நாலரை கோடி ரூபா காரை நிறுத்திய இளைஞர்கள்! கண்ணாடி கீழே இறங்கியதும் ஒறஞ்சு போயிட்டாங்க! உள்ளே இருந்தது அவரா!
இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும், மிகவும் விலை உயர்ந்த கார்களில் வலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு ரோஹித் ஷர்மாவும் (Rohit Sharma) விதிவிலக்கு அல்ல. ரோஹித் ஷர்மாவின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகப்பெரியது. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி எல்டபிள்யூபி (Range Rover Autobiography LWB), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி (Mercedes Benz GLS 400d) உள்ளிட்ட கார்களை எல்லாம் ரோஹித் ஷர்மா வைத்துள்ளார். அத்துடன் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரும், ரோஹித் ஷர்மாவின் கார் கலெக்ஸனில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
லம்போர்கினி உருஸ் காரில், ரோஹித் ஷர்மா வலம் வந்ததை கடந்த காலங்களில் நாம் பல முறை பார்த்துள்ளோம். வெகு சமீபத்தில் கூட, ரோஹித் ஷர்மா இந்த காரில் வந்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் அதிகமாக பரவியது. இந்த வரிசையில் தற்போது மற்றொரு வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், ரோஹித் ஷர்மா லம்போர்கினி உருஸ் காரை ஓட்டி கொண்டு வந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. டிரைவர் இருக்கையில் ரோஹித் ஷர்மா அமர்ந்திருக்க ரசிகர்கள் சிலர், அவர் காரை நிறுத்தியுள்ளனர். இதில் ஒரு இளம்பெண்ணும் அடங்குவார். அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், ரோகித் ஷர்மாவும் காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது காரின் ஜன்னல் கண்ணாடிக்கு அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பிறந்த நாள் என அங்கிருந்தவர்கள் கூறினர். உடனே ரோகித் ஷர்மா அந்த இளம்பெண்ணுக்கு கை கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார். இதன் பின் பின்னால் நின்ற வாகனங்கள் ஹாரன் அடிக்கவே, ரோகித் ஷர்மா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

ரோகித் ஷர்மாவின் இந்த செயலை, சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். உண்மையில் ரோகித் ஷர்மாவிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற இந்த இளம்பெண்ணுக்கு, இது வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாத சம்பவமாக இருக்கும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.
ரோகித் ஷர்மாவின் இந்த நீல நிற லம்போர்கினி உருஸ் கார், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, நிறைய இடங்களுக்கு அவர் இந்த காரில் வந்துள்ளார். எனவே உள்ளே ரோகித் ஷர்மா இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான், ரசிகர்கள் காரை நிறுத்தியிருக்க கூடும் என தெரிகிறது.
ரோகித் ஷர்மாவும் எந்த ஈகோவும் இல்லாமல், காரை நிறுத்தி, இளம்பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வந்த லம்போர்கினி உருஸ் காரின் மதிப்பு சுமார் 4.50 கோடி ரூபாய் என தெரிகிறது. இந்த காரில் மிகவும் சக்தி வாய்ந்த 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 650 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு இஸட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும்.
பொதுவாக இந்திய சாலைகளில் லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை ஓட்டுவதில், நடைமுறை சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் உருஸ் அப்படிப்பட்டது கிடையாது. அது எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலரும் லம்போர்கினி உருஸ் காரை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரோகித் ஷர்மாவின் இந்த செயல் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். அவர் ஈகோ இல்லாதவர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது என நாங்கள் கருதுகிறோம்.
ஏனெனில் இது அந்த வழியாக வரும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த வைரல் வீடியோவில் கூட, பின்னால் நிறைய வாகனங்கள் ஹாரன் அடிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே பிரபலங்களை அணுகுவதில், ரசிகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








