ஒரு கீறல் கூட ஏற்படல... கார் என்றால் இப்படித்தான் இருக்கனும்!! வெடிக்குண்டே வீசினாலும் ஒன்னும் ஆகாது - வீடியோ!
டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck), உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் புதிய டெஸ்லா எலக்ட்ரிக் வாகனம். வலிமையான உடற்கூடு உடன் உருவாக்கப்படுவதாக கூறப்படுவதால், பலரும் சைபர்டிரக்கை வாங்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், இந்த புதிய டெஸ்லா வாகனத்தின் உடல் வலிமையை வெளிக்காட்டும் விதமாக புதியதொரு வீடியோவை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டீவ்வாக இருக்கக் கூடியவர். குறிப்பாக, எக்ஸ் என அழைக்கப்படும் டுவிட்டரை பயன்படுத்துவதை எலான் மஸ்க் மிகவும் விரும்பக்கூடியவர். இதனாலேயே, எலான் மஸ்க்கின் எக்ஸ் தள பக்கத்தில் அவ்வப்போது எதாவது ஒரு பதிவு பகிரப்படுவது வழக்கம்.

உலகின் மிக பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்து சரிந்துள்ளதாக ஒருபக்கம் செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்க, அதை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் சைபர்டிரக்கை பற்றிய புதியதொரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், இந்த வீடியோ ஆனது டெஸ்லா சைபர்டிரக்கின் உடல் வலிமையை வெளிக்காட்டுவதாக உள்ளது.
பொதுவாகவே, டெஸ்லா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களை பல்வேறு விதமான சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்துவது வழக்கம். இதன் காரணமாகவே, டெஸ்லா தனது கார்களின் உடல் வலிமையால் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமானதாக உள்ளது. டெஸ்லா தனது ஒட்டுமொத்த திறனையும், அனுபவத்தையும் ஒன்றுத்திரட்டி சைபர்டிரக் வாகனத்தை மிகவும் வலிமையானதாக உருவாக்கி உள்ளது.

இருப்பினும், வாகனத்தின் உடல் வலிமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை வெளிப்படையாக காட்டினால்தானே மக்கள் நம்புவார்கள் அல்லவா... இதன்படி, இளைஞர்கள் சிலர் சைபர்டிரக் வாகனத்தை பேஸ்பால் மட்டையை கொண்டு வலுவாக தாக்கியுள்ளனர். மேலும், இந்த நிகழ்வை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவைதான் எலான் மஸ்க் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த எக்ஸ் பதிவில், "புல்லட்டின் உறுதியுடன் சைபர்டிரக் உருவாக்கப்பட்டுள்ளது" என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். வீடியோவில், அந்த இளைஞர்கள் முதலாவதாக சைபர்டிரக் வாகனத்தின் கதவு பகுதியில் பேஸ்பால் மட்டையை கொண்டு வலுவாக தாக்கியுள்ளனர். இவ்வளவு வலுவாக தாக்கினால், வேறு காராக இருந்திருந்தால் டொக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால், சைபர்டிரக்கில் சிறிய கீறல்களை தவிர்த்து வேறெந்த பாதிப்பு ஏற்படவில்லை.
இன்னும் சில அடிகள் வேகமாக அடிக்கப்பட்டதை அடுத்து பேஸ்பால் மட்டை சிறிது வளைய துவங்கியது. இதனை கண்டதும், வீடியோவில் காட்சித்தரும் இளைஞர்கள் தங்களது வேலையை மாற்றிக் கொண்டனர். அதாவது, அதுவரையில் வீடியோவை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தவர் காரை மட்டையால் அடிக்க ஆரம்பித்தார். ஒரே பேஸ்பால் மட்டை இதற்கு பயன்படுத்தப்பட்டதால், சில பல அடிகளுக்கு பிறகு மட்டை சேதமடைய ஆரம்பித்தது.
அந்த சமயத்தில் சைபர்டிரக்கில் இருந்த சேதத்தை காட்டிலும் மட்டையில் அதிக சேதம் ஏற்பட்டிருப்பதை வீடியோவில் காணலாம். டெஸ்லா சைபர்டிரக் கடந்த 2023 நவம்பர் 30ஆம் தேதி பொது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் சைபர்டிரக்கில் ஜன்னல் கண்ணாடிகள் கூட புல்லட்ப்ரூஃபாக வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா சைபர்டிரக்கை நிறைய பேர் 'எதிர்காலத்திற்கான வாகனம்' என்கின்றனர். ஆனால், இந்த வாகனத்தின் வலிமையை பார்த்தால், வேறொரு உலகத்தில் இருந்து வந்தது போல் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. ஆகையால், வருங்காலத்தில் டெஸ்லாவின் சைபர்டிரக் மிக பெரிய வெற்றியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









