தொடரி பட பாணியில் தானாக ஓடிய ரயில்! 84 கி.மீ நிக்காமல் ஓடிய பரபரப்பு சம்பவம்!
ஓட்டுனரே இல்லாமல் ரயில் ஒன்று சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் 84 கிலோ மீட்டர் தூரம் பயணித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ரயிலின் ஓட்டுனர் டீ குடிப்பதற்காக பிளாட்ஃபார்மிற்க்கு இறங்கிய நிலையில் ரயில் தானாக ஓடி உள்ளது. இந்த ரயிலை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு 84 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு கான்கிரீட் கலவையை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று காலை 7:10 மணிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சரக்கு ரயிலை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் கீழே இறங்கி டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரயில் தானாக கிளம்பி வேகமாக செல்ல துவங்கியது கண்ணிமைக்கும் நொடியில் ரயில் வேகம் எடுத்ததால் ரயிலை ஓடிச்சென்று அதன் ஓட்டுனர்களால் ஏறி சென்று நிறுத்த முடியவில்லை. ரயில் ஓடும் பாதை சரிவான பாதையாக இருந்ததால் ரயில் வேகம் எடுத்து ஓட துவங்கியது. மேலும் ரயிலில் அதிக எடை இருந்ததால் விரைவாக வேகம் எடுத்தது.
டீ குடிக்க இறங்கும் முன்பு ரயிலின் ஓட்டுநர்கள் சரியாக பிரேக்கையை பிடிக்கவில்லை எனவும் மேலும் சில முக்கியமான விதிமுறைகளை பின்பற்றாமல் அவர்கள் இன்ஜினில் இருந்து கீழே இறங்கினார்கள் எனவும் தெரிகிறது. இதன் காரணமாக ரயில் தானாக வேகம் எடுத்து ஓட துவங்கியது. இதையடுத்து இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.

உடனே ரயில்வே நிர்வாகமே பரபரப்புக்குள்ளானது அடுத்த அடுத்த ரயில் நிலையங்களில் இந்த ரயில் வரும் பாதைகள் எல்லாம் கிளியர் செய்யப்பட்டு விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. தொடர்ந்து ரயிலை நிறுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆங்காங்கே ரயில் டிராக்கில் மர சக்கைகளை வைத்து ரயிலில் வேகத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ரயிலில் அதிக அளவு எடை கொண்ட சரக்கு இருந்ததாலும் அந்த பகுதி இறக்கமான பகுதியாக இருப்பதாலும் ரயில் வேகம் அதிகமாக இருந்தது. சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தது. இருந்தாலும் ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு குறிப்பிட்ட ஒரு இடத்தில் ரயிலின் வேகம் குறைய வாய்ப்புள்ளது என்பதால் அந்த இடத்தில் ரயிலின் வீலுக்கு அருகே மரச்சக்கைகளை வைத்து ரயிலை நிறுத்த முயற்சி செய்தனர்.

மேலும் ரயிலில் வேகம் குறைந்த பிறகு மணல் மூடைகளை அடக்கி ரயிலை மொத்தமாக நிறுத்த முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திட்டமிட்டபடி ரயிலில் வேகம் குறைந்து மணல் மூடைகள் மீது ரயில் மோதி நின்றது. இது பஞ்சாப் மாநிலம் ஹோஸியார்பூர் என்ற பகுதியில் தான் ரயிலை நிறுத்த முடித்தது. ரயில் ஓட்டுநர் யாரும் இல்லாமல் தனியாக சுமார் 84 கிலோமீட்டர் வரை பயணம் செய்துள்ளது.
தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யார் மீது தவறி இருக்கிறது இதற்கு யாரெல்லாம் காரணம் என விசாரணை நடந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இது மட்டுமல்லாமல் தொடர்ந்து இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை நடந்து வருகிறது.
குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்டது சரக்கு ரயில் என்பதால் இதில் எந்த ஒரு பயணிக்கும் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. மேலும் ரயில் தனியாக ஆளில்லாமல் வருகிறது என்பதை உணர்ந்து ரயில்வே நிர்வாகம் துரிதமாக செயல்பட்டதால் அந்த டிராக்கில் எந்த ரயிலும் இல்லாத வகையில் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ரயில் 90கிமீ வேகத்தில் 5 ரயில் நிலையங்களை மிக வேகமாக நிற்காமல் கடந்துள்ளது. நல்லவேளையாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் விபத்து என்பது பல உயிர்களை காவு வாங்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஏராளமான மக்களின் உயிர் விபத்தில் போகும் என்பதால் ரயில் விபத்து என்பது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனி ரயில்வே நிர்வாகத்தில் நடந்தால் மக்களுக்கு ரயில் பயணத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









