அவமானப்படுத்தியவர்களை பழிக்கு பழி வாங்கிய தரமான சம்பவம்... இது ரத்தன் டாடா ஸ்டைல்!
ரத்தன் டாடா இந்தியாவின் ஒரு முக்கியமான தொழிலதிபராக மட்டுமல்லாமல், இந்த உலகின் எதிர்காலத்திற்கான விதைகளை விதைத்து சென்றவராக உள்ளார். ரத்தன் டாடாவின் தாக்கம் தொழில்துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களிலும் பரவி உள்ளது. இப்படிப்பட்ட ஒருவர், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை எப்படி கட்டமைத்தார்? என்ற விரிவான விபரங்களைதான் இங்கே நாம் காண போகிறோம்.
புதுமையான வாழ்வு: ரத்தன் டாடா கடந்த 1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்தார். அவரது பெற்றோர்களின் பிரிவுக்குப் பிறகு, அவரது பாட்டி நவாஜ்பாய் டாடாதான் அவரை வளர்த்தார். மும்பையில் உள்ள கதீட்ரல், ஜான் கானான் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் அவர் படித்தார்.

பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ரிவர் டேல் கண்ட்ரி பள்ளியிலும் படித்தார். பின்னர் கார்னல் பல்கலைக்கழகத்தில் 1962ம் ஆண்டு ஆர்க்கிடெக்சர் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1975ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை குறித்த ஒரு படிப்பையும் படித்து முடித்தார்.
ரத்தன் டாடா கடந்த 1961ம் ஆண்டு முதல் முறையாக டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில் அவர் பணியாற்றினார். அவருக்கு உலகின் மிகப் பிரபலமான ஐபிஎம் நிறுவனத்தில் வேலை கிடைத்தபோதும் கூட, தொடர்ந்து தனது குடும்ப தொழிலையே கவனிக்க விரும்பினார்.

அவர் கடந்த 1991ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பதவியை ஏற்றார். அப்போது முதல் டாடா நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அவரது தலைமையின் கீழ் சர்வதேச அளவுக்கு டாடா நிறுவனம் வளர்ச்சி அடைந்தது. தற்போதைய நிலையில் அந்நிறுவனம் 100 நாடுகளில் ஆண்டுக்கு 165 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான வர்த்தகத்தை செய்து வருகிறது.
ரத்தன் டாடாவிற்கு விமானத்தில் பறப்பது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஃபால்கான் எஃப்-16 என்ற விமானத்தில் பறந்த முதல் இந்தியர் இவர்தான். அவருக்கு கார்கள் மீதும் அதிகமான ஆர்வம் இருந்தது. அவரிடம் டாடா நானோ முதல் ஃபெராரி மற்றும் லம்போர்கினி ஆகிய நிறுவனங்களின் கார்களும் கூட இருந்தன. ஆனால் ரத்தன் டாடா எப்போதும் எளிமையாக இருப்பதையே விரும்புவார்.

