மழை நீரில் பிரேக் டவுன் ஆகி மானத்தை வாங்கிய 10 கோடி ரூபா கார்! இதுக்கு மாருதி ஆல்டோ எவ்வளவோ பரவால!
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், சாலைகளின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலம் வந்து விட்டால், சாலைகள் வெள்ளக்காடாக மாறி விடுகின்றன. போதுமான வடிகால் வசதிகள் இல்லாததுதான் இதற்கு காரணம். சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகனங்கள் பயணிப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஒரு சில சமயங்களில் மிகவும் விலை உயர்ந்த வாகனங்கள் கூட, சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பாதிக்கப்பட்டு, பிரேக் டவுன் ஆகி விடுகின்றன. தலைநகர் டெல்லியில் கடந்த வருடம் நடந்த சம்பவம் இதற்கு ஒரு உதாரணம். அப்போது சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II (Rolls Royce Ghost Series II) பிரேக் டவுன் ஆனது.

இந்த வரிசையில் மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II கார், மழை நீரில் சிக்கி, பிரேக் டவுன் ஆகியுள்ளது. இம்முறை சம்பவம் நிகழ்ந்தது, டெல்லியில் அல்ல. கொல்கத்தாவில். மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
அப்படி மழை நீர் சூழ்ந்திருந்த ஒரு சாலையில் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II கார், திடீரென பிரேக் டவுன் ஆகி அப்படியே நின்று விட்டது. இந்த புகைப்படங்கள், Car Crazy India என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II கார் பிரேக் டவுன் ஆனதால், அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 8.95 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.52 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் தற்போது கொல்கத்தாவில் மழை நீரில் சிக்கி பிரேக் டவுன் ஆன ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II கார் எந்த வருட மாடல், அது யாருடையது? என்பது போன்ற தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இவ்வளவு விலை உயர்ந்த கார், பிரேக் டவுன் ஆகி நின்றிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ள சாலைகளில் கார்களை இயக்குவதை தவிர்ப்பது நல்லது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ள சாலையை பார்த்தால், உடனே காரை நிறுத்தி விடுங்கள். சற்று தொலைவாக இருந்தாலும், வேறு வழியில் சுற்றி செல்வது சிறந்தது. மழை நீர் தேங்கிய சாலையில் மேற்கொண்டு காரை இயக்க வேண்டாம்.
ஒரு சிலர் தங்கள் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகம் என கூறிக்கொண்டு, மழை நீர் தேங்கிய சாலையில், மேற்கொண்டு பயணம் செய்கின்றனர். இது தவறானது. ஏனெனில் சாலையில் எவ்வளவு ஆழத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது? என்பதை கணிப்பது மிகவும் கடினமானது. ஒரு வேளை உங்கள் கார் மூழ்கினால், அதன் காரணமாக இன்ஜின் சேதம் அடையலாம்.
கூடவே எலெக்ட்ரானிக்ஸ் பாகங்களும் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு வேளை இப்படி நடந்து விட்டால், காரை சரி செய்ய நீங்கள் பெரும் தொகையை செலவு செய்ய நேரிடும். அதீத நம்பிக்கை கொண்ட ஒரு சிலர், அதிக அளவு மழை நீர் தேங்கிய சாலையை, காரில் கடக்க பல முறை முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் இதில் பெரும்பாலான நேரங்களில், கார் நடு வழியிலேயே பிரேக் டவுன் ஆகி நின்று போயுள்ளது. எனவே கவனமாக செயல்படுவதே நன்மை பயக்கும். இதற்கிடையே கொல்கத்தாவில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II கார் பிரேக் டவுன் ஆன சம்பவத்தை தொடர்ந்து, அரசாங்கத்தை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சாலை வரி, பதிவு கட்டணம், வருமான வரி மற்றும் இன்ன பிற மறைமுக வரிகளை எல்லாம் செலுத்திய பிறகும் கூட, அரசாங்கத்தால் நல்ல சாலை வசதியை ஏற்படுத்தி தர முடியவில்லை என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெட்டிசன்களின் இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் மாருதி ஆல்டோ (Maruti Alto) காரை பயன்படுத்தும்படி கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








