மறைந்த பாடகரின் காரை போட்டிப் போட்டு வாங்கியவர் தானே இவரு? ரூ.4 கோடியில் அதுக்குள்ள இன்னொரு காருக்கு ஓனர்!
இந்தியாவின் குஜராத், பஞ்சாப் பகுதிகளில் இருந்து பல்வேறு பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவ்வாறான நிறுவனங்களுள் ஒன்றுதான், பஞ்சாப் சிந்த் பிரீமியம் டைரி (Punjab Sind Premium Diary) ஆகும். குறிப்பாக, பாலாடைக்கட்டிகள் மற்றும் லஸ்ஸி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் பிரபலமானதாக பஞ்சாப் சிந்த் பிரீமியம் டைரி நிறுவனம் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருப்பவர், ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் (Swaranjit Singh Bajaj) ஆவார். இவர் தனது தனித்துவமான கார் கலெக்ஷனுக்காகவும் பிரபலமானவராக உள்ளார்.
ஏனெனில், இவரிடம் இருப்பவை மொத்தமும் மஞ்சள் நிறத்திலான கார்கள் ஆகும். பொதுவாகவே, செல்வந்தர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப நிறைய வாகனங்களை வாங்கக்கூடியவர்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், பஞ்சாப் சிந்த் பிரீமியம் டைரி நிறுவனத்தின் இயக்குனரான ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் அவர்களும் அடிக்கடி புதிய கார்களை வாங்கக்கூடியவர் ஆவார்.

ஆனால், இவர் வாங்கும் கார்கள் எல்லாமே அவருக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் இருப்பது தனி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஒரு சில கார்கள் மஞ்சள் நிறத்தில் கிடைப்பதில்லை. அத்தகைய கார்களை எல்லாம் இவர் பிரத்யேகமாக மஞ்சள் நிறத்திற்கு மாற்றிக் கொள்கிறார். தற்போது ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் வாங்கியிருப்பது மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்தின் ஜி-கிளாஸ் (G-Class) என்கிற விலையுயர்ந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை ஆகும்.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஜி-கிளாஸ் காரின் ஏஎம்ஜி (AMG) வெர்சனான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (G63) காரை இவர் வாங்கியுள்ளார். ஜி-கிளாஸ் கார்களிலேயே ஏஎம்ஜி ஜி63 மாடல் தான் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். சுமார் ரூ.4.2 கோடியில் இதன் விலை உள்ளது. செல்வந்தர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை இந்தியாவிலேயே தற்போதைக்கு மஞ்சள் நிறத்தில் கொண்டிருக்கும் ஒரே மற்றும் முதல் கஸ்டமர், ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் ஆவார்.

இன்னொரு ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இது ஸ்வாரஞ்சித்திடம் உள்ள 2வது மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் கார் ஆகும். ஏற்கனவே சாதாரணமான ஜி-கிளாஸ் கார் ஒன்றை இவர் வைத்துள்ளார். சாதாரணமான ஜி-கிளாஸ் என கூறினாலும், அதன் விலையும் ரூ.2.5 கோடியை விட அதிகமாகும். இத்தகைய காரை ஏற்கனவே வைத்திருக்கும் ஸ்வாரஞ்சித் சிங் தனது குடும்பத்துடன் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை டெலிவிரி எடுத்துள்ளார்.
மும்பையில் உள்ள மெர்சிடிஸ் ஷோரூம் வாயிலாக காரை வாங்கி இருந்தாலும், கார் டெலிவிரி நிகழ்ச்சி ஆனது புனேவில் சாகான் பகுதியில் உள்ள மெர்சிடிஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலையில் நடைபெற்றது. இந்த ஏஎம்ஜி ஜி63 கார் வேறெங்கும் இல்லாமல் மெர்சிடிஸ் தொழிற்சாலையிலேயே மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

ஆனால் உண்மையில், இந்த மஞ்சள் நிற ஏஎம்ஜி ஜி63 கார் ஆனது புனே மெர்சிடிஸ் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது கிடையாது. ஆஸ்திரியா நாட்டில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது ஆகும். மெர்சிடிஸ் தொழிற்சாலைக்கு ஸ்வாரஞ்சித் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தங்களது விலையுயர்ந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.எஸ்63 (Mercedes-AMG GLS63), ஆடி ஆர்.எஸ்.க்யூ8 (Audi RSQ8) மற்றும் பி.எம்.டபிள்யூ எம்5 (BMW M5) கார்களில் வந்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது.
மேலும், மறைந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 (Toyota Land Cruiser LC200) காரையும் ஸ்வாரஞ்சித்தின் குடும்பத்தினர் மெர்சிடிஸ் ஆலைக்கு கொண்டுவந்துள்ளனர். சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலாவின் பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 காரை அவரது மறைவுக்கு பிறகு தொழிலதிபர் ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் தான் வாங்கினார் என்பது கூடுதல் தகவல்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் செயல்திறன்மிக்கவை ஆகும். அத்தகைய ஏஎம்ஜி கார்களுள் மிக விலையுயர்ந்த ஏஎம்ஜி ஜி63 என்கிற ஆஃப்-ரோடு எஸ்யூவி காரை தான் ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் அவர்கள் தற்போது வாங்கியுள்ளார். மஞ்சள் நிறத்தின் மீதான அவரது மோகம் இன்னும் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications









