கெத்தா வீடியோ போட வேண்டியது, அப்புறம் மன்னிப்பு வீடியோவும் போட வேண்டியது! லைக்குகளை பெற இதே வேலையா போச்சு!!
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெறுவதற்காக சமீப காலமாக சிலர் செய்யும் காரியம் எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. அத்தகையவர்களை திருத்தும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுப்பட்டுக் கொண்டிருந்தாலும், புதுசு, புதுசாக வந்துக் கொண்டுத்தான் இருக்கின்றனர். அந்த வகையில், நடுரோட்டில் மேலாடையை கழற்றிவிட்டு பைக் ஓட்டிய இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெறுவதற்காக இந்த இளைஞர்கள் செய்த காரியம் தற்போது அவர்களுக்கே ஆபத்தில் சென்று முடிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்கிற எண்ணம் நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. குறிப்பாக, வட இந்திய இளைஞர்கள் தங்களது உடலை எப்போதும் வலிமையாக வைத்திருப்பதில் கூடுதல் கவனம் செலுத்த கூடியவர்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஓவர் நம்பிக்கையை கொடுத்து, தான் என்கிற கர்வத்தை உண்டாக்குகிறது.

அதன் வெளிப்பாடாக, உத்தர பிரதேசம் மாநிலத்தில் இரு இளைஞர்கள் தங்களது உடைமைகளை கழற்றிவிட்டு பொது சாலையில் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை ஓட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் பைக் ஓடிக் கொண்டிருக்கும் போதே எழுந்து நின்று தனது ஆர்ம்ஸை மடக்கி காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு பைக் ஓடி கொண்டிருக்கும்போதே எழுந்து நின்றப்படி பயணம் செய்வது ஆபத்தானது ஆகும். பேலன்ஸ் கொஞ்சம் மிஸ் ஆகினாலும், சாலையில் பைக் கவிழ்வதற்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சாலையில் இவ்வாறு சட்டை அணியாமல் பைக் ஓட்டுவதும் தவறாகும். ஏனெனில், இது மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கலாம். இதன் மூலமாகவும் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, பொது வெளியில் இவ்வாறு அநாகரிகமாக நடந்துக் கொள்வது குற்றமாகும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட சம்பந்தப்பட்ட உ.பி போலீசார் இந்த இளைஞர்களை கைது செய்திருப்பதுடன், பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவம் உ.பி மாநிலத்தில் கோட்வாலி பில்குவா என்கிற பகுதியின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-9இல் நடைபெற்றுள்ளது.
கோட்வாலி போலீசார் இந்த செயலில் பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கையும் மற்றும் அதன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்ட மற்றொரு நபர் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கூறியதுபோல், சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமே பலரை இவ்வாறு செய்ய வைக்கிறது.

இதேபோன்று, சமீபத்தில் ஒருவர் சாலையில் இயங்கிக் கொண்டிருந்த தனது ஹூண்டாய் காரின் சன்ரூஃப் வழியாக வெளியே வந்து, தனது பனியனை கழற்றி தனது ஆர்ம்ஸை மடக்கி காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதில் இருந்து, இவ்வாறு நடந்துக் கொள்வது தவறு என்பது பலருக்கு தெரியவில்லை என்பதை அறிய முடிகிறது. அதாவது, சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
இவ்வாறான வீடியோக்களை பார்க்கும் மற்ற இளைஞர்களும் இதேபோன்று சாலையில் செய்து பார்க்க முயலுவர். அதனால்தான், இவ்வாறான செயல்களில் ஈடுப்படுபவர்களை தேடி, தேடி சென்று போலீசார் கைது செய்கின்றனர். இதற்காகவே போலீஸ் துறையில் தனியாக பிரிவு உள்ளதை பலரும் மறந்துவிடுகின்றனர். இவ்வாறான வீடியோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை போக்குவரத்து ஆனது மிக ஒழுக்கமாக இருக்க வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், சாலையில் பல உயிர்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. அத்தகைய இடத்தில் இவ்வாறான செயல்களை செய்வது தவறாகும். குறிப்பாக, இவ்வாறு சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெற நினைப்பவர்கள் முதலாவதாக தேர்வு செய்வது நன்கு பரந்து விரிந்த விரைவுச்சாலைகள் ஆகவே உள்ளது. பல இலட்ச ரூபாய் காரு... உனக்கு முகம் பார்க்க சலூன் கடையா... என்கிற காமெடி சீன் தான் ஞாபகத்திற்கு வருகிறது.


Click it and Unblock the Notifications









