ராகுல் காந்திக்கு தெரியாத வேலை என்ன தாங்க இருக்கு? இப்போது விசிட் எந்த மாநிலத்தில் தெரியுமா?
ஹரியானா மாநிலம், சோனிபட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை நேரில் சந்தித்தத்துடன், அவர்களது டிராக்டரை இயக்கி அசத்தியும் உள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களையும், இதுகுறித்த கூடுதல் விபரங்களையும் இனி பார்க்கலாம்.
அடுத்த 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, தற்போதைய எதிர்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ஒவ்வொரு காயையும் கவனத்துடன் நகர்த்தி வருகிறது. குறிப்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்கள் மத்தியில் இன்னும் நெருக்கமாக வேண்டும் என கட்சி விரும்புகிறது.

இதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் பாரத் ஜோடா யாத்ரா என்கிற பெயரில் கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரையில் ராகுல் காந்தி அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டதை பார்த்திருப்பீர்கள். நடைப்பயணம் நிறைவுப்பெற்ற போதிலும், மக்களை நேரடியாக அவர்களது இடத்திற்கே சென்று சந்திப்பதை ராகுல் காந்தி நிறுத்தவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு கூட, டெல்லியில் மெக்கானிக்குகள் சிலரை அவர்களது மெக்கானிக் கடையில் வைத்து ராகுல் காந்தி சந்தித்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, ஹரியானா மாநிலம், சோனிபட்டில் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது நிறை, குறைகளை ராகுல் காந்தி அவர்கள் கேட்டறிந்தார். டெல்லியில் இருந்து சிம்லாவிற்கு செல்லும் வழியில் இடையில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.

அந்த வரிசையில், சோனிபட்டின் மடினா கிராம விவசாயிகளை இன்று (ஜூலை 8) காலை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர், அவர்களுடன் இணைந்து வயலில் நாட்டு நட்டது மட்டுமின்றி, விவசாயி ஒருவரின் டிராக்டரையும் விவசாய நிலத்தில் ஓட்டி பார்த்துள்ளார். இது அங்கிருந்த விவசாயிகளை மட்டுமின்றி, ராகுல் காந்தி உடன் வந்தவர்களையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது.
இதுகுறித்து மடினா கிராமத்தை சேர்ந்த விவசாயி சஞ்சய் குமார் என்பவர் பேசுகையில், "வரிசையாக சென்ற கார்கள் ஆச்சரியமளிக்கும் விதமாக திடீரென தனது வயல்வெளிக்கு அருகே வந்த போது நின்றன. அதில் ஒரு வாகனத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியே வந்தார். ஆரம்பத்தில் நெற்கன்றுகளை நடவு செய்யும் தொழிலாளர்களால் ராகுல் காந்தியை அடையாளம் காண முடியவில்லை.

அவர் தனது பணியாட்களுடன் வயல்வெளியில் நடந்து வந்தபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். நாங்கள் அவருக்கு காலை உணவை வழங்க, அவர் எங்களது பிரச்சனைகளை கேட்டறிந்தார். டிராக்டரையும் ஓட்டினார்" என்றார். சோனிபட்டில் ஒரு சிறிய கிராமத்தில் தலைவர் ராகுல் காந்தி இருப்பதை அறிந்த அந்த தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இந்துராஜ் நர்வால் மற்றும் மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் நேரடியாக மடினா கிராமத்திற்கு வந்தனர்.
ராகுல் காந்தியை தங்களது சட்டமன்ற தொகுதியில் கண்ட மகிழ்ச்சியில் திழைத்து இருந்த எம்.எல்.ஏ ஜாக்பிர் மாலிக் பேசுகையில், "தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் பிரச்சனைகளை அறிய முயல்பவர், தலைவர்" என பெருமிதத்துடன் கூறினார். அதேநேரம், ராகுல் காந்தியின் இந்த செயலை மற்ற கட்சி அரசியல் தலைவர்கள் கிண்டலடிக்கவும் மறக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவை எல்லாம் அரசியலுக்காகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் ராகுல் காந்தி செய்கிறார் என கடந்து செல்ல முடியவில்லை. ஏனெனில், தற்போது சோனிபட்டில் ஓர் சிறிய கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து இருப்பது எல்லாம் நிச்சயமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை. இத்தகைய செயல்கள் யாவும் ராகுல் காந்தியின் தூய்மையான மனதை வெளிக்காட்டுவதாகவே உள்ளன.


Click it and Unblock the Notifications









