சரியா புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னாடி! இந்தியா லேசுபட்ட நாடு இல்லன்னு உலகிற்கு புரிய வைத்த ரத்தன் டாடா!
பொதுவாக தொழில் அதிபர்கள் (Businessman) என்றாலே, மக்கள் மத்தியில் தவறான அபிப்ராயம்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் ரத்தன் டாடா (Ratan Tata) மட்டும் இதற்கு விதிவிலக்கு. எந்தவொரு தொழிலதிபரையும் ஒரு தேசம் இவ்வளவு கொண்டாடி இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை. ரத்தன் டாடாவின் கொடை உள்ளமும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும்தான் இதற்கெல்லாம் காரணம். குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு, ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்பை வேறு ஒருவரால் ஈடு செய்ய முடியுமா? என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.
இந்தியாவின் முதல் உள்நாட்டு கார் (India's First Indigenously Developed Car) என்ற தகர்க்கவே முடியாத சாதனையை தன்வசம் வைத்திருக்கும் டாடா இண்டிகா (Tata Indica), ரத்தன் டாடாவின் பெரு முயற்சியால்தான் உருவானது. டாடா இண்டிகா காரை அறிமுகம் செய்ததில், ரத்தன் டாடாவின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இந்தியர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் அதிக மைலேஜ் மற்றும் குறைவான விலை ஆகிய அம்சங்களை எல்லாம் மனதில் வைத்து உருவான தயாரிப்புதான் டாடா இண்டிகா. மாருதி 800 காரின் விலையில், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை போன்ற இடவசதியுடன் ஒரு காரை அறிமுக செய்ய வேண்டும் என ரத்தன் டாடா விரும்பினார்.
விரும்பியதுடன் நிற்காமல், அதற்காக பணியாற்றவும் தொடங்கினார். அதன் விளைவாக நமக்கு கிடைத்ததுதான் டாடா இண்டிகா. ஆரம்பத்தில் வர்த்தக வாகனங்களைதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. லாரி தயாரிப்பாளர் என்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முகத்தை மாற்றி, அதற்கு பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனம் என்கிற அடையாளத்தை கொடுத்தது டாடா இண்டிகாதான்!

டாடா இண்டிகா ஒரு ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் ஹேட்ச்பேக் ரக கார் இதுவே. டாடா இண்டிகா கார், கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டிருந்த கார்கள் எல்லாம் ஸ்டேஷன் வேகன் மற்றும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவையாகவே இருந்தன.
டாடா எஸ்டேட் (ஸ்டேஷன் வேகன்), டாடா சியாரா (எஸ்யூவி) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இதில், டாடா எஸ்டேட் கார் 1992ம் ஆண்டும், டாடா சியாரா கார் 1991ம் ஆண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதை தொடர்ந்து, ரத்தன் டாடாவின் முயற்சியில் வந்ததுதான் டாடா இண்டிகா.
டீசல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்த இந்தியாவின் முதல் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையும் கூட, டாடா இண்டிகாவிற்கு உண்டு. இந்தியாவின் உள்நாட்டில் சுயாதீனமாக கார்களை தயாரிப்பதற்கான வினியோக சங்கிலியை தோற்றுவித்ததில், டாடா இண்டிகா ஹேட்ச்பேக் காரின் பங்கு உண்மையில் அளப்பரியது.
1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா இண்டிகா காரின் உற்பத்தி, கடந்த 2018ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 2 தசாப்தகளாக (20 வருடங்கள்) விற்பனையில் இருந்த டாடா இண்டிகா, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்துள்ளது. இன்றளவும் இந்திய சாலைகளில் உலாவி கொண்டுள்ள டாடா இண்டிகா கார்கள், அதன் உற்பத்தி தரத்திற்கு சான்று.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 1998-2018ம் ஆண்டு வரை இந்தியாவில் 20 லட்சம் டாடா இண்டிகா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ரத்தன் டாடா இன்று உலகை விட்டு மறைந்திருந்தாலும் கூட, டாடா இண்டிகா போன்ற அவரது குழந்தைகள் அவரது பெயரை என்றென்றும் நமக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்!
டாடா இண்டிகா கார், கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் வந்த டாடா இண்டிகா, இந்திய நிறுவனங்களால் சுயாதீனமாக கார்களை எல்லாம் தயாரிக்க முடியாது என அந்த காலகட்டத்தில் உலக அரங்கில் நிலவிய அவப்பெயரை துடைத்தெறிய செய்து, இந்தியாவின் பெருமையை பறைசாற்றியது.


Click it and Unblock the Notifications








