உலக அரங்கில் இந்தியாவிற்கு ஓர் அவமானம்!! சாலை பாதுகாப்பு குறைஞ்சிட்டே வருது - புள்ளி விபரங்கள் என்ன கூறுகிறது?
இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 1.68 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் அரங்கேறியுள்ளதாக ஓர் அதிர்ச்சிக்கர ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்த தகவல்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பரப்பளவிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி உலகின் மிக பெரிய நாடுகளுள் ஒன்று நம் இந்தியா. நன்கு பரந்து, விரிந்த சாலை கட்டமைப்பையும் அதற்கேற்ப நாடு முழுவதும் அதிக தொலைவிற்கு கொண்டுள்ளது. உலகளவிலேயே நீளமான சாலை வசதியை கொண்ட 2வது பெரிய நாடு நம் இந்தியா தான்.

இதனாலோ என்னவோ... நம் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன. வேண்டுமென்றே ஆக்ரோஷமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் அமெரிக்கா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் குறைவு தான் என்றாலும், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் நம் நாட்டிலும் அதிகம். இவை எல்லாவற்றையும் விட நம் மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனால்தான் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,68,491 பேர் இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மார்த் என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்தைய வருடத்தில் பதிவான சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்களை வெளியிடுவது வழக்கம்.

இந்த வகையில், கடந்த 2022ஆம் காலண்டர் ஆண்டில் பதிவாகிய சாலை விபத்துகள் குறித்த வருடாந்திர அறிக்கையை தற்போது மார்த் வெளியிட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 4,61,312 சாலை விபத்துகள் எழுத்து வடிவில் பதிவாகி உள்ளன. இதில் 4,43,366 பேர் சிறு காயத்திற்காக ஆவது உள்ளாகி உள்ளனர்.
இந்த 4,43,366 காயமடைந்தவர்களில் 1,68,491 பேர் பரிதாபமாக உயிரிழப்பை சந்தித்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் எல்லா விதங்களிலும் இதற்கு முந்தைய 2021ஆம் ஆண்டை விட அதிகமாகும். நிகழ்ந்துள்ள சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2021ஐ விட 11.9% அதிகம். அதேபோல், விபத்தினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3%-மும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.4%-மும் அதிகமாகும்.

1,68,491 சாலை விபத்து உயிரிழப்புகளில், 36.2%, அதாவது 61,038 உயிரிழப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டவை ஆகும். அதேபோல், மாநில நெடுஞ்சாலைகளில் 41,012 (24.3%) உயிரிழப்புகளும், மற்ற சாலைகளில் 66,441 (39.4%) உயிரிழப்புகளும் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன. இந்த விபரங்களை, மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என சாதாரணமாக இதனை கடந்து செல்ல முடியாது. இதனை குறைக்க, சாலைகளை விரிவுப்படுத்துவது, புதிய மேம்பாலங்கள், சுரங்க பாதைகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இன்னும் தீவிரமாக இறங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









