அதிசயம்! இன்னோவா காருக்குள் விழுந்த பாறை! 10 நிமிஷத்துக்கு முன் செஞ்ச காரியத்தால் உயிர் தப்பிய பயணி
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்குள் பாறை ஒன்று விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

உயிருக்கு 100 சதவீதம் உத்தரவாதம் தரும் எந்தவொரு காரும் இந்த உலகில் கிடையாது. அதற்காக கார்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரக்கூடாது, பாதுகாப்பற்ற கார்களை வாங்கலாம் என அர்த்தம் கிடையாது. ஒருவர் கார் வாங்கும்போது, பாதுகாப்பு ரேட்டிங்கில் தலைசிறந்து விளங்கும் மற்றும் சிறப்பான கட்டுமான தரத்தை கொண்டிருக்கும் மாடல்களைதான் தேர்ந்து எடுக்க வேண்டும்.

அப்படி இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் வலிமையான கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). டொயோட்டா நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை காரணமாக இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த காரின் வலிமையும் அதன் பிரபலத்திற்கு ஒரு காரணம்.

அப்படிப்பட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ஒன்று பயங்கரமான விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் சங்லா பள்ளத்தாக்கு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று சிறிய பாறை ஒன்று, உயரத்தில் இருந்து கீழே சரிந்து டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மேற்கூரை மீது விழுந்துள்ளது.

அத்துடன் மேற்கூரையை துளைத்து கொண்டு, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பின் பக்க வலது இருக்கையின் மீது அந்த பாறை விழுந்தது. இதனால் காரின் மேற்கூரையில் ஓட்டையும் ஏற்பட்டது. ஆனால் பாறை விழுந்த இருக்கையில், அதிர்ஷ்டவசமாக யாரும் அமர்ந்திருக்கவில்லை. அந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர், இந்த சம்பவம் நடப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்தான் கீழே இறங்கியிருந்தார்.

சம்பவம் நடந்தபோது அவர் மட்டும் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தால், படுகாயம் அடைந்திருக்க கூடும். அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் பாறை விழுந்த சமயத்தில், காருக்கு உள்ளே ஆட்கள் இருக்கவே செய்தனர். அவர்கள் வேறு இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

பாறை விழுந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சற்றும் தாமதம் செய்யாமல், உடனடியாக கீழே இறங்கினர். இதன்பின் காருக்கு ஏற்பட்டிருந்த சேதத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். பெரும் விசையுடன் பாறை விழுந்த காரணத்தால், இருக்கை கிழிந்து விட்டது. அத்துடன் கதவிலும் சேதம் ஏற்பட்டது. இதுதவிர முன்பக்க விண்டுஷீல்டிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அது எவ்வாறு நிகழ்ந்தது? என்பது உறுதி செய்யப்படவில்லை. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மீது பாறை விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ, அருண் பன்வார் என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சம்பவம் நடைபெற்ற உடனே காரின் உரிமையாளர், டொயோட்டா டீலர்ஷிப்பை அணுகினார். இதற்கு அவர்கள் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்தனர். காரின் சேதமடைந்த பகுதிகளை புகைப்படம் எடுத்து கொண்ட அவர்கள், இது இயற்கையாக நடந்த விபத்து என்பதால், இன்சூரன்ஸ் கிடைக்கும் என உறுதியளித்தனர்.

சேதம் அடைந்த அனைத்து பாகங்களையும் மாற்றி கொள்ள முடியும் எனவும் டொயோட்டா டீலர்ஷிப் உறுதி வழங்கியுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் உடனடி ரெஸ்பான்ஸிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதன் காரணமாகதான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








