இப்ப வர கார்ல மட்டும் பின் சீட்டுலயும் சீட் பெல்ட்ல ஏன் அலாரம் அடிக்குது தெரியுமா?
இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார்களில் பின்பக்க சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதற்காக அதற்கான ரிமைண்டர் சவுண்ட் வருகிறது? புதிய கார்களில் மட்டும் ஏன் இந்த சத்தம் வருகிறது? இதற்கான காரணம் என்ன? இது எப்படி வாகனத்தில் உள்ள பயணிகளை பாதுகாக்கும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சாலை விபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துக்களில் மரணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடப்பதை குறைப்பது, விபத்துக்கள் நடந்தாலும் அதில் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தான் காரில் பின்பக்க சீட்டில் அமர்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை தயாரிக்கும் போதே பின்பக்கம் சீட்டில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவில்லை என்றால் அவர்களுக்கான எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் வகையில் வசதிகளை செய்ய வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு டாடா குழுமத்தின் முக்கியமான அதிகாரி ஒருவர் காரில் செல்லும் போது விபத்தில் சிக்கினார்.இவர் காரின் பின் சீட்டில் தான் அமர்ந்திருந்தார். இவர் காரின் முன் சீட்டில் இருந்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தனர். இவரது கார் விபத்தில் சிக்கிய நிலையில் காரின் முன்பக்கம் தான் மோதியது. இருந்தும் முன் சீட்டில் இருந்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர்கள் உயிர் தப்பினர். ஆனால் பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால் விபத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்ட நிலையில் இது குறித்த சட்டம் கட்டாயம் அமலுக்கு வர வேண்டும் என அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இந்த சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தற்போது தயாரிக்கப்படும் கார்களில் பின்பக்க சீட்பெல்ட் ரிமைண்டர் கட்டாயம் ஒரு பாதுகாப்பு அம்சமாக இருப்பதை நம்மால் காண முடியும். முக்கியமாக இந்த அம்சம் ஹோண்டா சிட்டி, எலவேட்,அமேஸ், டாடாவின் பஞ்ச், நெக்ஸான் ஆகிய கார்களிலும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களிலும் இருக்கிறது.
இந்த சட்டத்தின்படி இனி வழங்கப்படும் புதிய டிசைனிற்கான அனுமதியில் இந்த அம்சம் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதற்கு முன்னர் அனுமதி பெற்று தற்போது தயாரிப்பில் உள்ள கார்களில் இந்த வசதி தற்போது இருக்காது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கார்கள் அப்டேட் செய்யப்படும் போது அதன் வடிவமைப்பில் இந்த பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பார்கள்.

இந்த அம்சம் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைக்க வழி வகுக்கும். இதனால் நாம் இந்தியாவில் விபத்துக்களின் பலிஎண்ணிக்கை மிக வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுநிச்சயம் மிக முக்கியமான அப்டேட்டாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கருவி நிச்சயம் எதிர்காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும். இதனால் மனித உயிர்கள் பாதுகாக்கப்படும். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









