சொந்த காசில் வாங்க கூடாது! பைக்கிற்கு கீழே ஏன் மணி கட்றாங்க தெரியுமா? இதுவரைக்கும் கேள்விப்படாத விஷயமா இருக்கே
ஒரு சிலர் தங்களது பைக்கிற்கு கீழே ஏன் மணியை கட்டி வைக்கின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சில பைக்குகளில் சிறிய மணி ஒன்று தொங்கி கொண்டிருப்பதை எப்போதாவது பார்த்துள்ளீர்களா? பைக்குகளில் நீங்கள் இந்த சிறிய மணியை ஏற்கனவே பார்த்திருக்கலாம். அல்லது இதுவரை பார்க்காமல் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளும் கூட உள்ளன. ஒருவேளை பைக்குகளில் சிறிய மணி தொங்கி கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருந்தால், அது எதற்காக? என்ற சந்தேகம் வந்திருக்கும்.

பைக்குகளில் ஏற்கனவே ஹாரன் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த மணி எதற்கு? என உங்கள் சந்தேகம் மேலும் வலுவடைந்திருக்கும். இந்த மணி அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால், ஹாரன் அளவிற்கு நிச்சயமாக ஒலி எழுப்பாது. எனவே ஒலி எழுப்புவதற்காக பைக்குகளில் இந்த மணி கட்டப்படவில்லை என்ற முடிவிற்கு வந்திருப்பீர்கள்.

இறுதியில் அழகிற்காக கட்டியிருப்பார்கள் என்று உங்கள் மனதை நீங்களே சமாதானம் செய்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இவை எதுவுமே உண்மை அல்ல. ஆம், ஒலி எழுப்புவதற்காகவோ அல்லது பைக்கை கூடுதல் அழகாக காட்டுவதற்காகவோ மணி கட்டி தொங்க விடப்படுவதில்லை. அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.

பைக்குகளில் கட்டப்படும் இந்த மணியை க்ரெம்லின் பெல்ஸ் (Gremlin Bells), கார்டியன் பெல்ஸ் (Guardian Bells) என பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். பைக்குகளில் இந்த மணியை கட்டியிருந்தால் தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை. பைக்கில் பயணம் செய்பவர்களை, தீய சக்திகளிடம் இருந்து இந்த மணி பாதுகாப்பதாக பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது.

சாலைகளில் தீய சக்திகள் இருக்கும் என புராண கதைகள் கூறுகின்றன. அந்த தீய சக்திகள் காரணமாக பைக் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பலரும் நம்புகின்றனர். அத்துடன் தீய சக்திகள் பைக்கை பழுதாக்கி விடும் எனவும் கூட பலர் நினைக்கின்றனர். அதாவது நன்றாக ஓடி கொண்டிருக்கும் பைக்கில் தீய சக்திகள் பிரச்னைகளை ஏற்படுத்தி ஓடாமல் செய்து விடுமாம்.

ஆனால் க்ரெம்லின் பெல்ஸ் அல்லது கார்டியன் பெல்ஸ் என அழைக்கப்படும் மணியை பைக்குகளில் கட்டியிருந்தால் தீய சக்திகளிடம் இருந்து முழுமையாக பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஹார்லி டேவிட்சன் பைக் ரைடர்கள்தான் மணியை கட்டும் இந்த பாரம்பரியத்தை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.

எனினும் மற்ற பைக்குகளின் ரைடர்களிடமும் இந்த பழக்கம் அதிகளவில் காணப்படவே செய்கிறது. ஆனால் இதையெல்லாம் விட சுவாரஸ்யம் என்னவென்றால், பைக்குகளில் கட்டப்படும் இந்த மணி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால், அதாவது தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பை வழங்க வேண்டுமென்றால், ஒரு சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறுகின்றனர்.

இதன்படி இந்த மணியை நீங்கள்தான் பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அதை நீங்களே வாங்க கூடாதாம். நீங்களே மணியை வாங்கி உங்கள் பைக்கில் கட்டினால் அது வேலை செய்யாது என கூறுகின்றனர். அதற்கு பதிலாக உங்களை மிகவும் நேசிக்க கூடிய ஒருவர் அந்த மணியை உங்களுக்கு பரிசாக வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

அன்பை வெளிக்காட்டும் நல்ல எண்ணங்களால்தான் அந்த மணி 'ஆக்டிவேட்' ஆகும் என புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக உங்களை போன்ற மற்றொரு பைக் ரைடரிடம் இருந்து வாங்கி கட்டப்படும் மணிகள் அதிக சக்தி மிக்கவையாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் பைக்கின் கீழ் பகுதியில்தான் இந்த மணியை கட்டியிருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

இதுதவிர பைக்கை விற்பனை செய்யும்போது அந்த மணியை அகற்றி விட வேண்டுமாம். பைக்கை விற்பனை செய்பவர், அதனை வாங்குபவருக்கு பைக்குடன் சேர்த்து மணியையும் கொடுத்தால் என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம் (எங்களுக்கும் வந்தது). ஆனால் அப்படி கொடுக்க கூடாதாம். வேண்டுமென்றால் பைக்கில் இருந்து மணியை கழற்றி விட்டு பைக்கை விற்பனை செய்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.

மணியை கொடுக்க வேண்டும் என்றால் நேருக்கு நேராக தனியாக கொடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். அதேபோல் இந்த மணியை யாராவது திருடினால், சக்தி போய் விடும் என கூறப்படுகிறது. நல்ல எண்ணம்தான் இந்த மணியின் வலிமையே. அப்படியிருக்கும்போது தவறான எண்ணத்தில் யாராவது திருடினால், இந்த மணி சக்தியை இழந்து விடும் என்கின்றனர்.

ஆனால் மணியை திருடியவருக்கு உரிய தண்டனை கிடைத்து விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. கேட்பதற்கு இந்த கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள்தான். பைக்கில் மணியை கட்டுவதால் மட்டும் பாதுகாப்பான பயணம் கிடைத்து விடாது. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி கவனமாக பைக் ஓட்டினால் மட்டுமே முழு பாதுகாப்பு கிடைக்கும்!


Click it and Unblock the Notifications