மனுஷன் என்ன எளிமையா வாழ்ந்திருக்காரு!.. நாம மட்டும் இல்ல இந்த கார்களும் அவரு இல்லாதத நினச்சு அழும்!
டாடா குழுமம் (Tata Group) எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட ஓர் ஜாம்பவான் தற்போது நம்முடன் இல்லை என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பேரிடியான தகவலாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா, தன்னுடைய 86 ஆவது வயதில் காலமானார். இவர் கார் தயாரிப்பில் மட்டுமில்லைங்க, கார்களை நேசிப்பதிலும் மிகப் பெரிய நேசகராகவும் இருந்திருக்கின்றார். அதேவேளையில், இன்றைய கால பணக்காரர்களைப் போல அவர் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர கார்களை மட்டுமே அவர் பயன்படுத்தவில்லை.
வழக்கமான மற்றும் மிகவும் விலை குறைவான கார்களையும் அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதனால்தான் இவரை பலரும் எளிமையின் அடையாளம் என்கின்றனர். அப்படி என்ன மாதிரியான கார் மாடல்களை அவர் பயன்படுத்தினார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஃபெர்ராரி கலிஃபோர்னியா (Ferrari California): ரத்தன் டாடா பயன்படுத்திய அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், ஃபெர்ராரி கலிஃபோர்னியா தற்போது உலகின் எந்த நாட்டிலும் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் 4.3 லிட்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 490 பிஎச்பி மற்றும் 504 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரத்தன் டாடா இந்த கார் மாடலில் அவ்வப்போது மும்பை நகரத்தி முக்கிய சாலைகளில் காட்சி தந்து உள்ளார் என்பது கவனிக்கத்தகுந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் 500 எஸ்எல் (Mercedes-Benz 500 SL): ரத்தன் டாடா வேற்று நிறுவனங்களின் தயாரிப்புகளின் மீதும் அதிகம் அன்புமிக்கவர் என்பதற்கு சான்றாக அவரின் இந்த கார் மாடல் இருக்கின்றது. இந்த காரில் அவர் வலம் வந்த நாட்கள் பல. மேற்கூரை இல்லா இந்த கார் மாடலில் ரத்தன் டாடா பயணிக்கும் வீடியோ தற்போதும் புகைப்படங்களை இப்போதும் பார்க்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இது கன்வெர்டபிள் கார் மாடல் ஆகும். ஆம், தேவை என்றால் மேற்கூரையை விரித்துக் கொள்ளவும் முடியும். 2 கதவுகளை மட்டுமே அதுக் கொண்டிருக்கும். மேலும், இது ஓர் இடது கை பக்கம் டிரைவிங் வசதிக் கொண்ட கார் மாடலும் ஆகும். இந்த காரில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 306 பிஎச்பி வரையிலான ஆற்றலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கடில்லாக் எக்ஸ்எல்ஆர் கன்வர்டபிள் (Cadillac XLR convertible): ரத்தன் டாடா பயன்படுத்திய மற்றுமொரு கன்வெர்டபிள் கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த காரில் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்த 4.6 லிட்டர் நார்த்ஸ்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காரையே ரத்தன் டாடா பயன்படுத்தி வந்திருக்கின்றார்.
மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ 124 (Mercedes-Benz W124) மற்றும் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class): ரத்தன் டாடா 500 எஸ்எல் கார் மாடலை மட்டுமல்ல, அத்துடன் சேர்த்து பென்ஸ் நிறுவனத்தின் மேலும் இந்த இரண்டு கார் மாடல்களையும் பயன்படுத்தி வந்திருக்கின்றார். ஆனால், இந்த டபிள்யூ124 கார் மாடலில் அவர் ஒரு முறை காட்சி தந்ததில்லை.
அதேநேரத்தில், தன்னுடைய கராஜில் இந்த கார் சிறப்பான பராமரிப்புடன் இருப்பதாக கடந்த காலங்களில் கூறியிருக்கின்றார். இதேபோல் ரத்தன் டாடா எஸ் கிளாஸ் காரையும் பயன்படுத்தியிருக்கின்றார். அவர் இந்த காரில் பலமுறை காட்சி சந்திருக்கின்றார். கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த காரின் பின்னிருக்கையிலேயே அவர் காட்சி தந்திருக்கின்றார். இது நிறுவனத்தின் புகழ்பெற்ற லிமோசைன் வகை கார் மாடல் ஆகும்.
க்ரைஸ்லர் செப்ரிங் (Chrysler Sebring): மேற்கூரை இல்லா காரை அதிகம் விரும்பக் கூடிய ரத்தன் டாடா என்பதற்கு சான்றாக இந்த கார் மாடல் இருக்கின்றது. இது அவர் பயன்படுத்திய மூன்றாவது மேற்கூரையற்ற வாகனம் ஆகும். இந்த காரில் காணப்பட்ட நிறத்தையே ரத்தன் டாடா பின்னாளில் டாடா இன்டிகாவில் பயன்படுத்தினார். அந்த டாடா இன்டிகா 1998 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த காரை அவர் பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.
லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் (Land Rover Freelander): ரத்தன் டாடா லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இந்த காரை மட்டுமே தனக்கு சொந்தமானதாக மாற்றவில்லை. அவர் இந்த காரை தயாரிக்கும் நிறுவனத்தையே தனக்கு சொந்தமானதாக மாற்றிவிட்டார். அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு-விடம் இருந்து 2008 ஆம் ஆண்டில் டாடா நிறுவனம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களை கையகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது.
இருப்பினும், இந்த பிராண்டின் ஃப்ரீலாண்டர் கார் மாடலை மட்டுமே அவர் பயன்படுத்தினார். அதேவேளையில், சில முக்கிய நிகழ்வுகளுக்கு வரும்போது மட்டுமே அவர் இந்த காரை பயன்படுத்தி வந்திருக்கின்றார். மேலும், இந்த கார் மாடலை ரத்தன் டாடா புத்தம் புதியதுபோல பராமரித்து இருக்கின்றனர்.
டாடா இன்டிகோ மரினா (Tata Indigo Marina): டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான தயாரிப்புகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், இந்த கார் இந்தியர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அதேநேரத்தில் ரத்தன் டாடாவின் மனதை இந்த கார் கவர்ந்திருக்கின்றது.
இதன் விளைவாக அவருடைய அரிய வகை கார்களின் பட்டியலில் இதுவும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரை தன்னுடைய நாய்கள் பயணிக்க அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இதற்காக காரின் கேபின் கூடுதல் இட வசதிக் கொண்டதாக மாற்றப்பட்டு இருப்பது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா சிவிக் (Honda Civic): இந்தியர்களின் ஃபேவரிட் செடான் ரக கார் மாடலாக சிவிக் காட்சியளிக்கின்றது. ரத்தன் டாடா இந்த காரை அவரே ஓட்டி வந்த காலமும் உண்டு. இந்த புகைப்படத்தை இப்போது இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். தனி ஆளாக அவர் வெள்ளை நிற ஹோண்டா சிவிக் காரை ஓட்டி வரும் படத்தை நீங்கள் காணலாம்.
பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அவர் இந்த காரை பயன்படுத்தியிருக்கின்றார். தொழிலதிபர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும்போது ஆடம்பர கார்களில் வந்து செல்கின்ற இந்த காலகட்டத்தில் ரத்தன் டாடா மிகவும் எளிமையாக வந்துவிட்டு சென்றிருக்கின்றார். இதனால்தான் இவரை எளிமையின் சிகரம் என பலரும் கூறுகின்றனர்.
டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல் இதுவாகும். அதேவேளையில், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலையே தன்னுடைய வாகனங்களின் பட்டியலில் ரத்தன் டாடா இணைத்திருக்கின்றார். அம்பானி, அதானி போன்ற பணக்காரர்களிடம் இருந்து வேறுபட்டு ரத்தன் டாடா காட்சியளிக்க இதுமாதிரியான கார்களை அவர் பயன்படுத்தி வந்ததும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது.
நானோ (Tata Nano EV): ஏழைகளுக்கான கார் என கூறி ரத்தன் டாடா ஆசை ஆசையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய கார் மாடலே இந்த நானோ ஆகும். இந்திய சாலைகளில் ஒரே இரண்டு சக்கர வாகனத்தில் குடும்பமாக பயணிக்கும் இந்தியர்களைக் கண்டு அவர்களும் கார்களில் பயணிக்க வேண்டும் என்கிற நோக்கில் ரத்தன் டாடாவால் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு பெரிய அளவில் கிடைக்கவில்லை. இதன் விளைவாக தற்போது இந்த கார் விற்பனையில் இல்லாத நிலை உருவாகி இருக்கின்றது. மற்றவர்கள் இந்த காரை பயன்படுத்தலைனா என்ன நானே பயன்படுத்திகின்றேன் என ரத்தன் டாடா நானோ காரை தன்னுடைய கடைசி காலம் வரை பயன்படுத்தினார். குறிப்பாக அந்த காரை அவர் மின்சார வாகனமாக மாற்றி பயன்படுத்தி வந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடா, டாடா குழுமம் எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட நபராக இருந்தாலும் அவர் இன்றைய கால பணக்காரர்களை ஆடம்பர வாழ்க்கையை விரும்பாத நபராகவே இருந்து வந்திருக்கின்றார். இதன் விளைவாகவே அவரின் கார் கலெக்சனில் நெக்ஸான், நானோ மற்றும் சிவிக் உள்ளிட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications









