நம்ம போலீஸ்காரர்களுக்கு புது பைக்... விலையை கேட்டு வாயை பிளக்கும் மக்கள்... எவ்வளவுனு தெரியுமா?
போலீஸ்காரர்களுக்கு விலை உயர்ந்த பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்டன. இதன்படி அவர்கள் ரோந்து செல்வதற்காக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன. வழக்கமான எஸ்யூவி கார்கள் மட்டுமல்லாது, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிள்களும் டெல்லி போலீஸ் படையில் அப்போது சேர்க்கப்பட்டன.

எனினும் சமீப காலம் வரை டெல்லி போலீசாரின் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் பைக்குகள் சாலையில் தென்படவில்லை. இந்த சூழலில் அவர்களது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் பைக்கின் படங்கள் முதல் முறையாக தற்போது வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகைப்படம் டெல்லியின் எந்த பகுதியில் எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை.

கருப்பு நிற ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் பைக்தான் போலீஸ்காரர் ஒருவருடன் தென்பட்டுள்ளது. இதில், ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் என்னென்ன மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் படத்தை வைத்து பார்க்கையில் ஒரு சில மாடிபிகேஷன்களை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

இதன்படி எரிபொருள் டேங்க் மற்றும் பேட்டரி பாக்ஸ் கவர் ஆகியவற்றின் மீது டெல்லி போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் பின்பக்க மட்கார்டிலும் கூட டெல்லி போலீஸ் என்ற சிறிய ஸ்டிக்கரை பார்க்க முடிகிறது. மேலும் பிளாஷர்கள் மற்றும் சைரன்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தவிர சைடு பாக்ஸ் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

காவல் துறையினர் தங்களுக்கு தேவையான உபகரணங்களை இதில் வைத்து கொள்ள முடியும். இந்தியாவில் பல்வேறு மாநில போலீசாரும், ராயல் என்பீல்டு பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவற்றில் பல பைக்குகளுக்கு வயதாகி விட்டது. எனவே அவற்றுக்கு பதிலாக புதிய மாடர்ன் மோட்டார்சைக்கிள்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இதற்கு போலீசார் அதிருப்திதான் தெரிவித்து வருகின்றனர். கொல்கத்தா போலீசார் இதற்கு நல்ல உதாரணம். பழைய ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு பதிலாக, டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் பஜாஜ் பல்சர் போன்ற மாடர்ன் பைக்குகளை சேர்ப்பதற்கு, கொல்கத்தா காவல் துறையினர் அதிருப்தி காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிள்கள் டெல்லி போலீசாருக்காக வாங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. அனேகமாக ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் பைக்குகளை முதன் முதலில் வாங்கியிருக்கும் படை டெல்லி போலீசாகதான் இருக்க கூடும். இந்த பைக் தற்போது மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடலாக திகழ்கிறது.

இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவைதான், ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து முதன் முதலில் வெளிவந்த பேரலல்-ட்வின் இன்ஜின் மோட்டார்சைக்கிள்கள் ஆகும். லான்ச் செய்யப்பட்ட உடனேயே இந்த இரு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டில் வெகு வேகமாக பிரபலம் அடைய தொடங்கி விட்டன.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 649 சிசி, பேரலல்-ட்வின் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதனால் இந்திய போலீஸ் படைகளால் பயன்படுத்தப்படும் அதிக சக்தி வாய்ந்த பைக்குகளில் ஒன்றாக ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் திகழ்கிறது.

ஆனால் இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். கொல்கத்தா போலீசார் தங்கள் அதிகாரப்பூர்வ மோட்டார்சைக்கிள்களாக, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விவிஐபி கான்வாய்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும் டெல்லி போலீசாருக்காக வாங்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிள் அவர்களின் வழக்கமான மற்றும் தினசரி பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாகனங்களில் தப்பும் குற்றவாளிகளை விரட்டி பிடிப்பதில் டெல்லி போலீசாரின் சக்தி இனி அதிகரிக்க கூடும்.

இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக், 2.56 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்டர்செப்டார் 650 பைக் இந்தியாவில் தற்போது கிடைக்கும் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள்களில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications