீடியோ கேம்கள் பிரபலமடைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பிரக்ஞானந்தாவை சதுரங்க போட்டியில் கலந்துக் கொள்ள ஊக்கமளித்த அவரது பெற்றோர்களின் முடிவை போல், நான் அவர்களுக்கு எக்ஸ்யூவி400 என்கிற எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்தார்.
Received XUV 400 , My Parents are very happy 😊 Thank you very much @anandmahindra sir🙏 https://t.co/5ZmogCLGF4 pic.twitter.com/zmwMP2Ltza
— Praggnanandhaa (@rpraggnachess) March 12, 2024
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பதக்கம் வென்றவர்களுக்கும் மட்டுமே ஆனந்த் மஹிந்திரா பரிசுகளை வழங்கி வந்தார். ஆனால், பிரக்ஞானந்தாவுக்கு மட்டுமே தொடரில் முதலிடம் பிடிக்காவிடினும் ஆனந்த் மஹிந்திராவின் பரிசு கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், 18 வயது மட்டுமே ஆகும் பிரக்ஞானந்தா இவ்வளவு இளம் வயதில் உலக சதுரங்க போட்டி தொடரின் இறுதி ஆட்டம் வரையில் சென்றிருப்பதே ஆகும்.


Click it and Unblock the Notifications









