உலகத்துலேயே 3 பேரிடம் மட்டுமே இருக்கும் கார் மாடல்.. அம்பானியை விட முரட்டுத்தனமான கார் காதலரா இருப்பாங்களோ!!
இந்த ஒட்டுமொத்த உலகத்திலும் வெறும் மூன்று பேரிடம் மட்டுமே ஓர் கார் மாடல் இருப்பது பற்றிய ஆச்சரியமான தகவல் வெளியாகி இருக்கின்றது. அது எந்த கார் மாடல் என்கிற கேள்வியே நம்மில் பலருக்கு தற்போது எழும்பி உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பாக கருதப்படும் போட் டெயில் (Boat Tail) கார் மாடல்தான் அதுவாகும். ரோல்ஸ் ராய்ஸ் விற்பனைச் செய்யும் கார் மாடல்கள் பல நம்முடைய இந்தியர்கள் வசம் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி இடத்தில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பத்துக்கும் அதிகமாக உள்ளன.
இதேபோல், அதானி போன்ற மற்ற பணக்காரர்களிடத்திலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த போட் டெயில் இந்தியர்கள் ஒருவரிடத்திலும் பயன்பாட்டில் இல்லை. அதேவேளையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த தயாரிப்பே உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலும் கூட.

இதன் ஒரே ஒரு யூனிட்டு மட்டுமே 28 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 234 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இத்தகைய அதீத விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரை வைத்திருப்போரின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாகவே இருக்கின்றது.
இந்த ஒட்டுமொத்த உலகத்திலும் வெறும் மூன்று பேர் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் காரை பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், இதுவரை இந்த கார் மாடலின் மூன்று யூனிட்டுகளை மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும், ரோல்ஸ் ராய்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இந்த கார் மாடலின் ஒரு யூனிட்டை தயாரிக்கவே அந்நிறுவனத்திற்கு 4 ஆண்டுகள் ஆகும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதனாலேயே மற்றவர்களால் இந்த காரை வாங்க முடியாத சூழல் நிலவுகின்றது. மேலும், இந்த காரின் அசெம்பிளில் மொத்தமாக 1,813 பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அனைத்தும் மெஷின் உதவியின்றி கைகளால் தயார் செய்யப்பட்டவை என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான், மிக மிக நீண்ட காலத்தை போட் டெயில்-இன் ஒரு யூனிட் தயாரிக்கவே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இதுவும் இந்த காரை குறைவான நபர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கான மற்றுமொரு முக்கியமான காரணமாக உள்ளது. ஊடகங்களின் தகவலின்படி இந்த கார் மாடலின் முதல் உரிமையாளராக உலக புகழ்பெற்ற ராப்பர் ஜே-ஸீ மற்றும் அவரது மனைவி பெயோன்ஸ் ஆகியோரே இருக்கின்றனர். இருவரும் மிகப் பெரிய செல்வம் படைத்த நபர்கள் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

இரண்டாவதாக முத்து துறையில் கோளோச்சிக் காணப்படும் ஓர் நபரே இருக்கின்றார். ஆனால், அவரின் அடையாளத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. மூன்றாவதாக, அர்ஜென்டினா கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் மவுரோ ஐகார்டி இருக்கின்றார். இந்த மூன்று பேரிடத்தில் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலான போட் டெயில் பயன்பாட்டில் இருக்கின்றது.
இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பல்வேறு தனித்துவமான அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அதில் மிக முக்கியமானதாக இந்த காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் குடை உள்ளது. இது விரிவடையும் திறன் கொண்ட குடையாகும். இந்த குடை நிழல் இல்லா இடங்களில் கூட நிழலை ஏற்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.
இந்த குடைக்கு கீழே அமர்ந்தபடி கடற்கரை போன்ற இயற்கையை அமைதியாக அமர்ந்து ரசிக்க முடியும். இதுதவிர, இந்த காரில் டேபிள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதைக் கொண்ட மினி டைனிங் மேடையாகவும் காரை மாற்றிக் கொள்ள முடியும். இதுபோல இன்னும் பல தனித்துவமான வசதிகளையே ரோல்ஸ் ராய்ஸ் போட் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
அதேவேளையில், இந்த காரில் 4 பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். இந்த நான்கு பேரும் மிகவும் தனித்துவமான மற்றும் மிகுந்த சொகுசான ரைடு எக்ஸ்பீரியன்ஸைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. மேலும், பயணத்தின்போது பார்ட்டி செய்துக் கொண்டேவும் பயணித்துக் கொள்ள முடியும்.
இதற்கேற்ப சேம்பைனை வைத்துக் கொள்ள ஏதுவாக சிறிய குளிர்சாதன பெட்டியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் ட்வின் டர்போ 6.75 லிட்டர் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சினே ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை மிக அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் நபராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். எனவே சீக்கிரமே அவர் போட் டெயில் காரை வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவரிடத்தில் இப்போதைய நிலவரப்படி 200க்கும் அதிகமான ஆடம்பர மற்றும் விலை உயரிய கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









