அக்மார்க் இந்திய தயாரிப்பு... பிரதமர் மோடி இந்த காரை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை! விலை எவ்ளோனு தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி, மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் வலம் வந்தார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் (Ahmedabad) நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கலந்து கொண்டார். இந்த ரோடு ஷோ (Road Show) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனம் கவனம் ஈர்த்துள்ளது.

ஓபன்-டாப் மஹிந்திரா தார் (Open-top Mahindra Thar) காரைதான் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பயன்படுத்தினார். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரில், பிரதமர் மோடி நின்று கொண்டே வந்தார். அத்துடன் அங்கு குழுமியிருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகத்துடன் கைகளை அசைத்தார்.

மேற்கூரை திறந்த நிலையில் இருந்ததைதான் இங்கே ஓபன்-டாப் என குறிப்பிட்டுள்ளோம். பொதுமக்களை பிரதமர் மோடியும், பிரதமர் மோடியை மக்களும் பார்ப்பதற்கு வசதியாக ஓபன்-டாப் மாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனேகமாக பிரதமர் மோடி புதிய மஹிந்திரா தார் காரை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய ஆஃப் ரோடு திறனுடைய கார்களில் ஒன்றாக மஹிந்திரா தார் திகழ்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடனும் மஹிந்திரா தார் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல்கள், 13.17 லட்ச ரூபாய் முதல் 15.33 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

அதே நேரத்தில் இந்த காரின் டீசல் மாடல்கள், 13.38 லட்ச ரூபாய் முதல் 15.53 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மஹிந்திரா தார் இந்தியாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருப்பதற்கு, இந்த சவாலான விலை நிர்ணயமும் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.

மஹிந்திரா தார் காரின் பெட்ரோல் மாடல்களில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் மேனுவல் வேரியண்ட்களில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 300 என்எம் டார்க் திறனை வழங்கும் வகையில் 'ட்யூனிங்' செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மஹிந்திரா தார் காரின் டீசல் மாடல்களில், 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இரண்டு இன்ஜின்களுடனும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் ஃபோர்ஸ் கூர்காதான், மஹிந்திரா தார் காரின் மிக முக்கியமான போட்டியாளர் ஆகும். மஹிந்திரா தார் காரை போலவே, புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

'இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022' விருதையும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது. மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக ஸ்கார்பியோ எஸ்யூவி ரக காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான தயாரிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, தற்போது விற்பனையில் இருந்து வரும் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் நேரடி போட்டியாக இருக்கும்.

எதிர்காலத்தில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களின் மீது அதிக கவனம் செலுத்தவுள்ளது. தற்போதைய நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக, மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் திகழ்கிறது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக இருக்கும்.


Click it and Unblock the Notifications








