நயன்தாரா இந்த பிறந்தநாளை மறக்கவே மாட்டார்... பரிசாக வழங்கப்பட்டிருக்கும் கார் அப்படிப்பட்டது!!
இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர்' (Rolls-Royce Black Badge Spectre) காரை பரிசளித்துள்ளார். இந்த புதிய ஆடம்பர எலெக்ட்ரிக் காரில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி தங்களது இரட்டை குழந்தைகள் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
விக்னேஷ் சிவன் இந்த விலையுயர்ந்த அல்ட்ரா-லக்சரி கார் பரிசை நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18 அன்று வழங்கியுள்ளார். மேலும், இந்தப் பரிசின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன், "உன்னை மிகவும் ஆழமாக காதலிக்கிறேன் என் அழகி. உனது உயிர், உலகு மற்றும் உனது அன்புக்குரியோர் சார்பாக இந்த அன்புப் பரிசை வழங்குகிறோம்.

இந்த அற்புதமான தருணங்களை எங்களுக்கு வழங்கிய பிரபஞ்சத்திற்கும், கடவுளுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள். எங்களது வாழ்க்கை முழுவதும் அன்பும், நேர்மறையும், நல்லெண்ணமும் நிறைந்திருக்க வேண்டும்," என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். பல வருடங்கள் காதலித்து 2022-ல் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாராவின் பிறந்தநாளுக்கு ஆடம்பர கார்களைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
2023இல் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach) காரையும், 2024இல் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (GLS 600) காரையும் பரிசளித்து இருந்தார். இந்த வரிசையில் தற்போது 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் இணைந்துள்ளது.

'ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்' என்பது ஒரு அதிநவீன எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதில் 'பிளாக் பேட்ஜ்' வகை மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செயல்திறன்மிக்க மாடலாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.9.50 கோடி ஆகும். இந்த கார், 2 கதவுகள் மற்றும் 4 இருக்கைகள் கொண்ட கூபே ரகத்தைச் சேர்ந்தது. இது 576 குதிரைத்திறன் மற்றும் 900 என்.எம் டார்க் திறனை கொண்ட சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்க 102kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்தக் கார் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

முழுக்க முழுக்க ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் அலுமினியம் ஸ்பேஸ் சட்டகத்தில் உருவாக்கப்படும் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரில் முன் பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. காரின் முழு செயல்படுதிறனை பெற காருக்குள் ஸ்டேரிங் சக்கரத்தில் 'இன்ஃபினிட்டி மோட்' என்கிற ஸ்பெஷல் பொத்தான் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை நயன்தாரா தொடர்ந்து திரைப்படத் துறையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, யாஷ் போன்ற நட்சத்திரங்களுடன் புதிய படங்களில் நடித்து வருவதற்கு மத்தியில் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் எளிமையாக நயன்தாரா கொண்டாடியுள்ளார். இருப்பினும், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் பிளாக்-பேட்ஜ் ஸ்பெக்டர் கார் இணைந்த பிறகு, இதனை எளிமையான கொண்டாட்டம் என சொல்ல முடியாது.


Click it and Unblock the Notifications









