காஸ்ட்லீயான பென்ஸ் கார் வைத்திருப்பவர் செய்யும் செயலா இது? இதில், இன்ஸ்டாகிராமில் ட்ரோல் பதிவு வேற...
சாலை போக்குவரத்து விதிமுறைகளுக்கு எவரொருவரும் தகுந்த மரியாதை அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், சாலையில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலானவை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தினாலேயே நடக்கின்றன. உங்களது திறமைகளை காட்ட சாலை விளையாட்டு மைதானம் கிடையாது. இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை ஒருவர் மணிக்கு சுமார் 103கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டே, தன்னிடம் இருந்த நோட் புத்தகத்தை மொபைலில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். யார் இவர்? பின்னர் என்ன நடந்தது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புனேவில் சமீபத்தில், வெறும் 17 வயது மட்டுமே ஆன இளைஞன் குடிபோதையில் விலையுயர்ந்த போர்ஷே டைகன் காரில் அதிவேகமாக சென்று இரு உயிர்களை பலியாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தற்போதுதான் மெல்ல மெல்ல அமைதியாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் கொடுத்தனர்.

ஆனால், கண்டனம் தெரிவித்தவர்கள் அனைவரும் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்றால், இல்லை என்பதுதான் பதில். கடந்த வாரத்தில், கேரளாவில் பிரபலமான யூடியூபர் ஒருவர் டாடா சஃபாரி காரில் நீச்சல் குளத்தை உருவாக்கி அதில் குளித்துக் கொண்டே காரில் பயணம் செய்திருந்தார். அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது என்றாலும், இவ்வாறான நபர்கள் தொடர்ந்து வந்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அந்த வகையில், புனே போர்ஷே கார் விபத்தை கிண்டல் செய்யும் விதமாக பென்ஸ் காரை ஒருவர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக ஓட்டியுள்ளார். 17-வயது இளைஞனால் ஏற்பட்ட புனே போர்ஷே கார் விபத்து நாடு முழுவதும் வைரலானதற்கு முக்கிய காரணம், 2 உயிர்களை காவு வாங்கிய அந்த 17-வயது இளைஞனுக்கு விபத்து நடந்து வெறும் 15 மணிநேரங்களில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது.

குற்றவாளி 18 வயதிற்கும் குறைவானவர் என்பதால், வழக்கமான நீதிமன்றத்திற்கு பதிலாக சிறார் நீதி வாரியத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அந்த இளைஞனுக்கு, செய்த தவறை உணர்ந்து 300 வார்த்தைகளில் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும், போக்குவரத்து போலீசாருடன் 15 நாட்களுக்கு பணியாற்ற வேண்டும் மற்றும் குடிபோதையில் இருந்து மீழ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மிகவும் எளிதான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இது எல்லாம் விபத்து நடத்து அடுத்த 15 மணிநேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. இதற்கு பலரும் போர்கொடி தூக்கியதால், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த போலீசார், இளைஞனின் ஜாமீனை ரத்து செய்ததோடு பல உண்மைகளை பொது வெளிக்கு கொண்டுவந்தனர். இதன் விளைவாக, அந்த இளைஞன் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதெல்லாம் வேறுகதை. 2 பேரை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு, 300 வார்த்தைகளில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தால் போதுமானது என்கிற தீர்ப்பு கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.

அந்த வரிசையில் இந்த பென்ஸ் கார் டிரைவர், 300 வார்த்தைகளில் மன்னிப்பு கடிதத்தை தான் ஏற்கனவே எழுதி வைத்துள்ளதாகவும், இதனால் இப்போது நான் யார் மீது வேண்டுமானாலும் காரை ஏற்றலாம் எனவும் கிண்டல் செய்யும் விதமாக படங்களுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டா படங்களில், ஒன்றில் அவர் எழுதி வைத்துள்ள மன்னிப்பு கடிதத்தையும், மற்றொன்றில் அவரது மெர்சிடிஸ்-பென்ஸ் கார் 103kmph வேகத்தில் செல்வதையும் காணலாம்.
வேறொருவரின் தவறை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யும் விதமாக இந்த நபர் செய்திருப்பதும் ஒருவகையில் தவறு ஆகும். ஏனெனில், எழுதி வைத்துள்ள மன்னிப்பு கடிதத்தை காரை டிரைவ் செய்துக் கொண்டே போட்டோ எடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஸ்டேரிங் சக்கரத்தில் ஒரு கை மட்டுமே இருந்திருக்கும். போட்டோ எடுக்கும்போது முழு கவனமும் மொபைல் போனில் இருந்திருக்கும். விபத்து ஏற்படுவதற்கு அந்த ஒரு நொடி போதுமே.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அந்த 17 வயது இளைஞன் செய்தது பெரிய தவறுதான், அவனுக்கு ஆரம்பத்தில் தண்டனை வழங்கிய சிறார் நீதி வாரியத்தின் தீர்ப்பும் தவறுதான், அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், ஒருவரின் தவறை சுட்டிக் காட்டுவதற்காக நாமும் தவறை செய்வது எந்த விதத்தில் நியாயமாகும்? மேலும் இது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகவும் அமையலாம்.


Click it and Unblock the Notifications









