ராங் சைடில் வந்த கார் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய டூவீலர் ரைடர்! மாஸ் ஹீரோவை கையை கட்டி நிக்க வெச்சுட்டாரு
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ராங் சைடில் (Wrong Side) பயணம் செய்யும் வழக்கம் இங்கு பலரிடமும் காணப்படுகிறது. ராங் சைடில் பயணம் செய்தால், சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிறைய பேர் தொடர்ந்து ராங் சைடில் பயணம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த வரிசையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore) ராங் சைடில் பயணம் செய்த மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) கார் டிரைவர் ஒருவரின் வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த மாருதி சுஸுகி பலேனோ கார் டிரைவரின் வீடியோ வைரல் ஆகி கொண்டிருப்பதற்கு, அவர் ராங்-சைடில் பயணம் செய்தது மட்டும் காரணம் அல்ல. அவரது முரட்டுத்தனமும் இதற்கு ஒரு காரணம் ஆகும். ஆம், ராங்-சைடில் வருவதை எதிர்த்து கேள்வி கேட்டு வீடியோ எடுத்த இரு சக்கர வாகன ஓட்டியை அவர் தாக்கியுள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆக பரவி வரும் நிலையில், மாருதி சுஸுகி பலேனோ காரை ஓட்டி வந்த நபரை காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து விட்டனர். மாருதி சுஸுகி பலேனோ காரின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை கைது செய்ய வேண்டும் என சமூக வலை தளங்களில் பலரும் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று காவல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொரு பக்கம் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே நடைபெறும் இது போன்ற வாக்குவாதங்கள், கைகலப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது, கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
குறிப்பாக பெங்களூர் நகரில்தான் சமீப காலமாக வாகன ஓட்டிகளுக்கு இடையே மிக அதிக அளவிலான மோதல்கள் ஏற்படுகின்றன. குடி போதையில் ஒரு சிலர் மிரட்டி பணம் பறிக்க முயல்வது இதற்கு ஒரு காரணமாக உள்ளது. சில சமயங்களில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டி கேட்கும்போதும் கூட, அது கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது.
மாருதி சுஸுகி பலேனோ கார் டிரைவரால் தாக்கப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டி தவறை தட்டி கேட்டவர்தான்! இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டுமென்றால், வாகன ஓட்டிகள் பொறுமையாக நடந்து கொள்வது அவசியம். போக்குவரத்து விதிமுறைகளை சரியான பின்பற்றினாலே, இது போன்ற பெரும்பாலான பிரச்னைகளை தவிர்த்து விடலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ கார் டிரைவரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது சிறந்த முன்னுதாரணம். இந்த சம்பவத்தை கண்டும் காணாதது போல் இருந்திருந்தால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் நல்ல வேளையாக அப்படி நடந்து கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் இரு சக்கர வாகன ஓட்டியை தாக்கி 'மாஸ்' காட்டி கொண்டிருந்த மாருதி சுஸுகி பலேனோ காரின் டிரைவர், காவல் துறையால் கைது செய்யப்பட்டு கையை கட்டி கொண்டு நிற்கும் புகைப்படமும் சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆனால் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








