அக்டோபர் மாதம் வருகிறது ஏழைகளுக்கான வந்தே பாரத் ரயில்! சென்னையில் தான் இதையும் ரெடி பண்ணுறாங்க!
ஏசி இல்லாத சாதரண் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் தயாரிப்பு சென்னை ஐசிஎஃப்-ல் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் இந்த ரயில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைகளுக்கான அதிவேக ரயிலாக இந்த சாதரண் வந்தே பாரத் ரயில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கான தனி வரவேற்பு இருக்கிறது. அதிக சொகுசு வசதிகள் மற்றும் அதிக வேகத்தில் பயணிக்க கூடிய ரயிலாக வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயிலுக்கு இணையாக இந்த ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்போது படிப்படியாக ஒவ்வொரு நகரங்களையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் விற்கும் சென்னையில் ஈரோடு வழியாக கோயம்புத்தூருக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக விரைவில் சென்னையிலிருந்து மதுரை, திருச்சி வழியாக திருநெல்வேலிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலும் சென்னை டூ விஜயவாடா ரூட்டில் ஒரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் அறிமுகமாக உள்ளன.
இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த வந்தே பாரத் ரயில் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் குறைந்த விலையில் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க சாதரண் வந்தே பாரத் ரயில் என்ற ஏசி அல்லாத புதிய வந்தே பாரத் ரயிலை உருவாக்க திட்டமிட்டனர். இது குறித்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த ரயிலும் சென்னை ஐசிஎஃப் -ல் தான் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி தற்போது சென்னை ஐசி எஃப்-ல் இந்த ஏசி இல்லாத சாதரண் வந்தே பாரத் ரயிலை உருவாக்கும் பணி துவங்கிவிட்டது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ஏசியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலில் ஒரு சில மாற்றங்களை செய்து இந்த சாதரண் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான இன்ஜின்கள் எல்லாம் சித்தரஞ்சன் ஆலையில் வைத்து தயாரிக்கப்படுகிறது.
இந்த சாதரண் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பொருத்தவரை 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் மூன்றாம் வகுப்பு ஏசி பிரிவில் 12 பெட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பெட்டி மற்றும் சரக்கு பெட்டி என மொத்தம் 22 பெட்டிகளுடன் இந்த வந்தே வாரத்தில் தயாரிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக இரண்டு பெட்டிகள் மட்டும் தயாரிக்கப்பட்டு அது வரும் அக்டோபர் மாதம் இந்தியாவின் முதல் சாதரண் வந்தே பாரத் ரயிலாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் படிப்படியாக அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட்டு வரும் அதே ரூட்டில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ரயில்கள் எல்லாம் அந்தியோதயா வந்தே பாரத் என்ற பெயரில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வரிசையாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரயில் கிளம்பும் நேரத்தில் நேரடியாக கவுண்டருக்கு சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி பயணிக்கலாம்.
இந்த ரயில் நீண்ட தூர நகரங்களை இணைக்கும் வகையில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள நகரங்களை இணைப்பதன் மூலம் அதிகமான மக்கள் இந்த ரயிலால் பயன்பெறுவார்கள். இந்த ரயில் வேகத்தில் எந்தவிதமான குறையும் இல்லாமல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏழைகளும் இனி அதிக வேகத்தில் பயணிக்க முடியும் என்பதை இந்திய ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அதன் டிக்கெட் விலை மிக அதிகமாக இருப்பதால் பலர் அதில் பயணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு அதிவேகப் பயணம் சாத்தியமில்லை என்ற சூழ்நிலை இனி மாறி இந்த சாதரண் வந்தே பாரத் ரயிலால் இனி ஏழைகளும் வேகமாக ரயில்களில் பயணிக்க முடியும் என்ற நிலை உருவாகப் போகிறது.


Click it and Unblock the Notifications








