பிரஜ்வால் ரேவண்ணா அரசாங்க பாஸ்போர்ட்டில் தப்பி சென்றாரா? அப்படி என்றால் என்ன?
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜனதா தள கட்சியின் எம்பியான பிரெஜ்வால் ரேவண்ணா என்பவர், ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய நிலையில் அவர் தற்போது அரசாங்க பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனிக்கு தப்பி சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அது என்ன அரசாங்க பாஸ்போர்ட்? அதை எப்படி பெறுவது? யார் யாருக்கு அந்த பாஸ்போர்ட் வழங்கப்படும்? அந்த பாஸ்போர்டிற்க்கும் சாதாரண பாஸ்போர்டிற்க்கும் என்ன வித்தியாசம்? என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
பொதுவாக நாம் வாங்கும் சாதாரண பாஸ்போர்ட் கருநீல நிற அட்டை கொண்ட பாஸ்போர்ட் ஆக வழங்கப்படுகிறது. ஆனால் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் எனப்படும் அரசாங்க பாஸ்போர்ட் மெரூன் நிற கவர் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் சாதாரண பாஸ்போர்ட் பத்து ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக வழங்கப்படும். டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலாவதி காலத்துடன் மட்டுமே வழங்கப்படும்.

சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பதற்கும் இந்த டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் வெளிநாட்டுக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டுடன் செல்லும் நபர்களை கைது செய்யவோ சிறையில் அடைக்கவோ அல்லது மற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் அவர்கள் எந்த நாட்டில் பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்களோ அந்த நாட்டின் அனுமதியை பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.
இந்த டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் என்பது ஐந்து விதமான பிரிவின் கீழ் உள்ள நபர்களுக்கு வழங்கப்படும். முக்கியமாக அரசு தரப்பிலிருந்து அரசு பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு இப்படியான பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் ஐஎஃப்எஸ் ரேங்க் உள்ள ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது நெருங்கிய உறவினர்களான மனைவி, கணவன் மற்றும் குழந்தைகளுக்கு இப்படியான பாஸ்போர்ட் வழங்கப்படும். இதுபோக மக்கள் பிரதிநிதியாக இருந்து அரசு முறை பயணமாக வெளிநாட்டுக்கு செல்லும் நபர்களுக்கு இப்படியான பாஸ்போர்ட் வழங்கப்படும். மத்திய மாநில அமைச்சர்களாகவோ எம்பிகளாகவோ இருந்தால் அவர்களுக்கு இப்படியான பாஸ்போர்ட் வழங்கப்படும்.
ராகுல் காந்திக்கு கூட இப்படியான டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் என்பது வழங்கப்பட்டிருந்தது. அவரது எம்பி பதவி பறிபோன பிறகு தான் அந்த பாஸ்போர்ட் அவரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. இப்படியான பாஸ்போர்ட் தான் பிரெஜ்வால் ரேவண்ணாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட்டை வைத்து தான் அவர் ஜெர்மனி நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தற்போது கூறப்படுகிறது.
அரசாங்க பாஸ்போர்ட்டை வைத்து தப்பி சென்றுள்ளார் என்றால், அரசாங்கமே அவருக்கு வெளிநாடு தப்பிச் செல்ல அனுமதி வழங்கி உள்ளதா என்ற கேள்வி பலர் ஏழலாம். நிச்சயமாக இல்லை, இப்படியாக பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் முன்னர் அரசுக்கு முறையாக தெரிவித்து விசா நோட் என்ற விபரத்தை பெற வேண்டும் அதைப் பெற்றால் மட்டுமே அரசு பணிக்காக அவர்கள் வெளிநாட்டுக்கு செல்வதாக அர்த்தம்.
ஆனால் இந்த விசா நோட் இல்லாமல் உலகில் உள்ள 34 நாடுகளில் இந்திய டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள். எந்த வித விசாவும் பெறாமல் நுழைய முடியும் இதற்காக இந்திய அரசுடன் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது.
அதேபோல அந்த நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் இந்தியாவிற்கு வருவதற்கும் இந்தியாவில் அவர்களுக்கு விசா தேவைப்படாது. அந்த நாட்டில் உள்ள அரசாங்க பாஸ்போர்ட்டை அவர்கள் வைத்திருக்க வேண்டியது மட்டும் அவசியம். இதில் ஜெர்மனி நாடும் இந்த 34 நாடுகள் பட்டியலில் இருப்பதால் ஜெர்மனி நாட்டுக்கு அரசாங்க விசா நோட் இல்லாமலேயே பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.
இப்படியாக டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டுடன் வெளிநாட்டுக்கு பயணம் செய்த ஒருவர் அந்த நாட்டில் அதிகபட்சம் 90 நாட்கள் மட்டுமே தங்கி இருக்க அனுமதி இருக்கிறது. 90 நாட்களுக்குள் அவர் அந்த நாட்டை விட்டு காலி செய்து வேறு நாட்டிற்கு சென்று விட வேண்டும். இதன்படி தற்போது ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் 90 நாட்கள் அங்கு இருக்க அனுமதி இருக்கிறது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ரேவண்ணாவின் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை கேன்சல் செய்ய கோரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் கோர்ட் உத்தரவு தேவை இதனால் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோர்ட் அறிவுறுத்தினால் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கிறது.
இப்படியாக டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால் விவகாரத்து காரணமாக பிரிதல் இந்தியாவின் இறையாண்மை அல்லது மாண்பை வெளிநாட்டிற்கு சென்று கெடுக்கும், விதமாக செயல்படுதல் இந்திய நீதிமன்றங்களால் தண்டனை பெற்ற குற்றவாளியாக அறிவிக்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாஸ்போர்ட் காலாவதியாகும் முன்பே ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ரேவண்ணா விவகாரத்தை பொருத்தவரை கோர்ட் தலையிட்டால் மட்டுமே ரத்து செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் நாம் சாதாரண பாஸ்போர்ட் மட்டுமே இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் சார்பாக வெளிநாட்டிற்கு செல்லும் நபர்களுக்கு பிரத்தியேகமாக டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலம் அவர்கள் வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை காட்ட முடியும். பலருக்கும் இது அறியாத தகவலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








