வயது வெறும் நம்பர் தான்... 77 வயதில் இன்னமும் ராயல் என்ஃபீல்டில் கலக்கி கொண்டிருக்கும் இவர் யார் தெரியுமா?
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளை ஓட்டுவதற்கு யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு ரசிகர்களாக உள்ளனர். ஏனெனில், அந்த அளவிற்கு உலகிலேயே மிக நீண்ட வரலாற்றை கொண்ட பைக் நிறுவனமாக ராயல் என்ஃபீல்டு விளங்குகிறது.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஹேண்டில் (Handle) செய்வதற்கே தனி திறன் வேண்டும். மேலும், அதுதான் அவற்றின் பிளஸ் பாயிண்ட்டாகவும் உள்ளது. ஓட்ட ஓட்ட பழகி கொண்டால், பயணத்தின் போது ராயல் என்ஃபீல்டு பைக்கை போன்று ஓர் உற்ற தோழன் இருக்கவே முடியாது. இதனாலேயே, தொலைத்தூர பயணங்களுக்கு பலர் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை அதிகமாக பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

அந்த வகையில், புனேவைச் சேர்ந்த இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் கர்னல் சோகன் ராய் (77), லடாக்கின் லே (Leh) பகுதியில் உள்ள உலகின் மிக உயரமான (19,024 அடி) மோட்டார் சாலை அமைந்துள்ள உம்லிங் லா (Umling La) கணவாய்க்கு தனியாக மோட்டார்சைக்கிளில் சென்று சாதனை படைத்துள்ளார்.
'விசார்ட்' (Wizard) என தான் அழைக்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 (Classic 500) மோட்டார்சைக்கிளில் கடந்த ஆகஸ்ட் 20 முதல் 30ஆம் தேதி வரையில் இந்தச் சவாலான பயணத்தை அவர் மேற்கொண்டார். கடுமையான மழை, நிலச்சரிவு, மின் தடைகள் மற்றும் தகவல் தொடர்பு இல்லாத இடர்களையும் இந்த நீண்ட தூர பயணத்தில் சோகன் ராய் சந்தித்தார்.

ஜம்மு, ஸ்ரீநகர், டிராஸ், கார்கில், லே, நயோமா மற்றும் ஹன்லே வழியாகப் பயணித்து, இறுதியாக உம்லிங் லாவை அடைந்தார். 10 நாட்கள் நீடித்த இந்த பயணத்தில் வழியில், கார்கில் போர் நினைவிடம் மற்றும் பட்காம் போர் நினைவிடம் (1947-48) ஆகியவற்றில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இவரது இந்தச் சாதனை, எல்லை சாலைகள் அமைப்பு, சக படை வீரர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பைக் ரைடிங் (Bike Riding) ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் சோகன் ராயின் இந்த பயணம் சாகசத்திற்காக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை; இது ஒரு நோக்கத்துடன் கூடியது. குமாவ்ன் படைப்பிரிவின் 15வது பட்டாலியனில் நியமிக்கப்பட்ட சோகன் ராய், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைகள் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் இவர் பணிபுரிந்தார்.
தனது இளமைக் காலத்தில் விளையாட்டு வீரராகவும், கால்பந்து வீரராகவும், குத்துச்சண்டை வீரராகவும், மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராகவும் திகழ்ந்தவர் சோகன் ராய் ஆவார். 2000-ல் நடந்த மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ ஆலோசனையைப் புறக்கணித்து, மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து ஓட்ட ஆரம்பித்தார். பைக் ரைடிங் மீதான அவரது ஆர்வம் இப்போதும் இவ்வாறு நீண்ட தூர பயணங்களாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

இந்த சவாலான பயணத்தில் லெப்டினண்ட் கர்னல் சோகன் ராயின் திறமையை மட்டுமின்றி, இந்த பயணத்திற்கு அவர் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் திறனையும் நாம் பாராட்டியாக வேண்டும். கிளாசிக் 500 பைக் தற்சமயம் விற்பனையில் இல்லை. ஆனால், உலகளவில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் ஒன்று, கிளாசிக் 500 ஆகும்.
1927ஆம் ஆண்டில் இருந்து பைக்குகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதலாவதாக உருவாக்கியது 500சிசி பைக் ஆகும். பின்னர் அதுதான் 1932ஆம் காலக்கட்டத்தில் புல்லட் 500 (Bullet 500) பைக் ஆக உருமாறியது. புல்லட் 500 பைக் உடன் நீண்ட காலத்திற்கு இயங்கிவந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2000ஆம் காலக்கட்டத்திற்கு பிறகு கொஞ்சம் மாறுதலாக உருவாக்கிய 500சிசி பைக் தான், கிளாசிக் 500 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தப் பயணம், உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆர்வம் ஆகியவை ஒருபோதும் முடிவதில்லை என்பதை அனைத்து தலைமுறையினருக்கும் உணர்த்தும் ஒரு உத்வேகமான செய்தியாக அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற லெப்டினண்ட் கர்னல் சோகன் ராய் இவ்வாறு நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொள்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த காலத்தில், காதுங் லா பகுதியை அடைந்த மிக வயதான மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் என்று லிம்கா சாதனைப் புத்தகத்திலும், கிழக்கு-மேற்கு தனிப்பயணத்திற்காக இந்திய சாதனைப் புத்தகத்திலும் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications









