விபத்தால் இறப்போர் பட்டியலில் புதிய உச்சத்தை தொடும் இந்தியா! கிடுகிடுக்க வைக்கும் தனியார் ஆய்வறிக்கை
இந்தியாவில் விபத்தால் இறப்போர்களைப் பற்றி அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தை தகர்த்தெறியும் வகையில் தனியார் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் விபத்தால் உயிரிழப்போர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் புதிய எண்ணிக்கையை தொட்டு வருகின்றது. அதிலும், அண்மைக் காலங்களாக இது விஷ்வரூபம் எடுக்க தொடங்கியிருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும் விபத்து மற்றும் அதனால் இறப்பவர்கள்குறித்த தகவலை அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில், அரசு வெளியிடும் புள்ளி விவரங்களைக் காட்டிலும், தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றன. பெரும்பாலும், தனியார் நிறுவனங்கள் புள்ளி விவரங்களை சேகரிக்க உள்ளூர் கவால் நிலையங்கள் மற்றும் பொதுமக்களையே நாடுகின்றன.
இருப்பினும், அரசு-தனியார் நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றது.

இதில், அரசு தங்களை சிறந்தவர்கள் என்று வெளிக்காட்டிக் கொள்வதற்காக சிலவற்றை மறைக்கலாம் என்ற கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இதன்காரணமாகவே, இதுபோன்ற முரண்பட்ட புள்ளிவிவர வேறுபாடு காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டில் விபத்து மற்றும் விபத்தின் காயங்களால் இறந்தவர்கள் பற்றிய புள்ளி விவரத்தை தி லேன்செட் பப்ளிக் ஹெல்த் இதழ் வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2017ம் ஆண்டில் அரங்கேறிய விபத்து மற்றும் விபத்தின் காயங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கடந்த காலங்களில் ஆண்டு ஒன்றிற்கு இறப்போரின் விகிதம் 1.5 லட்சமாக இருந்த நிலையில் அது தற்போது 2.19 லட்சமாக உயர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை, நாள் ஒன்றிற்கு கணக்கிட்டால் இறப்போரின் விகிதம் 600 ஆக இருக்கின்றது.

இதில், அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், முன்னதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் 71,000 அதிகம் இருக்கின்றது.
மேலும், இவர்கள் வாய்மொழி பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி இந்த தகவலை சேகரித்திருப்பதாக கூறியள்ளனர். அதாவது, பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கே சென்று இறந்தவர்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரத்தின்படி, சாலை விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 58.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலகளாவிய அளவில் 8.1 சதவீதம் ஆகும்.
இதில், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனங்கள் மோதியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 76,729-ஆக உள்ளது. இதேபோல், இருசக்கர வாகன விபத்தில் இறந்தவர்களின் 57,802 ஆகவும், சைக்கிளில் சென்றபோது விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,324 ஆகவும் இருக்கின்றது.

இது, அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தைக் காட்டிலும் மிக மிக அதிகம் ஆகும். உதாரணமாக, அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 2017ம் ஆண்டில் விபத்தால் இறந்த பாதசாரிகளின் எண்ணிக்கை 20,457 என்றும் சைக்கிளில் சென்றபோது விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,599 பேர் என்று கூறப்பட்டுள்ளது. இது போலீஸின் முதல் தகவல் அறிக்கையின்படி வெளியிட்ட தகவல் ஆகும்.

ஆகையால், போலீஸாரின் எஃப்ஐஆர் பதிவில் முறைகேடு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையின்படி இருசக்கர வாகன விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48,746 என கூறப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாக உள்ளது.

மேலும், தனியார் இந்த தகவலின்படி, உலகளவில் இந்தியா விபத்தால் இறப்போர்களின் பட்டியலில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. இந்த வேகம் பொருளாதார வளர்ச்சியிலேயே, வேலை வாய்ப்பிலோ உயர்ந்திருந்தால் இந்தியா வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொருளாதாரத்தைத் தவிர மற்ற வெறுக்கத்தக்க விவகாரங்களில் இந்தியா அதீத வளர்ச்சியைப் பெற்று வருவது கவலையளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்தியாவில் வசைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தால் இறப்பது 69 சதவீதமாக இருக்கின்றது. இது உலக நாடுகளைக் காட்டிலும் 33சதவீதம் அதிகம் ஆகும்.

அதிலும், விபத்தால் இருப்பவர்கள் பெரும்பாலும் 15 முதல் 39 வயதுடைய ஆண்களே அதிகமாக இருப்பதாக இந்த புள்ளி விவரம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு, லேன்செட் வெளியிட்ட ஒவ்வொரு தகவலும் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகின்ற வகையிலேயே இருக்கின்றது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு, இந்தியாவில் வாகனம் ஓட்டும் பல பேருக்கு முழுமையாக போக்குவரத்து விதிகள் தெரிவதில்லை.

