விலை எவ்வளவுனு சொல்லவே இல்லையே... மனிதர்கள் இருந்த இடத்தில் இனி இதுதான்!!
மனித ரோபோட்கள் உருவாக்கப்பட்ட காலம் போய், ரோபோட்களை விலங்குகளின் வடிவத்தில் உருவாக்கும் பணிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். குறிப்பாக, மனிதனுடன் நெருங்கி பழகும் நாய் தோற்றத்திலான ரோபோட்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதாவது, உண்மையான நாய்களை போலவே சிறு, சிறு வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடியதாக நாய் ரோபோட்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட நாய் ரோபோட் ஒன்று இங்கிலாந்தில் செயல்படும் பிரபலமான பிரிட்டிஷ் கார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இங்கிலாந்தின் கோவெண்ட்ரியில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டுவரும் உலகளவில் பிரபலமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் நாய் ரோபோட்டை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த ரோபோட்டை உருவாக்கியது போஸ்டன் டைனாமிக்ஸ் (Boston Dynamics). இது ஒரு அமெரிக்க ரோபோட்டிக் டிசைன் நிறுவனம் ஆகும். ஆனால் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

இவ்வாறான ரோபோட்களை ரோவர் என அழைக்கின்றனர். அதாவது, இவற்றால் பேச முடியாது; கொடுக்கும் வேலையை இடைவிடாது செய்யும். இதற்கிடையில், கதவுகளை திறப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது என அடிப்படையான விஷயங்களையும் செய்யும். மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் எளிமையாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாய் ரோபோட்டை வைத்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்ய போவதில்லை.
தொழிற்சாலையில் ஏற்படும் மெஷின் பிரச்சனைகளை கண்டறிந்து தெரிவிக்கும் சோதனை பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. மனிதர்கள் மூலம் சோதனை செய்வதை காட்டிலும் இவ்வாறான ரோபோட்களால் சோதனை செய்யும்போது சிறு சிறு மனித பிழைகள் கூட தவிர்க்கப்படும். இந்த நாய் ரோபோட் தன்னுள் சேமித்து வைக்கும் தரவுகளை ஆராய்ந்து பொறியியலாளர்கள் அதன்பின் அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.

முக்கியமாக, தொழிற்சாலையை சுற்றிலும் ஏற்படும் வாயு கசிவை கண்டறிந்து அதுகுறித்து தகவல் தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகளுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதால், பேட்டரியின் நலனை கருதி வெப்பநிலையை அளவிடும் சென்சார்கள் இந்த ரோபோட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டில் 50 வோல்ட் பேட்டரி உள்ளது.
ஓய்வு நேரத்தில் தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் என்பதால், இந்த ரோபோட்டை பல நேரத்திற்கு பயன்படுத்த முடியும். ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாகவே இந்த நாய் ரோபோட்டை ஜேஎல்ஆர் நிறுவனம் வாங்கியுள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை கொண்ட இந்த ரோபோட்டில் ஏகப்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோட் குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டெக்னிக்கல் பிராஜெக்ட் மேனேஜர் டாக்டர் கோன்ஜாலோ எஜ்ரயூ-ரினால்ட்டினி கூறுகையில், "இது ஜாகுவார் லேண்ட் ரோவரின் மறுகற்பனை யுக்தியின் திறவுக்கோல். எங்கள் பொறியியலாளர்கள் பாதுகாப்பாகவும், புத்திச்சாலித்தனமாகவும் வேலை செய்ய உதவுவது; பாஸ்டன் டைனாமிக்ஸ் உடன் இது போன்ற கூட்டணி முக்கியமானது.
2030ஆம் ஆண்டிற்குள் எங்கள் ரேஞ்ச் ரோவர், டிஃபெண்டர், டிஸ்கவரி மற்றும் ஜாகுவார் பிராண்ட் கார்களை எலக்ட்ரிக்காக மாற்றுவதற்கான எங்கள் இலட்சியத்தை நனவாக்குவதில் இவை இன்றியமையாதவை என்பது மட்டுமல்லாமல், விற்பனை நிறுத்தப்படும் வாகனங்களும் மிக சிறந்த இவி பேட்டரியை மட்டுமே கொண்டிருப்பதை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த நாய் ரோபோட்டை மேலும் அதிக எண்ணிக்கையில் வாங்கி தனது வணிகம் முழுவதிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாம். ஜேஎல்ஆர் தொழிற்சாலையில் எலக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்படுவதால், அதற்கேற்ப தொழிற்சாலையின் தோற்றத்தையும் மாற்றுவதற்கு இவ்வாறான நாய் ரோபோட் மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









