தமிழக அரசு சாலை வரியை இவ்வளவு நாள் உயர்த்தாமல் இருந்ததே பெரிய விஷயம்!! மற்ற மாநிலங்களை கொஞ்சம் பாருங்க...
தமிழகத்தில் சாலை வரிகளை உயர்த்த 13 வருடங்களுக்கு பிறகு அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் எந்த அளவிற்கு சாலை வரிகள் உயர்த்தப்பட உள்ளன? நமது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம் மாநிலத்தில் சாலை வரிகள் எந்த அளவிற்கு வசூலிக்கப்படுகின்றன? என்பது குறித்த கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
புதிய வாகனம் வாங்கும் அனைவரும் சாலை வரியை செலுத்திய பின்னரே ஷோரூமில் இருந்து அந்த வாகனத்தை எடுத்து செல்ல முடியும். சாலை வரியை வாகன பதிவின்போது ஷோரூம் அதிகாரிகளே செலுத்தி விடுகின்றனர். இதற்கும் சேர்த்து கஸ்டமரிடம் இருந்து ஆன்-ரோடு விலையாக வசூலித்து விடுகின்றனர். தற்சமயம் தமிழ்நாட்டில் சாலை வரிகள் 2-வீலருக்கு 8 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது.

அதாவது நீங்கள் வாங்கும் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சம் எனில் அதில் 8%, அதாவது ரூ.8,000ஐ சாலை வரியாக செலுத்த வேண்டும். கார்களை பொறுத்தவரையில், ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார் எனில் விலையில் 10% சாலை வரியாகவும், ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கார்களுக்கு 15%-மும் சாலை வரியாக வசூலிக்கப்படுகிறது. இதில் 2-வீலர்களுக்கான சாலை வரிகள் கடைசியாக 2008இல் அதிகரிக்கப்பட்டன.
கார்களுக்கான சாலை வரிகள் 2 வருடங்களுக்கு பிறகு 2010ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டன. சாலை வரிகள் மூலம் மாநில அரசுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. இதன் மூலமாகவே புதிய சாலைகளை போடுவது மற்றும் சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.5,873 கோடி வருவாய் சாலை வரிகளாக தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.

இருப்பினும், இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக சாலை வரிகளை மாநிலம் முழுவதும் அதிகரிக்க தமிழக அரசு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வரி உயர்வு குறித்து 2023ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த போதே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருந்தார். இதன்படி, சாலை வரிகள் வாகனங்களை பொறுத்து 2 - 5% வரையில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, 2-வீலர்களுக்கான சாலை வரி 8%-இல் இருந்து 10% ஆக உயர்த்தப்பட உள்ளதாம். இதனால் ரூ.90,000 மதிப்புள்ள 2-வீலருக்கு ரூ.7,200-க்கு பதிலாக ரூ.9,000-ஐ சாலை வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த சாலை வரியானது ரூ.1 லட்சத்திற்குள் விலை கொண்ட 2-வீலர்களுக்கு மட்டுமே ஆகும். ரூ.1 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட 2-வீலர்களுக்கு சாலை வரியாக விலையில் சுமார் 12% வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு, யமஹா ஆர்15 பைக்கை ரூ.1.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்குகிறீர்கள் எனில், சாலை வரியாக மட்டும் ரூ.18,000-ஐ செலுத்த வேண்டிவரும். அப்படியென்றால், விலையுயர்ந்த கவாஸாகி, ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு ரூ.1 லட்சத்திற்கு கூட சாலை வரி வரலாம். கார்களை பொறுத்தவரையில், ரூ.5 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட கார்களுக்கு சாலை வரி 12% ஆக உயர்த்தப்பட உள்ளதாம்.
இதனால், உதாரணத்திற்கு ரூ.4.5 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரை வாங்குகிறீர்கள் எனில் சாலை வரியாக ரூ.54,000ஐ செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களுக்கே இவ்வளவு எனும்போது, ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சத்தில் விலை கொண்ட கார்களுக்கு 13%-மும், ரூ.10 லட்சம் - ரூ.20 லட்சத்தில் விலை கொண்ட கார்களுக்கு 15%-மும், ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கார்களுக்கு 20%-மும் சாலை வரியாக வசூலிக்க தமிழக அரசு அதிகாரிகள் சாலை வரிகளை வரையறை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பு எதுவும் இன்னும் தமிழக அரசு சார்பில் இருந்து வெளிவரவில்லை. சாலை வரி உயர்வுக்கு மக்கள் மத்தியில் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பு உருவாகி உள்ளதால் இந்த திட்டத்தை தமிழக அரசு அப்படியே கிடப்பில் போட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. நம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உண்மையில் தமிழ்நாட்டில் சற்று குறைவாகவே சாலை வரிகள் வசூலிக்கப்படுகின்றன என்பதை கூறியாக வேண்டும்.

ஏனெனில் ரூ.1 லட்சத்திற்குள் விலை கொண்ட 2-வீலருக்கு எந்த தென்னிந்திய மாநிலத்திலும் 8% வரி வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு அதிகமாகவே வசூலிக்கப்படுகின்றன. குறைந்தப்பட்சமாக ஆந்திரா, தெலுங்கானாவில் 9%-மும், அதிகப்பட்சமாக கர்நாடகாவில் சுமார் 18%-மும் வரியாக வசூலிக்கப்படுகிறது. ரூ.1 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட 2-வீலர்களை பொறுத்தவரையில், ஆந்திரா, தெலுங்கானாவில் அதே 9% வரியே வசூலிக்கப்படுகிறது. அதேபோல் கர்நாடகாவில் 18% சாலை வரி வசூலிக்கப்படுகிறது.
கார்களை பொறுத்தவரையில், ரூ.5 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களுக்கு கேரளாவில் வெறும் 9% மட்டுமே சாலை வரி ஆகும். ஆனால் ஆந்திரா & தெலுங்கானாவில் 12%, கர்நாடகா & மஹாராஷ்டிராவில் 13% ஆகும். ரூ.5- 10 லட்சத்தில் விலை கொண்ட கார்களுக்கு கேரளாவில் 11%, மஹாராஷ்டிராவில் 13%, ஆந்திரா, தெலுங்கானா & கர்நாடகாவில் 14% ஆகும்.
ரூ.10-15 லட்சத்தில் விலை கொண்ட கார்களுக்கு கேரளாவில் 13%-மும், ஆந்திரா, தெலுங்கானா & மஹாராஷ்டிராவில் 14%,-மும், கர்நாடகாவில் சுமார் 17%-மும் சாலை வரியாக வசூலிக்கப்படுகின்றன. ரூ.15- 20 லட்சம் விலை மதிப்பிலான கார்களுக்கு சாலை வரி ஆந்திரா, தெலுங்கானா & மஹாராஷ்டிராவில் 14%, கேரளாவில் 16%, கர்நாடகாவில் 17% ஆகும். ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கார்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் 14% மட்டுமே, மஹாராஷ்டிரா 15%-மும், கர்நாடகாவில் 18%-மும், கேரளாவில் சுமார் 21%-மும் சாலை வரியாக வசூலிக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மற்ற தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், ஏற்கனவே கூறியதுபோல் நமது தமிழக அரசு குறைவான சாலை வரியையே பெற்று வருகிறது. ஆதலால், சாலை வரிகள் உயர்த்தப்பட்டாலும், மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு இணையானதாகவே இருக்கும். இருப்பினும், சாலை வரிகள் இப்போதைக்கு உயர்த்தப்படாது என்கிற நம்பிக்கையில் இருப்போம்.


Click it and Unblock the Notifications
