8 டன் எடை கொண்ட லாரியாக இருந்தால் என்ன... டொயோட்டா தயாரிப்புக்கு இதைவிட ஒரு ஆதாரம் தேவை இல்ல!!
டொயோட்டா (Toyota) வாகனங்களின் தரத்தை பறைச்சாற்றும் வகையில், சுமார் 8 டன் எடை கொண்ட டேங்கர் லாரி ஒன்று டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரை வெகுவாக கவர்ந்திருப்பது மட்டுமின்றி, டொயோட்டா வாகனங்கள் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
உலகின் வட துருவத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஏற்கனவே குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. அந்த நாடுகளில் பனி பொழிவும் துவங்கிவிட்டது. அதனை தொடர்ந்து, நம் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் குளிர், இயல்பு வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, இமயமலை தொடர்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

பனி பொழியும் பகுதிகளில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினம் ஆகும். அதுவும் மலைப்பிரதேச பகுதியில் பனி பொழிவிற்கு மத்தியில் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் ஆபத்தான சூழலில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். அத்தகைய பயண சூழலில், மிகவும் அனுபவமிக்கவர்களால் மட்டுமே பயமின்றி, எந்தவொரு பிரச்சனையுமின்றி வாகனம் ஓட்ட முடியும்.
அவ்வாறு அனுபவமில்லாத லாரி டிரைவர் ஒருவர் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஓர் மலைப்பிரதேச பகுதியில் லாரியுடன் சிக்கிக் கொண்டுள்ளார். பின்னர், அந்த லாரியை டொயோட்டா ஹிலக்ஸ் என்ற பிக்-அப் ட்ரக் வாகனத்தின் உதவியுடன் மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ டிசிவி எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த யுடியூப் சேனலை நடத்தி வருபவர் பெரும்பாலும் தனது ஹிலுக்ஸ் பிக்-அப் ட்ரக் வாகனத்தில் மலைப்பாதைகளில் மேற்கொள்ளும் பயணங்களை காட்சிப்படுத்தி பதிவிடுவது வழக்கம். அவ்வாறு, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷின்குலா கணவாய்க்கு இந்த நபர் சமீபத்தில் சென்றுள்ளார். இந்த கணவாய் ஆனது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.
இந்த கணவாய் பகுதியில், ஓர் மலை மீது இவர் தனது ஹிலக்ஸ் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, பனி குவியலில் சிக்கிக் கொண்டிருந்த மஹிந்திரா பொலேரோ 2-வீல்-டிரைவ் வாகனத்தை சிலர் கூடி நின்று மீட்க போராடிக் கொண்டிருப்பதை இவர் பார்த்துள்ளார். இதனால், தனது ஹிலக்ஸை நிறுத்தி அந்த மஹிந்திரா பொலேரோ வாகனத்தை சேற்றில் இருந்து மீட்டுக் கொடுத்துள்ளார்.

அதன்பின், ஓர் கொண்டை ஊசி வளைவில் டேங்கர் லாரி ஒன்று சிக்கிக் கொண்டு இருப்பதை கண்டவர், உடனே எதனை பற்றியும் யோசிக்காமல் லாரியையும் தனது ஹிலக்ஸ் வாகனத்தில் கயிற்றை கட்டி இழுத்துச் சென்றுள்ளார். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஏதேனும் உதவி கிடைக்காதா என அந்த டேங்கர் லாரி டிரைவர் கிட்டத்தட்ட 4 நாட்களாக அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்துள்ளார்.
பனி பொழிவினால் ஏற்பட்ட சேற்றில் லாரியின் பின் சக்கரங்கள் நன்கு சிக்கிக் கொண்டு இருந்துள்ளன. இத்தகைய சூழல் ஏற்படும் என அந்த லாரி டிரைவர் முன்னெச்சரிக்கையாக இல்லை என்பதை வீடியோவின் மூலம் அறிய முடிகிறது. அதாவது, இவ்வளவு பனி பொழிவில் லாரி ஓட்டியது அவருக்கு இதுவே முதல்முறையாம். இதனால், 4 நாட்களாக மிகுந்த பயத்துடன் இருந்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4 நாட்களாக பரீட்சையமில்லாத இடத்தில் அவ்வளவு பெரிய லாரி உடன் சிக்கிக் கொண்டு இருந்தது, உண்மையில் நினைத்து பார்க்கவே பயங்கரமாக உள்ளது. நல்லவேளையாக, இந்த டொயோட்டா ஹிலக்ஸ் டிரைவர் கடவுள் போல் வந்து அவரை காப்பாற்றியுள்ளார். இவ்வாறான அசாதாரணமான இடங்களில் வாகனம் ஓட்ட, உங்கள் வாகனத்தில் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் இருக்க வேண்டியது அவசியம். இந்த சிஸ்டம் டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications









