இந்தியாவிற்கே பேரிழப்பு! மறைந்த ரத்தன் டாடா ஆட்டோமொபைல் துறையில் சாதித்தது என்ன தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா குழுமத்தின் சேர்மேனாக இருந்த ரத்தன் டாடா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவர் டாடா குழுமத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருந்தவர். இவர் முக்கியமாக ஆட்டோமொபைல் செட்டாரில் பல முக்கிய முடிவுகளை எடுத்து முக்கிய தயாரிப்புகளை உருவாக்க காரணமாக இருந்தவர். இவரைப் பற்றிய முக்கிய விபரங்களை இங்கே காண்போம்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் குடும்பமான டாடா குடும்பத்தில் கடந்த 1937ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தவர் தான் ரத்தன் டாடா. சுதந்திரத்திற்கு முன்பே இவர் பிறந்த போது சுதந்திர இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு மனிதராக மாறப் போகிறார் என அப்பொழுது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டாடா குழுமத்தில் பிறந்த பிறகு இவரது வளர்ச்சிகள் அபரிவிதமாக இருந்தது.

இவர் கடந்த 1962 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். இந்த பட்டம் தான் இவரை இந்தியாவின் அடுத்த தொழிலதிபராக்குவதற்கு அடித்தளமாக அமைந்தது. அந்த ஆண்டு இந்தியா திரும்பிய இவர் டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்தார்.
டாடா குடும்பத்தில் பிறந்ததாலேயே இவருக்கு எடுத்தவுடன் பெரிய பதவிகள் எல்லாம் வழங்கப்படவில்லை. ஜம்ஷெத்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஒரு சாதாரண ஊழியராகவே பணியாற்றினார். அங்கிருந்து ஒவ்வொரு பணிகளையும் அவர் கற்றுக் கொண்டார். ஒரு ஸ்டீல் துறை எப்படி பணியாற்றுகிறது என்பதை கற்றுக் கொண்டார்.
பின்னர் 1975ம் ஆண்டு இவர் அட்வான்ஸ் மேனேஜ்மென்ட் புரோகிராமை ஹார்ட்வேர்டு பிசினஸ் ஸ்கூலில் முடித்தார். அதன் பிறகு இவர் தொழிலில் மிகப்பெரிய புரட்சியை செய்ய தயாராக இருந்தார். 1991ம் ஆண்டு தான் டாடா சன்ஸ் குடும்பத்தின் சேர்மேனாக இவர் பதவி ஏற்றார். அதன் பிறகு தான் மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாம் நடந்தன.
கடந்த 1998ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா இண்டிகா என்ற காரை உருவாக்கியது. இந்த கார் தான் இந்தியாவில் முதன் முறையாக முழுமையாக உருவாக்கப்பட்ட பயணிகள் காராக இருந்தது. இந்த கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இந்திய மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்காக உருவாக்கப்பட்ட காராக இந்த கார் இருந்தது. நீண்ட ஆண்டுகளாக இந்த கார் தயாரிக்கப்பட்டது.
யாரும் எதிர்பாராத அளவில் மிக அதிகமாக இந்த கார் விற்பனையானது. குறிப்பாக வாடகை கார் செக்மெண்டில் இந்த கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையானது. இந்த காரை வாங்கி பலர் தங்கள் வாழ்வாதாரத்தையே மேம்படுத்திக் கொண்டார்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த அளவுக்கு இந்தியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த டாடா இண்டிகா கார்.
அதன் பிறகு டாடா நிறுவனம் மிகப்பெரிய புரட்சி செய்தது. கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து கைபற்றியது. அதன் பிறகு 2009ம் ஆண்டு தான் டாடா நிறுவனம் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்தியாவில் முதல்முறையாக குறைந்த விலை காரான டாடா நானோ காரை முதல் முதலில் அறிமுகப்படுத்தியது.
இந்திய குடும்பங்கள் பலர் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்த நிலையில், இந்த டாடா நானோ கார் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த காரை தயாரிக்கும் போது அந்த விலைக்கு அறிமுகப்படுத்தினால் நஷ்டம் ஏற்படும் என தெரிந்தே டாடா நிறுவனம் இந்திய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நஷ்டத்தில் இந்த காரை விற்பனை செய்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடா ஆட்டோமொபைல் துறை மட்டுமல்லாமல் டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் அந்நிறுவனம் பல்வேறு விதமான வகையில் வளர்ச்சி அடைவதற்கும் ரத்தன் டாடா மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளார். அவரது மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு பெரும் இழப்பாக நிச்சயம் இருக்கும்.


Click it and Unblock the Notifications








