சாதாரண மக்களுக்கு மட்டும் அபராதமா? போலீஸ் வாகனங்களில் இனி இவை எதுவும் இருக்க கூடாது... அதிரடி உத்தரவு...
காவல் துறையினரின் வாகனங்களில் இருந்து சன் பிலிம்கள், ஜன்னல் திரைச்சீலைகள் மற்றும் புல் பார்களை அகற்றும்படி அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் காரில் எந்த வகையான மாடிஃபிகேஷன்களை செய்தாலும், அது சட்ட விரோதமாகவே கருதப்படும். சட்டத்திற்கு புறம்பாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை கண்டறிந்து, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக கடந்த காலங்களில், வாசகர்களுக்கு பல்வேறு செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அதன் உரிமையாளர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கேரள மாநிலத்தின் டிஜிபி லோகநாத் பிஹீரா தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். காவல் துறையினரின் வாகனங்களில் இருந்து, சன் பிலிம்கள், ஜன்னல் திரைச்சீலைகள் மற்றும் புல் பார்களை அகற்றும்படி இதில் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள சில காவல் துறை வாகனங்களில் இன்னமும் சன் பிலிம்கள், ஜன்னல் திரைச்சீலைகள் மற்றும் புல் பார்கள் பயன்படுத்துவது குறித்து தனது கவனத்திற்கு வந்திருப்பதாகவும், இது சட்ட விரோதம் எனவும் அவர் இந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இவற்றை பயன்படுத்துவதற்கு சாலை போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளதால், இந்த உபகரணங்கள் முற்றிலும் சட்ட விரோதமாக கருதப்படுகின்றன.

தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசாங்க வாகனங்களில் இருந்து சன் பிலிம்கள், ஜன்னல் திரைச்சீலைகள் மற்றும் புல் பார்களை அகற்றும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்னமும் காவல் துறையின் ஒரு சில வாகனங்களில் இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களையடுத்து, கேரள டிஜிபி தற்போது இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

தங்களது காவல் நிலையங்களில் உள்ள வாகனங்களில் இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பயன்படுத்தப்பட்டு கொண்டிருந்தால், அவற்றை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களுக்காக ஏராளமான வாகனங்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.

அப்படி இருக்கும்போது காவல் துறையினரின் வாகனங்களிலேயே விதிமுறைகளை மீறும் வகையில், தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தினால், அது தவறான முன்னுதாரணமாக இருக்கும். எனவேதான் கேரள டிஜிபி தற்போது இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். எனவே தடை செய்யப்பட்ட உபகரணங்களை வாகனங்களில் இருந்து நீக்கும் பணிகளை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

காரின் உள்ளே வெப்ப நிலையை குறைப்பதற்கு, சன் பிலிம்களை ஒட்டுவதும், ஜன்னல்களை சுற்றிலும் திரைச்சீலைகளை பொருத்துவதும் எளிமையான வழியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதை பயன்படுத்தி கொண்டு காருக்கு உள்ளே குற்ற செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகார்களையடுத்து, அவற்றை பயன்படுத்துவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

மறுபக்கம் விபத்துக்களில் இருந்து வாகனங்களை பாதுகாப்பதற்காக முன் பகுதியில் புல் பார்களை பலர் பொருத்தி கொள்கின்றனர். புதிய பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக தற்போது கார் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளே இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை பற்றி மட்டும் யோசிப்பதில்லை. கூடவே பாதசாரிகளின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒருவேளை விபத்து நிகழ்ந்தால், படுகாயங்களில் இருந்து பாதசாரிகளை பாதுகாக்கும் வகையில்தான் தற்போதைய நவீன கார்களின் முன் பகுதி வடிவமைக்கப்படுகிறது. புல் பார்கள் இங்கே தோல்வியடைகின்றன. அவை பாதசாரிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்காது. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் புல் பார்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
Image Courtesy: Kerala Police Drivers


Click it and Unblock the Notifications








