கார் உற்பத்தி ஆலையையும் விட்டு வைக்கல... இவர் கால் தடம் பதியாத இடம் எதுதான் இருக்கு!
காங்கிரஸ் (Congress) தலைவரும், இந்திய மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி (Rahul Gandhi) இன்று (டிச.17) ஜெர்மனியின் முனிச் (Munich) நகரில் உள்ள புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்று, பிஎம்டபிள்யூ வெல்ட் மற்றும் பிஎம்டபிள்யூ ஆலையைச் சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது, பல்வேறு பிஎம்டபிள்யூ கார்களையும், மோட்டார்சைக்கிள்களையும் ராகுல் காந்தி உன்னிப்பாக ஆய்வு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது .
காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய 450சிசி மோட்டார்சைக்கிளைக் கண்டு ராகுல் காந்தி மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பொறியியல் திறனைக் காண்பது ஒரு "பெருமைக்குரிய தருணம்" என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், ராகுல் காந்தி இந்தியாவின் உற்பத்தித் துறை குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பதிவில், "உற்பத்தி என்பது ஒரு வலுவான பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தி சரிந்து வருகிறது. வளர்ச்சியை அதிகரிக்க, சரியான உற்பத்தி சூழல் அமைப்புகளை உருவாக்கி நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும், அதிக தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளது.
ராகுல் காந்தி இந்த வாரம் முழுவதும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தங்கவுள்ளார். அங்கு இன்று நடைபெறும் ஒரு பெரிய இந்திய வெளிநாட்டுக் காங்கிரஸ் (IOC) நிகழ்வில் பங்கேற்கிறார். இதற்கிடையில்தான் அவர் தனது சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக ஜெர்மனியில் தோன்றிய பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தலைமையகத்தையும், மேம்பட்ட ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார்.

அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எம்-சீரிஸ் (M-Series), எலெக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes), பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 (iX3), ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார் மாடல்கள், பழமையான இத்தாலிய பாணியிலான 3 சக்கரங்களை கொண்ட பிஎம்டபிள்யூ ஐசெட்டா (Isetta) மற்றும் மேக்ஸி ஸ்கூட்டர்கள் (Maxi Scooters) உள்ளிட்ட பல வாகனங்களை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
மேலும், புதிதாக வெளியீடு செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் (F450 GS) மோட்டார்சைக்கிளையும் அவர் பார்வையிட்டார். இந்த பார்வையிடலின் போது, பாரம்பரிய மற்றும் நவீன போக்குவரத்து தீர்வுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் புதுமையின் கலவை குறித்த நுண்ணறிவுகளை ராகுல் காந்தி அறிந்துக் கொண்டார்.

பின்னர் இந்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்ட ராகுல், "அற்புதமான அனுபவம், 450சிசி பைக்கைக் கண்டது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்தியக் கொடி இங்கு பறப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார். பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் ஆனது டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள ஒசூர் ஆலையில் பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்யும் பைக் ஆகும்.
அட்வென்ச்சர் பயணிகளுக்கான இந்த பிஎம்டபிள்யூ பைக் இந்திய சந்தையில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும், அண்மையில் நடந்த EICMA 2025 கண்காட்சியில் இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பிஎம்டபிள்யூ தனது உலகளாவிய மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கையை விரிவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்பதற்கு இது சான்றாகும்.

பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக், புதியதாக உருவாக்கப்பட்ட 450சிசி, இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 48 பிஎஸ் இயக்க ஆற்றலையும், 43 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது. எளிமையாக கியர்களை மாற்றுவதற்காக இந்த என்ஜின் ஆனது குயிக்-ஷிஃப்டர் புரோ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பவர்டிரெய்ன் சிஸ்டம் ஆனது டிவிஎஸ் நிறுவனத்துடனான தொடர்ச்சியான கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜெர்மனியின் நீண்ட கால வரலாறு கொண்ட பிஎம்டபிள்யூ பிராண்ட் ஏற்கனவே உலகம் முழுக்கவே பிரபலமானதாக உள்ளது. அப்படியிருக்கையில், தற்போது இந்தியாவின் முக்கிய அரசியல்வாதியான ராகுல் காந்தி பிஎம்டபிள்யூவின் சர்வதேச தலைமையகத்திற்கும், தொழிற்சாலைக்கும் நேரில் சென்றிருப்பது இந்த ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு மேலும் விளம்பரமாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இதன் காரணமாக பிஎம்டபிள்யூவின் வணிகம் மேலும் மேம்படலாம்.


Click it and Unblock the Notifications









