சந்திரயான் 3 கண்டுபிடித்த முக்கியமான விஷயம்! உலக நாடுகள் எல்லாம் இஸ்ரோவை வியந்து பாக்குறாங்க!
சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் சல்பர் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. அடுத்ததாக ஹைட்ரஜன் இருப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த தகவலை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது உலக விஞ்ஞானிகள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோவின் விண்கலம் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இந்த வெற்றியை தற்போது இந்தியர்கள் கொண்டாடி வரும் நிலையில், தரை இறங்கிய லேண்டரிலிருந்து வெளியான பிரக்யான் ரோவர், தற்போது நிலவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சில ஆய்வுகளை செய்து அந்த தகவல்களை லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது.

அதன்படி இந்த பிரக்யான் ரோவரில் லிப்ஸ் (LIBS) என்ற ஒரு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் நிலவில் உள்ள மேற்பரப்பில் படிந்துள்ள மூலக்கூறுகளை ஆய்வு செய்து அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இதில் புதிதாக நிலவின் மேல் பரப்பில் சல்பர் இருப்பதற்கான ஆதாரங்கள் இஸ்ரோவிற்கு கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நிலவில் அலுமினியம், சல்பர், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், ஆகிய மூலக்கூறுகள் இருப்பதாகவும் மேலும் மெக்னீஷ், சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளது. மேலும் ஹைட்ரஜன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை தொடர்ந்து ஆய்வு செய்வோம் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேல் குறிப்பிடப்பட்டுள்ள மூலக்கூறுகள் எல்லாம் நிலவின் மேற்பரப்பில் இருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வந்தாலும், எது எது எவ்வளவு அளவுகளில் இருக்கிறது என்ற தகவலை இதுவரை வெளியிடவில்லை. ஒவ்வொரு பரிசோதனையிலும் அதன் அளவுகளை ரோவர் லேண்டர் மூலம் இஸ்ரோவிற்கு தெரிவிக்கப்பட்டாலும் அது தகவல்களை இதுவரை இஸ்ரோ வெளியில் வெளியிடவில்லை. இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.
இந்த பிரக்யான் என்ற ரோவர் நிலவின் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆய்வுகளில் கிடைக்கும் முடிவுகளை எல்லாம் இஸ்ரோ சேமித்து வருகிறது. நிலவில் ரோவர் ஆய்வு செய்யும் போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான முடிவுகள் கிடைக்கப்பெறலாம்.
இதனால் ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் ஆய்வின் முடிவுகளை எல்லாம் சேமித்து வைத்து அதன் பின்பு அதற்கான விஞ்ஞானிகள் இந்த முடிவுகளை வைத்து ஆய்வு செய்து நிலவில் எந்தெந்த மூலக்கூறுகள் இவ்வளவு என்னென்ன அளவில் இருக்கிறது என்பது குறித்து முழுமையான தகவலை வெளியிடுவார்கள்.
நிலவில் தற்போது ஆக்ஸிஜன் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் அடுத்ததாக ஹைட்ரஜன் இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துவிட்டால் நிலவில் நீரை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் வந்துவிடும். இப்படியாக நிலவில் நீரை உருவாக்கி விட்டால் அங்கு மனிதர்கள் வாழ தகுதியான ஒரு இடத்தை கட்டமைக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.
நிலவில் நேரடியாக பூமியில் மனிதர்கள் வசிப்பது போலவே நிலவிலும் வசிக்க முடியாது என்றாலும் நிலவில் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அந்த கட்டமைப்பிற்குள் பூமியில் எப்படி மனிதர்கள் வசிக்கிறார்களோ அதே போலவே அங்கும் வசிக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பி வருகின்றனர்.
இதற்கு பூமியிலிருந்து நிலவிற்கு கொண்டு செல்ல முடியாத சில பொருட்களான தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை நிலவிலேயே பூர்த்தி செய்ய முடிந்தது என்றால் தான் இது சாத்தியம் என்பதால்தான் இப்படியான ஆய்வுகள் எல்லாம் நடத்தப்பட்டு வருகிறது. சந்திரயான் 3 விண்கலம் நிலவில் மனிதர்களை வாழ தேவையானவை எல்லாம் செய்து கொள்ள முடியும் என்பதை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டது என்றே சொல்லலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளியாகும்.
நிலவில் கடந்த 23ம் தேதி தரையிறங்கிய லேண்டரிலிருந்து வெளியான ரோவர் தற்போது நிலவில் பல்வேறு நிலப்பரப்புகளில் ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த ரோவருக்கு 14 நாட்கள் தான் ஆயுள்காலம். அதாவது வெயில் அந்த பகுதியில் இருக்கும் வரை மட்டும்தான் அங்கு அந்த ரோவரால் செயல்பாடுகளை செய்ய முடியும். அதன்படி தற்போது வரை ஏழு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அடுத்த 2நாட்கள் ரோவர் தொடர்ந்து தனது பணியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலவில் மனிதர்கள் வாழ தேவையான அனைத்து மூலக்கூறுகளும் இருக்கும் பட்சத்தில் அடுத்து உலக நாடுகள் முழுவதும் நிலவின் மனிதர்களை வாழ வைக்க தேவையான ஏற்பாடுகள் மற்றும் ஆய்வுகளை எல்லாம் செய்ய துவங்கிவிடும். அதற்கு இந்த சந்திரயான் 3 விண்கலம் ஒரு முக்கியமான ஆதாரமாக விளங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications