அபாய செயினை பிடிச்சு இழுத்த உடனே ரயில் நிற்காதா! அது வேலை செய்யாமல் போவதற்கு இத்தன காரணங்கள் வேற இருக்கா!
வலைகாப்பிற்காக சங்கரன்கோவிலுக்கு கொல்லம் விரைவு ரயிலில் சென்ற சென்னையைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண் கஸ்தூரி என்பவர், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். ரயில் விருத்தாசலத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த சோகமான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. பயணத்தின் போது கஸ்தூரிக்கு குமட்டல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இருக்கையை விட்டு வெளியே வந்த அந்த பெண், காற்றோட்டமாக நுழைவு வாயிலில் அமர்ந்து வாந்தி எடுக்க முற்பட்டிருக்கின்றார். அப்போதே அவர் தவறி விழுந்திருந்திருக்கின்றார். அந்த நேரத்தில் உடன் இருந்தவர்கள் ரயிலில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்திருக்கின்றனர்.

ஆனால், அவர்களின் துரதிர்ஷ்டவசம் அந்த ரயில் பெட்டியில் அபாய சங்கிலி வேலைச் செய்யவில்லை. எனவே அடுத்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து அவர்கள் ரயிலை நிறுத்தி இருக்கின்றனர். ஆனால், அதற்குள்ளாக கஸ்தூரி விழுந்த இடத்தில் இருந்து ரயில் சில கிமீ தூரத்தைக் கடந்துவிட்டது.
எனவே, அவரை கண்டுபிடிப்பதில் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாகி இருக்கின்றது. எப்படியாவது அவரை காப்பாற்றிவிடலாம் என்கிற முயற்சியில் கஸ்தூரியின் உறவினர்களும், ரயிலில் பயணித்த பயணிகள் சிலரும் கஸ்தூரியைத் தேடி இருக்கின்றனர். ஆனால், அவர் சடலமாகவே மீட்கப்பட்டிருக்கின்றார். அவருடைய வயிற்றில் இருந்த ஆண் சிசுவும் இந்த உலகத்தை பார்க்கமலேயே அவருடன் பரிதாபமாக இறந்து போனது.

இந்த இரு உயிரிழப்பிற்கு பின்னால் ரயில் உடனடியாக நிற்காகததே காரணம் என கஸ்தூரியின் உறவினர்கள் கூறுகின்றனர். அபாய சங்கிலி உடனே வேலை செய்திருந்தால் தாய்-சேய் இருவரையும் காப்பாற்றியிருக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையிலேயே அபாய சங்கிலி எப்படி வேலை செய்யாமல் போகும்? அது வேலை செய்யாமல் போவதற்கான காரணங்கள் என்ன? என்கிற கேள்வியும் எழும்பியிருக்கின்றது. இதற்கு பின்னால் உள்ள காரணங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
சமீபத்தில், ரயில்வே துறையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அளித்த தகவலின் வாயிலாக, ரயிலில் உள்ள அபாய சங்கிலி வேலை செய்யாமல் போவதற்கு மூன்று காரணங்கள் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. முதல் ஒன்று, சங்கிலி செயின் உள்ளுக்குள் அறுந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது காரணம், 7 கிலோ பலம் செலுத்தி சங்கிலியை இழுக்க வேண்டும். இதை செய்யாமல் இருந்தாலும் செயின் வேலை செய்யாமல் போகும். கடைசி கராணம், ஏற்கனவே அந்த செயின் இழுக்கப்பட்டிருந்தாலும் அது வேலை செய்யாமல் போய்விடும் என்று அவர் கூறி இருக்கின்றார்.
இதைத்தாண்டி அபாய சங்கிலி செயல்படாமல் போவதற்கு வேறு எந்த காரணமும் இருக்காது என்றே அவர் கூறியிருக்கின்றார். இந்த அபாய சங்கிலி வேலை செய்தாலும், ரயில் ஒரு கிமீ இயங்கிய நிற்கும். கார், பேருந்து போன்ற வாகனங்களைப் போல ரயில்கள் உடனடியாக நின்றுவிடாது. அப்படி அவை நின்றால் பேராபத்து ஏற்படும்.
ரயில் தடம் புரளுதல் போன்ற மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்படக் கூடும். எனவேதான் ரயில்கள் படிப்படியாக பொருமையாக நிறுத்தப்படுகின்றன. மேலும், உச்சப்பட்ச வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ரயில்களை உடனடியாக நிறுத்தினால் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி பல நூறு உயிரிழப்புகள் ஏற்படும் அளவிற்கு பேரழிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவே ரயில்களில் பயணிக்கும்போது பாதுகாப்பாக பயணிப்பது நம்முடைய முக்கிய கடமையாக உள்ளது. குறிப்பாக, வாசலில் நின்று பயணிக்கும்போது கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டும். ரயில் பெட்டிகள் குலுங்கி குலுங்கி பயணிப்பவை. நாம் வாசலில் நின்றுக் கொண்டிருக்கும்போது, அதன் சிறிய குலுக்கலே நம்மை வெளியே தள்ள போதுமானதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூழல் இம்மாதிரியாக இருக்கின்ற காரணத்தினாலேயே ரயிலில் வாசப் படியில் நின்று பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இதையும் மீறி ஒரு சிலர் ரயில்களில் தொங்கியபடியும், வாசப்படியில் நின்றபடியும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இம்மாதிரியானோர் பிடிப்பட்டால் உச்சபட்ச அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









