ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கு உண்டான மரியாதை போச்சே இதனால... கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கியது இதற்காகவா?
ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls Royce) கார் ஒன்று டெல்லியில் சாலையோர கடையில் சுத்தம் செய்யப்பட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் என்றாலே பிரம்மாண்டம் என்று அர்த்தம். ஏனெனில், அந்த அளவிற்கு மற்ற கார்களை காட்டிலும் பிரம்மாண்டமானவைகளாக ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே, இந்த கார்களின் விலைகள் பல கோடிகளில் உள்ளன. இதன் காரணமாக, எல்லாராலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்க முடிவதில்லை.

செல்வ, செழிப்பான பணக்காரர்கள் மட்டுமே ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்குவதை பார்த்து வருகிறோம். ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்கள் தங்களது கார்களை பெரும்பாலும் வீட்டிலேயே சுத்தம் செய்து கொள்கின்றனர். ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கும் அளவிற்கு பணம் உள்ளவர்களுக்கு வீட்டிலேயே கார் வாஷிங் பகுதியை உருவாக்குவது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது.
ரோல்ஸ்-ராய்ஸ் காரை வைத்திருக்கும் சில செல்வந்தர்கள் தங்களது காரை உயர் தரத்திலான கார் வாஷிங் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். ஏனெனில், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் விலையை போல் அவற்றிற்கான பாகங்களின் விலைகளும் அதிகம். ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அவற்றை சரி செய்வதற்கு பல இலட்சங்கள் வரையில் கூட செலவாகுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால், ரோல்ஸ்-ராய்ஸ் கார் உரிமையாளர்கள் எப்போதுமே கொஞ்சம் கவனமாகவே செயல்படுவர். கார் வாஷிங் விஷயத்திலும் கூட. ஆனால், டெல்லியில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் உரிமையாளர் ஒருவர் தனது காரை சாலையோர கார் வாஷிங் கடையில் கொடுத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது.
பிரதான் ஜி வெட்டிங் கார்ஸ் மீரட் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்து பார்த்ததில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு லக்சரி கார்களை வாடகைக்கு வழங்குவதை பிரதான் ஜி வெட்டிங் கார்ஸ் மீரட் நிறுவனம் தொழிலாக பார்த்து வருகிறது.
இருப்பினும், வீடியோவில் காட்டப்படும் வெள்ளை நிறத்திலான ரோல்ஸ்-ராய்ஸ் கார் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானதா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த வீடியோவில் நாம் பார்ப்பது, ரோல்ஸ்-ராய்ஸின் கோஸ்ட் கார் ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் உலகம் முழுவதும் பிரபலமானது மற்றும் இந்த காருக்கு பல்வேறு நாடுகளில் உரிமையாளர்கள் உள்ளனர்.
கார் வாஷிங் நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் மிகவும் சகதியாகவும், அழுக்காகவும் இருந்துள்ளது. முதல் வாஷிலேயே காரில் இருந்த அழுக்குகள் நீங்கின. இருப்பினும், முதல் வாஷிலேயே காரின் அனைத்து அழுக்குகளும் முழுமையாக நீங்கியிருக்கும் என கூறிவிட முடியாது. அதேபோல், இவ்வாறான சாலையோர கார் வாஷிங் கடைகளில் உங்களது கார் முறையாக பராமரிக்கப்படும் என உறுதியாக கூற முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற கார்களை காட்டிலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை கழுவி சுத்தம் செய்யும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இதனாலேயே, பெரும்பாலான ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஓனர்கள் தங்களது கார்களை கழுவுவதற்கு கூட அதிக பணத்தை செலவு செய்கின்றனர். ஆனால், இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் சாலையோர கார் வாஷிங் கடையில் சுத்தம் செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









