பண மோசடியில் கைதாகிய நிறுவனர்.... அமலாக்க துறைக்கு சோதனையின்போது காத்திருந்த அதிர்ச்சி! ரூ.60 கோடியில் கார்கள்
எம்3எம் குழுமத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த குழும உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ரூ.60 கோடி மதிப்பிலான லக்சரி கார்களை மத்திய அமலாக்க துறை பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
குருக்கிராம் நகரத்தை சேர்ந்த எம்3எம் என்ற ரியல்-எஸ்டேட் குழுமத்தின் நிறுவனர் ரூப் குமார் பன்சால் பண மோசடி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, டெல்லி மற்றும் குருக்கிராம் நகரங்களில் இருக்கும் எம்3எம் குழுத்திற்கு சொந்தமான 7 இடங்களில் அதிரடியாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.

இதன் மூலமாக ரூ.60 கோடி மதிப்பிலான சொகுசு லக்சரி கார்களை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 17 உயர் தரத்திலான லக்சரி கார்கள் எம்3எம் குழுமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரோல்ஸ்-ராய்ஸ், ஃபெராரி, லம்போர்கினி, லேண்ட் ரோவர், பெண்ட்லீ, மெர்சிடிஸ்-மேபக் நிறுவனங்களின் விலையுயர்ந்த கார்கள் அடங்குகின்றன.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எம்3எம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ததில் ரூ.5.75 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.15 இலட்சம் பணத்தை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அதிரடி சோதனைக்கு எம்3எம் க்ரூப் மட்டுமின்றி, மற்றொரு பிரபலமான ரியல்-எஸ்டேட் குழுமமான ஐ.ஆர்.இ.ஓ (IREO)-வும் ஆளாகி உள்ளது.
பண மோசடி தடுப்பு சட்டம் (PMLA)-இன் கீழ் கடந்த ஜூன் 1ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் IREO குழுமத்தின் மீது ஏகப்பட்ட எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அமலாக்க துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமலாக்க துறை நடத்திய விசாரணையில் எம்3எம் குழுமத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான கோடிகள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பண பரிவர்த்தனைகள் வளர்ச்சி மேம்பாட்டுக்கானவைகளாக IREO குழுமத்தின் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்3எம் குழுமத்தின் நிலங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். எம்3எம் குழுமம் முதலில் அந்த நிலத்தின் மேம்பாட்டு உரிமையை 5 ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.10 கோடிக்கு விற்றது. அந்த 5 ஷெல் நிறுவனங்களும் தொடர்பில்லாத நிறுவனங்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவை ஐந்தும் எம்3எம் குழுமத்தின் கீழ் இயங்குவது விசாரணையில் தெரியவந்தது" என்றார்.
பண மோசடிகள் பெரும்பாலும் லக்சரி கார்களை வைத்தே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, மோசடி செய்து பெறப்படும் பணத்தை லக்சரி காராக மோசடிக்காரர்கள் மாற்றிவிடுவதாகவும், இதனால் அவர்கள் மீது சந்தேகம் உடனடியாக ஏற்படுவதில்லை என்றும் அமலாக்க துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் லக்சரி கார்களை வாங்குவதற்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பதை அறிவது கடினம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மோசடி செய்து பெறப்படும் கள்ள பணத்தை எந்த வழியில் செலவு செய்தாலும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறையினரால் கண்டுப்பிடித்துவிட முடியும். சில சமயங்களில் இது கடினமாக அமைந்தாலும், எல்லா விதமான உண்மையையும் வெளியே கொண்டுவர அமலாக்க துறையினர் ஒவ்வொரு விதமான யுக்திகளை கையாளுகின்றனர்.


Click it and Unblock the Notifications