உல்லாச கப்பல்களில் இந்த பொருட்களை கொண்டு செல்ல முடியாது... பறிமுதல் பண்ணீருவாங்க... ஏன் தெரியுமா?
உல்லாச கப்பல்களில் எந்த பொருட்களை எல்லாம் கொண்டு செல்ல முடியாது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல்களில் விடுமுறை நாட்களை கழிப்பது மனதில் உற்சாகத்தை ஏற்படுத்த கூடிய ஒரு நல்ல அனுபவம். உல்லாச கப்பல் அனுபவம் சிறப்பாக இருக்க என்னென்ன பொருட்களை எல்லாம் கொண்டு செல்ல வேண்டும்? என்பது தொடர்பான கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் உல்லாச கப்பல்களில் எதையெல்லாம் கொண்டு செல்ல கூடாது? என்பதை படித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஆம், உல்லாச கப்பல்களில் ஒரு சில பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பொருட்களை எல்லாம் நீங்கள் கொண்டு செல்ல முடியாது. அந்த பொருட்கள் என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். உங்கள் உல்லாச கப்பல் அனுபவம் சிறப்பாக அமைவதற்கு இந்த தகவல்கள் உதவும் என நம்புகிறோம்.

அயர்ன் பாக்ஸ்
உல்லாச கப்பல்களில் அயர்ன் பாக்ஸிற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அவற்றால் தீ விபத்து ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் இருப்பதுதான் இதற்கு காரணம். இருப்பினும் கிட்டத்தட்ட உலகின் அனைத்து உல்லாச கப்பல்களிலும் லாண்ட்ரி சேவை (Laundry Service) வழங்கப்படுகிறது. நீங்கள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

வீட்டு உபயோக பொருட்கள்
அயர்ன் பாக்ஸ்களை போலவே மேலும் ஒரு சில வீட்டு உபயோக பொருட்களாலும் தீ விபத்து ஏற்படலாம். எனவே அத்தகைய வீட்டு உபயோக பொருட்களுக்கும் உல்லாச கப்பல்களில் அனுமதி கிடையாது. இதில், இன்டக்ஸன் ஸ்டவ், டோஸ்டர்கள் மற்றும் காபி மேக்கர்கள் போன்றவை அடங்கும். உல்லாச கப்பல் நிர்வாகங்களின் கட்டுப்பாடுகளை மீறி இவற்றை உங்களால் கொண்டு செல்ல முடியாது.

மெழுகுவர்த்திகள்
ஒரு சிலர் உல்லாச கப்பல் பயணங்களின்போது மெழுகுவர்த்திகளை உடன் கொண்டு செல்வதையும் விரும்புகின்றனர். ஆனால் மெழுகுவர்த்திகளுக்கும் உல்லாச கப்பல்களில் அனுமதி கிடையாது. மேற்கண்ட இரண்டு அம்சங்களை போலவே, தீ விபத்து ஏற்படலாம் என்ற காரணத்தால்தான் மெழுகுவர்த்திகள் தடை செய்யப்பட்டுள்ளன.

பெரிய கத்தரிக்கோல்கள்
பொதுவாக சிறிய கத்தரிக்கோல்களுக்கு உல்லாச கப்பல்களில் அனுமதி வழங்கப்படுகிறது. முகத்தில் வளர்ந்துள்ள தாடியை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் தையல் வேலைகளுக்கும் பயன்படும் சிறிய கத்தரிக்கோல்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் 4 இன்ச்சிற்கும் அதிகமான நீளம் கொண்ட பிளேடுடன் கூடிய கத்தரிக்கோல்களை நீங்கள் கொண்டு சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும்.

பெரிய கத்திகள்
பெரிய கத்தரிக்கோல்களை போல், பெரிய கத்திகளுக்கும் உல்லாச கப்பல்களில் அனுமதி கிடையாது. தங்கள் விருந்தினர்கள் பெரிய கூர்மையான பொருட்களுடன் வருவதை உல்லாச கப்பல் நிர்வாகங்கள் விரும்புவதில்லை. அவற்றை எப்போது வேண்டுமானாலும் ஆயுதமாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதுதான் இதற்கு காரணம்.

வீல்கள் உடன் கூடிய ஷூக்கள்
ஒரு சில ஷூக்களுக்கு அடியில் 'வீல்கள்' வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நடப்பதற்கு பதிலாக சறுக்கி கொண்டே போகலாம். கிட்டத்தட்ட இது 'ஸ்கேட்டிங்' செய்வதை போன்றது. இப்படிப்பட்ட ஷூக்கள் உங்களிடம் இருந்தால், உல்லாச கப்பலில் போகும்போது அதை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விடுங்கள். இவற்றுக்கு உல்லாச கப்பல்களில் அனுமதி கிடையாது.

பெப்பர் ஸ்பிரே
இன்றைய காலகட்டத்தில் பெப்பர் ஸ்பிரேவை வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் வந்து விட்டது. தங்களின் தற்காப்பிற்கு பயன்படும் என்பதால் பலரும் பெப்பர் ஸ்பிரேவை கூடவே வைத்துள்ளனர். ஆனால் விருந்தினர்கள் தவறான நோக்கத்திற்காக அவற்றை பயன்படுத்தலாம் என்பதால், உல்லாச கப்பல் நிர்வாகங்கள் பெப்பர் ஸ்பிரேக்களை அனுமதிப்பதில்லை.

சைக்கிள்கள்
சைக்கிள்கள் உருவத்தில் பெரியவை. ஏராளமான பயணிகளுடன் சைக்கிள்களையும் ஏற்றி செல்வது சிரமமான காரியம். எனவே சைக்கிள்களுக்கும் உல்லாச கப்பல்களில் அனுமதி கிடையாது. எனினும் பல்வேறு துறைமுகங்களில் சைக்கிள் அல்லது பைக்குகளை வாடகைக்கு எடுத்து கடற்கரைகளை சுற்றி பார்க்கும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் சைக்கிளை கொண்டு செல்ல வேண்டியதில்லை.

கைத்துப்பாக்கி
கைத்துப்பாக்கிகளால் உல்லாச கப்பல்களில் பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக மது போதையில் இருப்பவர்களின் கையில் துப்பாக்கிகள் இருந்தால், நிலைமை விபரீதமாகி விடும். எனவே விருந்தினர்கள் தங்களுடன் கைத்துப்பாக்கிகளை கொண்டு வருவதையும், உல்லாச கப்பல் நிர்வாகங்கள் அனுமதிப்பது கிடையாது.


Click it and Unblock the Notifications