டூவீலர் டீலர்களுக்கு செக் வைத்த ஆர்டிஓ! இனி புது வண்டி வாங்கற அத்தன பேருக்கும் இதை குடுத்தே ஆகணும்!
இந்தியாவின் வளர்ச்சிக்கு சாலை விபத்துக்கள் (Road Accidents), பெரும் தடையாக இருக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் உயிர்களை இந்தியா பறி கொடுக்கிறது. இந்த உயிரிழப்புகள், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் இழப்பை ஏற்படுத்துவதில்லை. கூடவே நாட்டின் வளர்ச்சியிலும் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆம், சாலை விபத்துக்களால் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP - Gross Domestic Product) விகிதம் சரிவை சந்திக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாலை விபத்துக்கள் காரணமாக இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இழந்து வருகிறது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தார்.

எனவே இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் தரப்பில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களில் பலதரப்பட்ட பாதுகாப்பு வசதிகளை கட்டாயமாக்குதல் மற்றும் சாலைகளின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும்.
இந்த வரிசையில் டூவீலர் டீலர்களுக்கு (Dealers) தற்போது புதிய உத்தரவு ஒன்றை ஆர்டிஓ எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO - Regional Transport Office) பிறப்பித்துள்ளது. இதன்படி டீலர்கள் இனி ஒவ்வொரு டூவீலரை விற்பனை செய்யும்போதும், 2 ஹெல்மெட்களை கட்டாயமாக வழங்க வேண்டும்.

இதில், ஒன்று ரைடர் அணிந்து கொள்வதற்கானது. மற்றொன்று பில்லியன் ரைடர், அதாவது டூவீலரின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர் அணிந்து கொள்வதற்கானது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே வட்டார போக்குவரத்து அலுவலகம் தரப்பில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புனே வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் இந்த கட்டாய ஹெல்மெட் விதியை, ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து ஸ்டீல்பேர்டு ஹெல்மெட் (Steelbird Helmet) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜீவ் கபூர் (Rajeev Kapur) கூறியது பின்வருமாறு:
இது மிகவும் அவசியமான ஒரு நடவடிக்கை ஆகும். எனவே இந்த உத்தரவை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். அத்துடன் ஹெல்மெட் அணிவதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு ராஜீவ் கபூர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வெறும் உத்தரவுடன் நின்று விடாமல், டீலர்கள் தரப்பில் இது முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் பெரும்பாலான உத்தரவுகள் வெறும் செய்தியுடன் நின்று விடுகின்றன. அவை முறையாக அமலுக்கு வருவதில்லை.
அதேபோல் இந்த உத்தரவை இந்தியா முழுவதும் சீராக அமல்படுத்துவதும் மிகவும் அவசியம் ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், புதிய டூவீலர்களை வாங்கும்போது ஒரே ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அந்த ஹெல்மெட்டும் தரம் இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
அதாவது ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட்கள் (ISI-certified Helmets) என்ற பெயரில், போலியான மற்றும் தரமில்லாத ஹெல்மெட்கள் வழங்கப்படுகிறது என்பது புதிய டூவீலர்களை வாங்க கூடிய வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உண்மையில் இத்தகைய ஹெல்மெட்களை வழங்குவது என்பது வாடிக்கையாளர்களின் உயிருடன் விளையாடுவதை போன்றது.
எனவே புதிய டூவீலர்களை வாங்கும்போது, ரைடர் மற்றும் பில்லியனுக்கு தலா ஒன்று என மொத்தம் 2 ஹெல்மெட்கள் வழங்கப்படுவதை போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அவை தரமாக இருப்பதை உறுதி செய்வதும் அவசியம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








