ரத்தன் டாடாவுக்கு கடைசிவரை ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியல... எங்கே போனாலும் இந்த கார் தான்!!
ரத்தன் டாடா (Ratan Tata) மறைவுக்கு சாதி, மத பேதமின்றி அனைவரும் இரங்கல் தெரிவிப்பதை பார்க்க முடிந்தது. முக்கியமாக, பணக்காரர்களில் இருந்து பாமர ஏழைகள் வரையில் ரத்தன் டாடாவை நினைவுக்கூர்ந்தனர். இவ்வாறு பூஜ்ஜிய எதிர்ப்பாளர்களை ரத்தன் டாடா சம்பாதித்துவிட்டு சென்றுள்ளார். இதற்கு முக்கியமான காரணம், அவரது எளிமையான வாழ்க்கை அணுகுமுறை ஆகும். எந்த அளவிற்கு எளிமையான வாழ்க்கை என்றால், ஒருமுறை மும்பையின் பிரபலமான தாஜ் ஓட்டலுக்கு எந்தவொரு பாதுகாவலர்களும் இன்றி தனது சிறிய அளவிலான டாடா நானோ காரில் ரத்தன் டாடா வந்திறங்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இனி பார்க்கலாம்.
பல இலட்சம் கோடிகள் மதிப்பிலான டாடா குழுமத்தின் வாரிசான ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரவு தனது 86வது வயதில் இயற்கை எய்தினார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். அன்னாரது உடல் தகனம் பெரும் சோகத்திற்கு மத்தியில் நடந்து முடிந்தது.

ரத்தன் டாடா கடைசி வரையில் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ரத்தன் டாடாவை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ரத்தன் டாடா தனது டாடா நானோ காரில் எந்தவொரு பாதுகாவலர்களும் இன்றி மும்பையின் முக்கியமான மற்றும் பிரபலமான தாஜ் ஓட்டலுக்கு வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரத்தன் டாடா முன் இருக்கையில் அமர்ந்துள்ளார். ரத்தன் டாடாவின் மேனேஜர் சாந்தனு நாய்டு காரை ஓட்டுவதை வீடியோவில் காண முடிகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கும் அளவிற்கு சொத்து இருந்தும், பல விலையுயர்ந்த கார்கள் வீட்டில் வரிசையாக நின்றுக் கொண்டிருப்பினும் ரத்தன் டாடாவின் மிகவும் விருப்பமான கார் டாடா நானோ ஆகும்.
ஏனெனில், மிடில்-கிளாஸ் மக்களும் கார் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தில் 1 லட்ச ரூபாயில் டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய நானோ காருக்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். ஏனெனில், நானோ காரின் அறிமுகத்தின்போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா தான் இருந்தார். ஆனால், டாடா நானோ கார் மார்க்கெட்டில் வெற்றி பெறாமல் போனது வேறு கதை.
ரத்தன் டாடாவிடம் இருப்பது எலக்ட்ரிக் டாடா நானோ கார் ஆகும். நானோ காரை எலக்ட்ரிக்கில் கொண்டுவர வேண்டும் என ரத்தன் டாடா மிகவும் விரும்பினார். ஆனால், அது கடைசி வரையில் நடக்காமலேயே போய்விட்டது. ரத்தன் டாடா பயன்படுத்துவதற்கு டாடா நானோ கார் ஒன்றை எலக்ட்ரிக் மோட்டார் உடன் எலக்ட்ரா இவி என்கிற நிறுவனம் மாற்றிக் கொடுத்தது. அதைதான் தனது வாழ்வின் இறுதியில் வரையில் ரத்தன் டாடா பயன்படுத்தினார்.
தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான டாடா நானோ காருக்கும் இந்த நானோ இவி காருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், கார் இயங்கும் விதத்தில் நிறைய வேறுப்பாடுகள் இருக்கின்றன. முக்கியமாக, இந்த நானோ காரில் என்ஜின் கிடையாது. அதற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டாரை எலக்ட்ரா இவி நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்காக 72 வோல்ட் ஆர்ச்சிடெக்சர் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நானோ இவி எலக்ட்ரிக் காரை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து 60kmph வேகத்தை வெறும் 10 வினாடிகளில் எட்டிவிடலாமாம். இது மட்டுமின்றி, டாடா நெக்ஸான், இண்டிகோ மரினா உள்ளிட்ட விலை குறைவான கார்களையும் ரத்தன் டாடா வைத்திருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடாவின் எளிமையான வாழ்க்கைக்கு இந்த வீடியோ மற்றுமொரு சாட்சியாகும். எலக்ட்ரிக் மோட்டார் உடனும் டாடா நானோ கார் பயன்படுத்துவதற்கு ஏற்றது என்பதை சாகும் வரையில் வலியுறுத்தும் விதமாக ரத்தன் டாடா அதனை பயன்படுத்தினார். நானோ எலக்ட்ரிக் காரை கொண்டுவருவதற்கு டாடா மோட்டார்ஸ் இனியாவது ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








