20 மணி நேரம் தொடர்ந்து பறக்கும், உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் விரைவில் அறிமுகம்...
உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் விமானத்தை க்வான்டாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து லண்டன் வரை பயணிக்கும் இந்த விமானம் குறித்த தகவல்களை கீழே காணுங்கள்.

விமானங்களில் பயணிப்பது என்பது பலருக்கு பெரும் கனவு. விமானத்தில் பயணிக்கப் பலர் விரும்புவார்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் விண்ணில் பறந்து வருகிறது. விமான பயணம் என்பது ஒரு அனுபவம். தன் வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகில் நீண்ட தூரம் இடைநில்லாமல் பயணிக்கும் விமானம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு பறக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்தான். இது டேக் ஆனதிலிருந்து 18 மணி நேரம் 50 நிமிடங்கள் தொடர்ந்து பறந்து பின்னர்தான் லேண்ட் ஆகும். இது சுமார் 9500 மைல் தூரத்தைக் கடக்கிறது.

அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்வான்டாஸ் என்ற விமான நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரிலிருந்து லண்டனிற்கு இடைநில்லா விமானச் சேவையை கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. போயீங் டிரீம் லைனர் விமானத்தை இந்த வழித்தடத்தில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்ந்து 16 மணி நேரம் 45 நிமிடம் பயணிக்கும் விமானம் ஆகும்.

இந்நிலையில் க்வான்டாஸ் நிறுவனமே அடுத்ததாக உலகில் நீண்ட நேரம் இடைநில்லாமல் பயணிக்கும் விமானம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து இடைநில்லாமல் லண்டன் நகருக்குப் பறக்கும் விமானத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் அந்நிறுவனம் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து 40 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி Airbus A321XLRs என்ற விமானம் 20 எண்ணம் மற்றும் A220-300s ரக விமானம் 20 எண்ணம் என வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டு உலகில் நீண்ட நேரம் இடைநில்லாமல் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது.

அதன்படி வரும் 2025ம் ஆண்டு கடைசியில் இந்த விமானச் சேவை செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக Airbus A350-1000 ரக விமானத்தைப் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பயண தூரம் என்பது கிட்டதட்ட 10,000 மைல். இந்த தூரத்தை பெட்ரோல் நிரப்பக் கூட இடைநில்லாமல் பறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் மொத்தம் 238 பயணிகள் பயணிக்க முடியும். அதில் மொத்தம் 4 வகையான வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நீண்ட தூரப் பயணம் என்பதால் இந்த விமானத்தில் பயணிகள் கால் நீட்ட வசதி, பயணத்தின் போது நடைப் பயிற்சி செய்ய, ரிலாக்ஸ் ஆக எனப் பல வசதிகளைச் செய்து தரத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்ட தூரப் பயணம் என்பதால் பயணிகள் நீண்ட நேரம் அமர்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதனால் அவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, கால் வழி, கால் வீக்கம், ரத்தக் கட்டு போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க "wellbeing zone" ஒன்றை அமைக்கவுள்ளனர். அதற்காக அந்த விமானத்தின் ஒட்டு மொத்த கெபாசிட்டியில் 40 சதவீத சீட்டை குறைத்து இந்த இடத்தை டிசைன் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இந்த விமானத்தை 25 சதவீதம் குறைவான கார்பனை வெளியிடும் திறனுடன் கட்டமைக்கவும், சத்தம் குறைவாக வரும்படி வடிவமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு "Project Sunrise" எனப் பெயரிட்டுள்ளனர். புதிய உட்கட்டமைப்பில் வடிவமைக்கப்படும். இந்த விமானம் 2023ம் ஆண்டு தயாராகிவிடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

2023ம் ஆண்டே விமானம் தயாரானாலும் அதற்கான மற்ற ஏற்பாடுகள் எல்லாம் தயாராகி சோதனை ஓட்டங்கள் முடிந்து 2025ம் ஆண்டு கடைசியிலேயே இந்த விமானம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானம் செயல்பாட்டிற்கு வந்தால் உலகின் நீண்டநேரம் இடைநில்லாமல் பயணிக்கும் விமானம் இதுவாகதான் இருக்கும்.

தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானம்தான் இடைநில்லாமல் பயணித்து வருகிறது. அதிக நேரம் பயணிக்கும் விமானங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் உள்ளது. அடுத்ததாக க்வான்டாஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள், பின்னர் ஏர் நியூசிலாந்து விமானம், எமிரேட்ஸ், ஏர் இந்தியா, யுனைட்டெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் டாப் 10 பட்டியலில் உள்ளன.

இந்தியாவிலிருந்து அதிக நேரம் பயணிக்கும் விமானம் பெங்களூருவிலிருந்து, சான் பிரான்சிஸ்கோவிற்கு பயணிக்கும் ஏர் இந்தியா விமானம்தான் அதிக தூரம் பயணிக்கும் விமானமாக உள்ளது. இது 17 மணி நேரம் 40 நிமிடம் தொடர்ந்து பயணிக்கும் விமானம் ஆகும். சுமார் 8770 மைல் தூரத்தை இது கடந்து செல்கிறது.


Click it and Unblock the Notifications








