பெட்ரோல் கலப்படம் கவலை இனிவேண்டாம்.. வந்துவிட்டது ரியல்டைம் தர ஆய்வு கருவி.. தரமான கண்டுபிடிப்பு...!
பைக்கில் பெட்ரோலை நிரப்பும்போதே அதன் தரம் மற்றும் அளவுகுறித்த தகவலை வெளிப்படுத்தும் கருவி ஒன்றை இந்திய இளைஞர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சநிலையை எட்டி வருகின்றது. இந்த கவலை ஒரு புறமிருக்க, மறுபுறம் எரிபொருளில் செய்யப்படும் கலப்படம் வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த வேதனையை அளிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்குகளில் செய்யப்படும் முறைகேடுகளில் இதுவும் ஒன்று.

இந்நிலையில், அத்தகைய பெட்ரோல் பங்குகளுக்கு ஆப்பு வைக்கின்ற வகையிலான புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் மற்றுமொரு சிறகாக இயங்கும் நிறுவனம்தான் லெக்சஸ். இந்நிறுவனம், பிரம்மிக்க வைக்கும் கவர்ச்சியான தோற்றம் மற்றும் லக்சூரி வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

அதேசமயம், வாகன உற்பத்தியில் மட்டுமின்றி இந்தத்துறைச் சார்ந்து, மிகுந்த திறனுடன் செயல்படும் இளைஞர்களையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யுகின்ற வகையிலான பணியையும் அது மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக, ஒவ்வொரு வருடமும் லெக்சஸ் டிசைன் அவார்ட் என்ற நிகழ்வை மேற்கொள்ளும் அந்நிறுவனம், நடப்பாண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியினைத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வின் மூலமே பெட்ரோல் பங்க் முறைகேட்டிற்கு ஆப்பு வைக்கின்ற கருவிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த கருவியை இந்தியாவைச் சேர்ந்த சோஹம் மொஹந்தி என்ற இளைஞர் கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள சிறிய ரக கருவியானது பைக்குகளுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது, பெட்ரோல் பங்குகளில் எரிபொருளை நிரப்பும்போது கொள்ளளவை அளப்பதுடன், பெட்ரோலில் ஏதேனும் களப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதனை சென்சார்கள் மூலம் ஆய்வு செய்து எச்சரிக்கைப்படுத்தும்.
இதனால், பெட்ரோலில் களப்படம் அல்லது குறைந்த அளவு பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தால் அது உடனடியாக நமக்கு தெரிய வரும்.

குறிப்பாக, பெட்ரோலின் அடர்த்தியைக் கொண்டு அதில் களப்படம் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்ற தகவலை வழங்கும். மேலும், சென்சார் மூலம் நிரப்பப்படும் எரிபொருள் அளவை சிறிய ரக ரீடர் மூலம் காண்பிக்கும். அண்மைக் காலங்களாக பெட்ரோலின் விலை தங்கத்தின் விலையைப் போன்று புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது.

எனவே, ஒவ்வொரு நாளும் மிகுந்த வேதனையுடன்தான் இந்தியர்கள் பெட்ரோலை நிரப்பி வருகின்றனர். ஆனால், சிறிதளவும் தயக்கமின்றி பெட்ரோல் பங்குகள் பகல் கொள்ளையில் ஈடுபடுகின்றன. இத்தகைய முரண்பாடான செயலுக்கு இந்த கருவி முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகின்றது.
ஆனால், இது எப்போது விற்பனைக்கு அங்கீகாரம் பெறும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. அதேசமயம், ஒவ்வொரு வாகன ஓட்டிகளின் தேவையான கருவிகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.

இந்த கருவிகுறித்து பேசிய சோஹம் மொஹந்தி, "இது யூஸர் ஃப்ரெண்டிலியாக இருக்கும். பெட்ரோல் நிரப்பும்போது வெளிப்படையான தகவலை வழங்கும். இது எஞ்ஜின் தரத்தை மேம்படுத்த உதவுவதுடன், ப்யூவல் இன்ஜெக்சனைப் போன்று செயல்படும்" என தெரிவித்தார்.

பெட்ரோலில் நாப்தா என்ற கெமிக்கலும், டீசலில் மண்ணெண்ணய்யும் கலப்படம் செய்யப்படுவதாக இந்திய அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளது.
இதனைத் தடுக்க முடியாமல் தவித்து வரும் அரசுக்கு இந்த கருவி ஓர் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கலப்படம் எரிபொருளை வாகனத்தில் பயன்படுத்துவதனால் வாகனத்தின் எஞ்ஜின் மிக விரைவில் பாழாகுவதுடன், சுற்றுப்புற மாசையும் அதிகரிக்கின்றது. இதனால், பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுகின்றது. எனவே, இந்த கருவி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிகின்றது.

ஆகையால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி, ஃபாஸ்ட்டாக் கட்டாயம் போன்று இது போன்று கருவிகளும் கட்டாயம் என அறிவித்தால் பெட்ரோல் நிலையங்களில் நடக்கும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும், கலப்படம் எரிபொருளால் ஏற்படும் பின்விளைவிலும் ஓர் தீர்வு காண முடியும்.
எனவே, இதுபோன்ற கருவிகளுக்கான அங்கீகாரத்தை வாகன உற்பத்த நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான வாகன ஓட்டிகளின் கருத்தாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








