பின்னால் நிற்கும் கார்கள் தான் இதில் முக்கியமானதே! இராணுவ அதிகாரிகளுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி!!
ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். ஆனால், இந்தியாவில் தான் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறது. மக்கள் குறைவானவர்களே ரெனால்ட் காரை வாங்குகின்றனர் எனும் சூழலில் இந்திய இராணுவத்திற்கு ரெனால்ட் நிறுவனம் சில கார்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளது. சமீபத்தில்தான் இதேபோன்று சில ரெனால்ட் கார்கள் பரிசாக வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் பரிசளிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த திடீர் அன்பளிப்பு என்பதையும், இந்திய இராணுவத்திடம் சென்றுள்ள ரெனால்ட் கார்களை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
எந்தவொரு கார் நிறுவனமும் ஓர் நாட்டின் இராணுவத்திற்கு தங்களது கார்களை வழங்குவதை பெருமையாக கருதும். இந்திய இராணுவத்திற்கு பெரும்பாலும் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் தான் அதிகளவில் வாகனங்களை வழங்கி வருகின்றன. இராணுவ அதிகாரிகளின் அலுவலக பயன்பாடுகளுக்கு வேண்டுமாயின் வேறு சில கார் நிறுவனங்களின் கார்கள் பயன்படுத்தப்படலாம்.

சமீப காலமாக இந்திய இராணுவத்துடன் ரெனால்ட் நிறுவனம் நெருக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்திய இராணுவத்திற்கு ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் கைகர் என இந்தியாவில் தான் விற்பனை செய்யும் அனைத்து கார்களிலும் சில யூனிட்களை அன்பளிப்பாக வழங்கி இருந்தது. மொத்தம் 14 இராணுவ அதிகாரிகளுக்கு அவை வழங்கப்பட்டன.
இந்த நிலையில் அடுத்த 1 மாதத்திற்குள், மீண்டும் இந்திய இராணுவத்திற்கு தனது பரிசு வாகனங்களை ரெனால்ட் வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய இராணுவத்தின் கிழக்கு மண்டல அதிகாரிகள் தற்போது ரெனால்ட் வழங்கியுள்ள கார்களை பெற்றுக் கொண்டனர். இந்த முறை ரெனால்ட் க்விட் கார் வழங்கப்படவில்லை. ரெனால்ட் டிரைபர் மற்றும் கைகர் கார்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம் வெங்கட்ராம் கூறுகையில், "இந்த கார்களை வழங்குவதன் மூலம் இந்திய இராணுவத்தின் கிழக்கு மண்டல பிரிவை ஆதரவளிப்பதில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். டிரைபர் மற்றும் கைகர் ஆகியவை தரம், பாதுகாப்பு மற்றும் மேட்-இன்-இந்தியா முயற்சியில் ரெனால்ட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

இந்த கார்கள் கிழக்கு மண்டல இராணுவத்தின் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி/ இறக்குமதி திறன்களை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ரெனால்ட் இந்தியா நிறுவனம் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், நமது தேசத்தை பாதுகாப்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த அன்பளிப்பு அவர்களின் விலைமதிப்பற்ற சேவைக்கான எங்கள் பாராட்டுக்கான ஒரு சிறிய வெளிப்பாடாகும்" என்றார்.
இந்திய இராணுவத்தின் கிழக்கு மண்டல பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள ரெனால்ட் கார்களுள் டிரைபரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ரெனால்ட்டின் சப்-4 மீட்டர் எம்பிவி கார் ஆகும். அதாவது, இந்த காரின் நீளம் 4 மீட்டர்களுக்கும் குறைவு ஆகும். ஆர்.எக்ஸ்.இ, ஆர்.எக்ஸ்.எல், ஆர்.எக்ஸ்.டி மற்றும் ஆர்.எக்ஸ்.இசட் என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டிரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
ரெனால்ட் கைகர் காரை பொறுத்தவரையில், இது ரெனால்ட்டின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும். டிரைபரை போன்று 4 விதமான வேரியண்ட்களுடன் சேர்த்து, ஆர்.எக்ஸ்.டி (ஆப்ஷ்னல்) என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் கைகர் காரை 1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அல்லது 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். ஆக மொத்தத்தில், இந்த 2 ரெனால்ட் கார்களும் டீசல் என்ஜின் உடன் கிடைப்பதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் இந்திய இராணுவத்திற்கு எதற்காக ஐஸ் வைக்கிறது என்பது புரியவில்லை. ஒருவேளை வேறு விஷயத்திற்காக இந்திய இராணுவம் செய்த செயல் ரெனால்ட் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருக்கலாம். அல்லது, உண்மையாலும் நாட்டின் இராணுவத்தின் மீது அக்கறை வந்து இவ்வாறு தொடர்ச்சியாக கார்களை பரிசளிக்கலாம்.


Click it and Unblock the Notifications