இதன் விளைவு இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும், அதில் ஏற்படும் மரணங்களும் அதிக அளவில் இருந்து வருகிறது. இவை எல்லாம் அதிகம் மனித தவறுகளால் நடப்பது தான்.

இந்தியாவில் மிஷின் கோளாறால் நடக்கும் சாலை விபத்துக்களை விட மனித தவறுகளால் தான் அதிக சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான டிரைவர்கள் தங்கள் டிரைவிங் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் வாகனங்களை ஓட்டும் போது மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை இங்கே வழங்கியுள்ளோம். நீங்கள் டிரைவிங் செய்யும் போது இதை கட்டாயம் கடைபிடியுங்கள், விபத்துக்களில் இருந்து உங்களை நீச்சயம் இது காக்கும்.

செக் லிஸ்ட்
நீங்கள் தினமும் உங்கள் வீட்டிலோ அல்லது காரஜில் இருந்தோ காரை எடுக்கும் போது நீங்கள் சில செக் செய்ய வேண்டிய விஷயங்கள் அடங்கிய செக்லிஸ்டை உங்களுக்காக கீழே வழங்கியுள்ளோம். இதை தினமும் நீங்கள் செக் செய்ய வேண்டியது அவசியம். இதுவே உங்களை விபத்தில் இருந்து காப்பதுடன் காரை பராமரிப்பிற்கும் உதவும்.

1. பேட்டரி செக்-அப்
2.ஹெட்லைட் செக்அப்
3. ஆயில் செக்அப்
4. ரேடியேட்டரில் உள்ள கூலண்ட் செக்கப்
5. பிரேக்குகள் செக் செய்தல்
6. டயர்களில் காற்றின் அளவுகளை செக் செய்தல்
7.வாகனத்தில் உள்ள பியூலின் அளவுகளை செக் செய்தல்
8. இன்ஜின் கண்டிஷனை செக் செய்தல்,
9.வாகனம் பாதி வழியில் செல்லும்போது சிறிது பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கான டூல்ஸ் இவற்றை மறக்காமல் தினமும் செக் செய்துகொள்ளுங்கள் இதன் பிறகே வாகனத்தை இயக்க துவங்குவது தான் நல்லது.

2. சீட் பெல்ட்
காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது என்பது கட்டாயம், கார் விபத்தில சிக்கினால் இது உங்களை விபத்துக்களில் பெரிய அளவிற்கு காயம் இல்லாமல் காப்பாற்றும், உங்கள் காரை ஸ்டா்ட் செய்வதற்கு முன் கட்டாயம் சீட் பெல்டை அணிந்து கொள்ளுங்கள், உங்கள் காரை ஸ்டாப் செய்த பின்பே சீட் பெல்டை கழட்டுங்கள்.

இந்தியாவில் 1994ம் ஆண்டு பின் தயாரிக்கப்பட்ட கார்களில் முன் பக்க சீட்களில் சீட் பெல்ட் இருக்கும், 2002ம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட கார்களில் அனைத்து சீட்களிலும் சீட் பெல்ட் இருக்கும், நீங்கள் சீட் பெல்ட் இல்லாத பழைய மாடல் கார்களை ஓட்டி வந்தால் நீச்சயம் உங்கள் காருக்கு சீட் பெல்ட்டை பொருத்தி கொள்ளுங்கள்.

3. குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்
இந்தியாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றம். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடன் சாலையில் பயணிக்கும் மாற்ற வாகனத்தில் வருபவர்களுக்கும் ஆபத்து தான்.

இந்தியாவில் மது போதையால் ஏற்படும் விபத்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இருந்த ரக விபத்துகளில் உயிர் பலியின் எண்ணிக்கையும் அதிகம். இதனால் நீங்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

4. வாகனங்களை முந்துகையில் கவனம்
ரோட்டில் செல்லும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும், அது அந்த வாகன ஓட்டுநர்களையும், அவர்கள் வாகனங்களின் கண்டிஷன்களையும், பொருத்தது.

இதனால் வாகனங்களை ஓவர்டேக் செய்வது என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதற்கான விதிமுறை இருக்கிறது. நீங்கள் ஓவர் டேக் செய்யும் முன்பு உங்கள் வாகனத்தின் ரைட் சைடு இண்டிகேட்டரை ஆன் செய்து முன்னாள் வருபவருக்கும் பின்னால் வருபவருக்கும் நீங்கள் ஓவர் டேக் செய்யப்போவதை தெரிவியுங்கள்.