உலகளாவிய விரிவாக்கம்: இவரது தலைமையில்தான் டாடா குழுமம் சர்வதேச அளவில் தனது தொழிலை விரிவுபடுத்தியது. இதனால் அந்த நிறுவனத்திற்கு பெரும் லாபம் கிடைத்த நிலையில், அந்த லாபத்தை எல்லாம் இவர் சமூகத்திற்காக செலவு செய்ய முடிவு செய்தார். கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு செலவுகளை செய்தார். அத்துடன் தான் படித்த ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூலுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கி டாடா ஹாலை ஏற்படுத்தி கொடுத்தார். இனி இவர் ஆட்டோமொபைல் துறையில் செய்த முக்கிய சாதனைகளை பற்றி காணலாம்.
டாடா இண்டிகா தேசத்தின் பெருமை: 1998ம் ஆண்டு ரத்தன் டாடா இண்டிகா என்ற முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் காரை அறிமுகப்படுத்தினார். இந்த கார் அறிமுகமாகும்போது பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தன. இந்த விமர்சனங்களை எல்லாம் வைத்து, மேம்படுத்தப்பட்ட இண்டிகா வி2 காரை ரத்தன் டாடா அறிமுகம் செய்தார்.
டாடா இண்டிகா வி2 கார், மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. ஆண்டுக்கு 1,44,000 கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை, கடந்த 2004ம் ஆண்டில் இண்டிகா வி2 எட்டியது. இந்திய இன்ஜினியரிங் மூளை எவ்வளவு பெரிய சாதனைகளை செய்யும்? என்பதை இதன் மூலமாக அவர் நிரூபித்து காட்டினார்.
டாடா நானோ: கடந்த 2008ம் ஆண்டு டாடா நானோ காரை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் ஒரு கார் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டாடா நானோ அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் விலை குறைவான கார் என்ற பெருமையுடன் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது. சுமார் ரூ1லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகி வந்தது. விமர்சனங்களை சந்தித்தாலும் கூட, குறைந்த விலையில் இந்த காரை அறிமுகப்படுத்தியதற்கான முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தது.
ஜாக்குவார் லேண்ட்ரோவர்: ரத்தன் டாடா கடந்த 1998ம் ஆண்டு ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன், டாடா நிறுவனத்தின் பயணிகள் கார் பிரிவை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சமயத்தில் ஃபோர்டு நிறுவன தரப்பிலிருந்து பேசியவர்கள், "உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. நீங்கள் ஏன் பயணிகள் காரை தயாரிக்கும் பிரிவை துவங்கினீர்கள்" என கேட்டு அவமானப்படுத்தினர். மனம் தளராத ரத்தன் டாடா, ஃபோர்டு நிறுவனம் சொன்னது தவறு என உணர வைக்க விரும்பினார்.
அதிலிருந்து சுமார் பத்து ஆண்டுகள், அதாவது கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் ஃபோர்டு நிறுவனம் நிதி பற்றாக்குறையுடன் தள்ளாடியது. அப்போது டாடா நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து சொந்தமாக வாங்கியது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, ஃபோர்டு நிறுவன தலைவரான பில் ஃபோர்டு டாடா நிறுவனம் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை வாங்குவது அந்நிறுவனத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவி என பேசினார்.
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை வாங்கியது டாடா நிறுவனம் எவ்வளவு பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை காட்டுவதாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் ஒரு சம்பவமாகவும் அமைந்திருந்தது.
எலெக்ட்ரிக் வாகனம்: இது மட்டுமல்லாமல் டாடா நிறுவனம் நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் அளித்தது. ரத்தன் டாடா கடந்த 2021ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிகமாக முதலீடு செய்ய முடிவு செய்தார். இதன் மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன செக்மெணட்டில் கடந்த 2021ம் ஆண்டே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 71% சந்தை பங்கை கொண்டிருந்தது. உலகம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வரும் நிலையில் எதிர்காலத்திற்கான விதையை ரத்தன் டாடா விதைத்து சென்றுள்ளார்.
பாதுகாப்பு முக்கியத்துவம்: ரத்தன் டாடாவின் தலைமையில்தான் டாடா நிறுவனம் தயாரித்த நெக்ஸான் கார் குளோபல் என்சிஏபி சோதனையில் கடந்த 2018ம் ஆண்டு, 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் இந்திய கார் என்ற பெயரை பெற்றது. இது இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறையின் பாதுகாப்பு தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடாவின் வாழ்க்கையும், பணிகளும் பல்வேறு நபர்களை ஈர்த்துள்ளது. அவரது தலைமைத்துவம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் எல்லாம், டாடா குழுமத்தை மட்டும் வளர்ச்சி அடைய செய்யவில்லை. மாறாக ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உலகையே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. எதிர்கால தலைமுறைக்கு இவர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். புதுமையையும், வெற்றியையும் அவர்கள் பெறுவதற்கு ரத்தன் டாடா போட்டு சென்ற விதை நிச்சயம் பெரிய அளவில் விருட்சமாக வளரும்


Click it and Unblock the Notifications









