இனி ரேபிடோ பைக் டாக்ஸிக்கு ஆப்பு! ஆணி வேரிலேயே கை வைத்த அரசு! இது நடக்கப்போறத பாருங்க!
தமிழகத்தில் ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தமிழக அரசு வாதிட்டுள்ளது. பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் தமிழக அரசு இந்த புதிய நகர்வை கையில் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி தனிநபர் வாகனங்களை கமர்சியல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறைக்கு மாறாக இந்தியாவில் பைக் டாக்ஸி செயலிகள் செயல்பட்டு வருவதால் அந்த செயலைகளையும் முடக்க காவல்துறை முடிவு செய்தது.

இதை எடுத்து ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் ஆப்களை கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்ய சென்னை மாநகர காவல் துறை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாநகர காவல் துறையின் பரிந்துரையில் தவறில்லை என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரேபிடோ நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு விசாரணையில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஒரு புதிய உத்தரவை போட்டது.
அதில் சென்னை மாநகர காவல் துறை, செயலிகளை கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை நிறுத்தம் செய்து வைத்தது. இதுகுறித்து தமிழக அரசு விதிமுறைகளை வகுக்கும் வரை சென்னையில் ரேபிடோ சேவைகளை தொடர உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தரப்பில் ஒரு முக்கியமான வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அதன்படி டெல்லி மாநிலத்தில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலை சமர்ப்பித்த தமிழக அரசு சென்னையிலும் பைக் டாக்ஸிகள் ஆப்களை நீக்க காவல்துறை பிறப்பித்த பரிந்துரை மீதான தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து பதில் அளிக்க ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
பைக் டாக்ஸிகளுக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் டெல்லியில் தடை விதித்துள்ளதால் அதை அடிப்படையாக வைத்து தமிழகத்திலும் பைக் டாக்ஸிகளுக்கான தடை வர வாய்ப்புகள் உள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தில் ரேபிடோ உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனிநபர் பைக் வாங்கி அதில் பைக் டாக்ஸிகளை நடத்துவது சட்டப்படி குற்றம் தான் என்றாலும் இப்படியான சேவைகளுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதைப் புரிந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் இந்த பைக் டாக்ஸிகளுக்காக போதுமான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








