இதைதான் இத்தன வருஷமா கஷ்டமான பைக் பயணம்னு சொன்னீர்களா... சல்லி சல்லியா உடைத்த வயதான தம்பதி!!
உழைக்கும் வயதில் நன்றாக உழைத்து விட்டு முதிய வயதில் ஜாலியாக உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோரின் திட்டமாக இருக்கும். ஆனால், முதிய வயதில் ஊர் சுற்றும் அளவிற்கு அந்த நேரத்தில் நமது உடல் வலிமை உடன் இருப்பதில்லை என்பதுதான் வாழ்க்கை நமக்கு வைக்கும் செக்மேட் ஆகும். இருப்பினும், இங்கு ஒரு வயதான தம்பதி சுமார் 18 ஆயிரம் அடி உயரத்திற்கு மலை ஏறி சுற்றி பார்த்து உள்ளனர். அதுவும் எதில் தெரியுமா? காரோ அல்லது வேனோ கிடையாது, ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கில் ஆகும். யார் இந்த வயதான தம்பதி என்பதையும், அவர்கள் பயன்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்கை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கார் அல்லது வேனில் பயணம் செய்வதை காட்டிலும் பைக்கில் பயணம் செய்வது முற்றிலும் வேறுப்பட்டது மற்றும் கடினமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். காரை ஓட்டுபவர்களை விட பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்கள் அதிக அசவுகரியங்களை சந்திக்கின்றனர். அப்படியென்றால், பைக்கை ஓட்டுபவர்கள் எந்த அளவிற்கு கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர் என்பதை யோசித்து பாருங்கள்.

சாதாரணமாக நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு பைக்கில் பயணம் செய்வதாக இருந்தாலே முதுகு வலி, கால்முட்டி வலி என எல்லாமே வரும்போது, வளைவு நெளிவுகளை கொண்ட மலைப்பாதைகளில் அசவுகரியங்கள் இன்னும் அதிகமாக இருக்கும். அதுவும், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சாலைகளாவது பரவாயில்லை, இமயமலை தொடரில் உள்ள சாலைகள் இன்னும் மோசமானவைகளாக இருக்கும்.
ஆனால், அப்படிப்பட்ட சுமார் 17 ஆயிரத்து ஐநூறு அடி உயரம் கொண்ட கார்டங் லா பாஸ் (Khardung La Pass) வழியாக ஒரு வயதான தம்பதி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 (Himalayan 411) பைக்கில் ஜோடியாக பயணம் செய்து ஆச்சிரியப்படுத்தி உள்ளனர். லடாக்கில் உள்ள கார்டங் லா பாஸ் வழியாக இந்த தம்பதியினர் தங்களது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்ற போது அதனை ஒருவர் வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காட்சிப்படுத்திய போது ஆரம்பத்தில் முதியவர் மட்டுமே பைக்கில் அமர்ந்திருந்துள்ளார். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் போன்ற பவர்ஃபுல்லான பைக்கில் முதியவர் ஒருவர் இவ்வளவு உயரத்திற்கு பயணம் செய்து வந்துள்ளாரா என்கிற ஆச்சிரியத்தில்தான் வீடியோவை காட்சிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன்பின், முதியவரின் வயதான மனைவியும் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்ததும் அங்கிருந்தவர்களுக்கு இன்னும் ஆச்சிரியமாக இருந்துள்ளது.
ஏனெனில், கரடு முரடான பாதைகளை கொண்ட மலைப்பாதைகளில் ஒருவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு பேலன்ஸ் செய்வது என்பது மிகவும் சிரமம் ஆகும். இவ்வாறான மலை பயணத்தில் பின் இருக்கையில் அமர்பவர்களுக்கும் நிறைய அசவுகரியங்கள் ஏற்படும். இத்துடன் இந்த வயதான தம்பதி நிற்கவில்லை, தங்களது பைக் பயணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பைக்கின் பின்னால் கட்டி எடுத்து சென்றுள்ளனர்.

வீடியோவை காட்சிப்படுத்தியவர்கள் தம்பதியினரிடம் அவர்களது வயதை கேட்ட போது, எங்களுக்கு ஒன்றும் அதிக வயதாகவில்லை, இன்னமும் இளமையோடு தான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். ஆனால், எப்படியிருந்தாலும் இந்த முதியவர்களுக்கு 60- 70 வயது இருக்கும். லடாக்கில் உள்ள கார்டாங் லா பாஸ் மட்டுமில்லாமல், நுப்ரா பள்ளத்தாக்கு (Nubra Valley) போன்ற பிரபலமான இடங்களுக்கும் இந்த வயதான தம்பதியினர் அவர்களது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுள்ளனர்.
மற்றப்படி, இந்த தம்பதியினர் இந்தியாவில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. இவர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் போன்று தெரியவில்லை. இந்த பயணத்திற்கு இந்த தம்பதியினர் பயன்படுத்தி உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது தற்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் 450 பைக்கின் பழைய தலைமுறை வெர்சன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வயது எதற்கும் தடையில்லை என்பதற்கு இந்த வயதான தம்பதியினரின் இந்த பைக் பயணம் தான் சாட்சியாகும். இதில் இருந்து, இந்த முதியவர் பைக்குகளை ஓட்டுவதில் நன்கு கைத்தேர்ந்தவர் என்பதையும் அறிய முடிகிறது. மேலும், இந்த பயணத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 பைக்கின் தரத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
Source: Cartog (https://www.cartoq.com/)


Click it and Unblock the Notifications









