எவ்வளவு பெரிய அரசியல்வாதி... ஒரு கார் கூட சொந்தமாக இல்லையா? சந்தேகம் பெருசா கிளம்புதே!!
உலகின் மிக முக்கியமான இந்திய நாடாளுமன்ற தேர்தல் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியாகிவிட்டன. இருப்பினும், யார் ஆட்சி அமைக்க போவது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் இண்டியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, பாஜக கூட்டணிக்கு மிகுந்த சவாலாக விளங்குகிறது. இண்டியா கூட்டணிக்கு மக்கள் இந்த அளவிற்கு அளித்துள்ள பேராதரவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பங்கு இன்றியமையாதது ஆகும். சரி... ராகுல் காந்தியிடம் என்னென்ன கார் & பைக்குகள் உள்ளன என்று எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில் ராகுல் காந்தி தனது சொத்து மதிப்புகள் குறித்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த போது, தன்னிடம் எந்த காரும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். இது அந்த சமயத்தில் நாடு தழுவிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தன்னிடம் 20 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன என அப்போது ராகுல் காந்தி கூறிய போதிலும், தன்னிடம் சொந்தமாக கார் எதுவும் இல்லை என கூறியது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில், அகில இந்திய அளவில் பரந்து விரிந்துள்ள கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படுபவரிடத்தில் ஒரு கார் கூட இல்லை என்பதை நிறைய பேரால் நம்ப முடியவில்லை. இதனால், ராகுல் காந்தி மீது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகமும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதற்கு ஒரு காரணம் எனலாம். தான் ஒரு கார் பிரியர் கிடையாது என ராகுல் காந்தி பேட்டி ஒன்றில் தெரிவித்தது இப்போது நினைவிற்கு வருகிறது.
ஆனால் அதே பேட்டியில், தனக்கு கார்கள் அவ்வளவாக பிடிக்காது என்றாலும், பைக் ஓட்டுவது பிடித்தமான பொழுதுப்போக்கு என ராகுல் காந்தி கூறியிருந்தார். பாரத ஒற்றுமை பயணமாக ராகுல் காந்தி கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரையில் நடை பயணம் மேற்கொண்ட சமயத்தில், லடாக்கில் உள்ள பிரபலமான பாங்காங் ஏரிக்கு சில பைக் ரைடர்களுடன் சேர்ந்து கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் இவர் சென்றது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

ஆனால், பாதுகாப்பு காரணங்களினால் அதன்பின் அந்த கேடிஎம் பைக்கை ஓட்டவில்லை எனவும், அது எனது கேரேஜில் ஒரு ஓரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் ராகுல் காந்தி பின்னர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். பாரத ஒற்றுமை பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு சில தொழிலாளர்களை அவர்களது வேலை இடத்திற்கு சென்று ராகுல் காந்தி சந்தித்தார்.
அப்போதும் கூட, கார் மெக்கானிக் ஷாப்பிற்கு செல்லாமல், டெல்லியில் உள்ள பைக் மெக்கானிக் ஷாப் ஒன்றிற்கு ராகுல் சென்றார். அங்கிருந்த மெக்கானிக்குகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, பின்னர் அவர்களுடன் சேர்ந்து பழுதிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை பழுது பார்த்தார். தற்போதைய மாடர்ன் 4-ஸ்ட்ரோக் பைக்குகளை காட்டிலும், ராகுல் காந்திக்கு பழமையான 2-ஸ்ட்ரோக் பைக்குகள் என்றால் தனி பிரியம் உண்டு.

இதன் காரணமாக, ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட யமஹா ஆர்டி350 தனக்கு பிடித்தமான பைக் என ராகுல் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். கார் தனக்கு பிடிக்காது என கூறினாலும், பாதுகாப்பு காரணங்களினால் கார்களையே தனது பிரதான போக்குவரத்துகளுக்கு ராகுல் காந்தி பயன்படுத்துகிறார். குறிப்பாக, வெள்ளை நிறத்திலான லேண்ட் க்ரூஸர் காரில் தான் ராகுல் காந்தியை அதிகளவில் பார்த்திருக்கிறோம்.
இதுமட்டுமின்றி, லெக்ஸஸ் எக்ஸ்.எல் என்கிற லக்சரியான எஸ்யூவி காரும் ராகுல் காந்தியின் பயன்பாட்டில் இருந்துள்ளது. இவருக்கு கொஞ்சம் பிடித்தமான கார் என்றால், அது டாடா சஃபாரி ஆகும். ஆரம்ப கால அரசியல் பயணங்களின்போது கருப்பு நிறத்திலான டாடா சஃபாரி காரில் ராகுல் காந்தி பயணம் செய்திருப்பதை இப்போதும் படங்களிலும், வீடியோக்களிலும் காண முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காந்தி குடும்பத்தினர் டாடா சஃபாரி கார்களை புல்லட் ப்ரூஃப் கார்களாக பயன்படுத்துகின்றனர். இந்த அளவிற்கு செல்வ, செழிப்பான குடும்பத்தில் வாழும் ராகுல் காந்தியிடம் சொந்தமாக கார் இல்லை என்பது 10 வருடங்கள் கழிந்த போதிலும் இப்போதுவரையிலும் ஆச்சிரியமாக உள்ளது. கார்கள் பிடிக்காமல், பைக்குகள் பிடித்திருப்பது ராகுல் காந்தியின் எளிமையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