ஓவர் டேக் செய்யும் போது முன்னாள் செல்லும் வாகனத்திற்கு முன் பகுதியிலும், உங்கள் வாகனத்தின் பின் பகுதியிலும் போதிய அளவு இடம் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள், உங்கள் முன்னாள் செல்லும் வாகன ஓட்டுநர் நீங்கள் செல்லலாம் என சிக்னல் செய்வார் அதன் பின்பே நீங்கள் செல்லுங்கள்.

முக்கியமாக நடை பாதை பயணிகள் ரோட்டை கடக்கும் இடத்திற்கு முன்பாக 30 மீட்டர் வரையிலும், திருப்பங்களிலும் ஓவர் டேக் செய்வதை தவிர்க்கவும். ஓவர் டேக் செய்கையில் ஏற்படும் விபத்துக்களை மேல கூறியுள்ளதை பின் பற்றினாலே ஓரளவிற்கு அதை தவிர்க்கலாம்.

5. திரும்புகையில் கவனம்
நீங்கள் செல்லும் சாலையில் வேறு சாலைக்கு நீங்கள் திரும்ப வேண்டியது இருந்தாலோ, சாலையில் திருப்பங்கள் இருந்தாலோ நீங்கள் இன்டிகேட்டர் மூலம் உங்களுக்கு எதிரில் வரும் வாகனத்திற்கும், பின்னால் வரும் வாகனத்திற்கும் சிக்னலை திரும்பும் முன்னரே கொடுத்து விடுங்கள்.

மற்ற வாகன ஓட்டிகளுக்கு நீங்கள் செய்ய போகிறீர்கள் என கணிக்க முடியாது. நீங்கள் சிக்னல் செய்யாமல் திரும்பினால் மற்ற வாகனங்கள் தங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ள வாகனத்தின் மீது மோதும் அபாயம் உள்ளது. இதனால் இரண்டு வாகனத்தில் பயணிப்பவர்களுக்கும் பிரச்னைதான்.

6. செல்போன் பயன்படுத்தாதீர்
நீங்கள் வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்தாதீர்கள், இது கவனத்தை எளிதாக திசை திருப்பும், இது உங்கள் வாகனத்தை விபத்தில் சிக்க வழிவகுக்கும். செல்போன் பயன்படுத்துவது என்றால் செல்போன் பேசுவது மட்டுமல்ல செல்போனில் வரும் மெசேஜ்களை படிப்பது, சேட் செய்வது என எல்லாம் உங்களின் கவனத்தை திசை திருப்ப கூடியது தான் அவைகளும் இதில் உள்ளடங்கும்.

7. அதிக வேகம் வேண்டாம்
காரில் நீங்கள் அதிக வேகத்தில் செல்வது விபத்துக்களில் முக்கிய காரணமாக இருக்கிறது. நீங்கள் என்னதான் கவனமாக சென்றாலும் உங்கள் வேகத்தால் எதிரே வருபவர்கள நிலை தடுமாறி உங்கள் வாகனத்தில் மோதும் அபாயமும் இருக்கிறது. இது கார் ஓட்டும் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுடன் பயணிக்கும் சக பயணிகளுக்கும் இது ஆபத்தை விளைவிக்கும். சாலையில் மித வேகம் மிக நன்று.

8. சகாசம் காட்ட வேண்டாம்
நவீன காலமாக கார் மற்றும் பைக்கில் செல்லும் இளைஞர்கள் ரோட்டில் செல்லும் போது சாகம் காட்டுகின்றனர். பைக்கில் செல்வர்கள் முன் வீலை தூக்கியபடியே செல்வது, பைக்கை நிறுத்தும் போது பின் வீலை தூக்க வைப்பது, பைக்கில் செல்லும் போது பைக்கின் மேல் ஏறி நிற்பது என ரோட்டில் இருப்பவர்களின் பார்வை நம் மீது விழ வேண்டும் என கருதி இந்த சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

9. கார் இன்சூரன்ஸ்
நீங்கள் எவ்வளவு நல்ல டிரைவராகவும், சாலைவிதிகளை முழுமையாக பின்பற்றும் டிரைவராகவும் இருந்தாலும், உங்கள் காருக்கு இன்சூரன்ஸ் என்பது முக்கியம் நீங்கள் தவறு செய்யாவிட்டாலும், மற்றவர்கள் செய்யும் தவறுகளால் கூட விபத்துக்கள் நடக்கலாம்.
அவ்வாறு விபத்துக்கள் நடந்தால் அதில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க கார் இன்சூரன்ஸ் உதவும், ஆகையால் காரின் இன்சூரன்சை சரியான நேரத்தில் புதுப்பிப்பது, என்பது மிகவு்ம முக்கிமானது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை..


Click it and Unblock the Notifications








