ஓவியங்களால் வசீகரிக்கும் இந்திய இளவரசி... தேதியை குறித்து வெச்சிக்கோங்க!! பழமையான கார்களை கண்முன் பார்க்கலாம்
கார் கண்காட்சியை உலகின் பல்வேறு பகுதிகளில் பார்த்திருப்பீர்கள். இதற்காகவே நிறைய நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த வகையில், இந்தியாவில் விரைவில் பெங்களூரில் முதல் ஆட்டோமொபைல் சார்ந்த கலை கண்காட்சி நடைபெறவுள்ளது. 'ஆட்டோமோட்டிவ் ராப்சோடி' (Automotive Rhapsody) என்கிற பெயரில் இந்த ஆட்டோமொபைல் கண்காட்சியை ஆர்டெல்லா (Artella) நிறுவனத்தின் பெலிண்டா ஃபெர்னாண்டஸ் பெங்களூரில் நடத்தவுள்ளார். என்னென்ன மாதிரியான கலை பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளன என்பதையும், கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் தேதி உள்ளிட்ட விபரங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு சரியான தீனி போடும் விதமாக, ஆட்டோமோட்டிவ் ராப்சோடி கண்காட்சி பெங்களூரின் ஆர்ட் ஹவுஸ் கேலரியில் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதி வரையில் நடத்தப்பட உள்ளது. ஆட்டோமொபைல் சார்ந்த பல்வேறு விதமான கலை பொருட்கள் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியை ஆர்டெல்லா நிறுவனம் நிர்வகிக்க உள்ளது.

இதுகுறித்து ஆர்டெல்லா நிறுவனத்தின் நிறுவனர் பெலிண்டா ஃபெர்னாண்டஸ் கூறுகையில், "பணக்காரர்கள் மற்றும் சாமானியர்களை ஒரே மாதிரியாக ஏற்றி சென்ற கடந்த காலத்தின் கம்பீரமான சக்கரங்கள் மற்றும் வரலாற்றுடைய கார்களை நுட்பமாக காட்டும் இளவரசி விதிதா சிங் பர்வானியின் ஓவியங்கள் மூலம் விண்டேஜ் என்ஜின்களை உயிர்பித்து மயக்கும் உலகில் அடியெடுத்து வையுங்கள். ஆர்ட் ஹவுஸ், பெங்களூருக்கு ஆட்டோமோட்டிவ் ராப்சோடியை கொண்டு வருவதில் பெருமை அடைகிறேன்" என்றார்.
இளவரசி விதிதா சிங் பர்வானியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவர் ஓர் இந்திய ராஜ வம்சாவளியை சேர்ந்தவர். இவர்களது ராஜ குடும்பத்தினருக்கு கார்கள் என்றாலே தனி ஆர்வம் உண்டு. இளவரசி விதிதா சிங்கின் தந்தை 'மஹாராஜாக்களின் ஆட்டோமொபைல்கள்' என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். இளவரசி விதிதாவிற்கு ஓவியம் வரைதல் மிகவும் பிடித்தமான விஷயமாகும்.
ஆட்டோமொபைல் வாகனங்களை ரசிக்கும் குடும்பத்தில் இருந்து வந்ததால், விதிதா சிங் தனது ஓவியங்களில் ஆட்டோமொபைல் வாகனங்களை ஹைலைட் படுத்தி காட்டுகிறார். குறிப்பாக, 60- 70 வருடங்களுக்கு முன் தனது குடும்பத்தினரிடம் இருந்த பழமையான கிளாசிக் கார்களை ஓவியம் தீட்டுவதில் இளவரசி விதிதா சிங் பர்வானி மிகுந்த ஆர்வம் கொண்டவராக உள்ளார்.
அவ்வாறு இளவரசி தீட்டிய ஓவியங்கள் தான் விரைவில் ஆட்டோமோட்டிவ் ராப்சோடி கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. இதன் மூலமாக, பார்வையாளர்கள் கடந்த காலங்களில் இருந்து கார்கள் வடிவமைப்பில் நாம் எவ்வளவு தொலைவிற்கு பயணித்து வந்திருக்கிறோம் என்பதை அறியலாம். இளவரசியின் ஓவியங்களில் ஆயில் கேன்வாஸ், வாட்டர் கலர் மற்றும் சார்கோல் போன்ற ஆட்டோமொபைல் சார்ந்த ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
இதுகுறித்து ஆர்ட் ஹவுஸ் கலையரங்கத்தின் கேலரி மேனேஜர் ஜெயந்தி ஷேகர் கூறுகையில், "கலை மற்றும் வாகன வடிவமைப்பு உலகங்களை ஒன்றிணைக்கும் தொலைநோக்க்கு கண்காட்சியான இளவரசி விதிதா சிங் பர்வானியின் 'ஆட்டோமோட்டிவ் ராப்சோடி'ஐ வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இளவரசி விதிதாவின் கலைப் படைப்புகள் கார்களின் அழகை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், வாகன பாரம்பரியம் மற்றும் புதுமைகளுடனான அவரது ஆழமான தொடர்பை பிரதிப்பலிக்கின்றன" என்றார்.
பெங்களூரின் 63 பேலஸ் சாலையில் அமைந்துள்ள ஆர்ட் ஹவுஸ் கேலரியில் ஆட்டோமோட்டிவ் ராப்சோடி கண்காட்சி ஆகஸ்ட் 9 முதல் 11 வரையில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் கண்காட்சி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட பின் 11ஆம் தேதி மாலை 6 மணி வரையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் பார்வையாளர்கள் கண்காட்சியை கண்டுக்களிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளவரசி விதிதா சிங் பர்வானியின் கலைப் படைப்புகள் ஏற்கனவே டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது பெங்களூரில் ஆர்ட் ஹவுஸ் கேலரியில் பொது மக்களின் பார்வைக்கு இளவரசியின் படைப்புகள் காட்சிக்கு வருகின்றன. வழக்கம்போல், இது இளவரசியின் சோலோ கண்காட்சி ஆகும். அதாவது, கண்காட்சியில் இளவரசியின் படைப்புகள் மட்டுமே இருக்கும்.


Click it and Unblock the Notifications








