கிணற்றை காணோம்'ன்ற மாதிரி, ஒரு பஸ் ஸ்டாண்டையே காணோம்! காணாம போன நிழற்குடையோட மதிப்பு இவ்ளோ அதிகமா!
வாகன திருட்டு என்பது இந்தியாவில் மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க, உலகின் வளர்ந்த நாடுகளில்கூட வாகன திருட்டு மிக அதிகளவிலும், அசால்டாகவும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. கண் இமைக்கும் நேரத்தில் பகல் வேளையிலேயே வாகனங்கள் களவாடுதல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பைக், கார் மற்றும் பேருந்து என எதையும் அசால்டாக கை தேர்ந்த திருடர்கள் திருடிக் கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் திருப்பதி திருமலை கோவிலில் பக்தர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் இலவச பேருந்துகூட திருடப்பட்டது. இதை திருடிய மர்ம ஆசாமி திருப்பதியை அடுத்துள்ள ஓர் சாலையில் விட்டுவிட்டு சென்றார்.

இந்த அளவிற்கே இந்தியாவில் வாகன திருட்டு கொடிக் கட்டிப் பறந்துக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் முற்றிலும் புதிய திருட்டு சம்பவமாக, பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருக்கும் பேருந்து நிறுத்த நிழற்குடை களவாடப்பட்டு இருக்கின்றது. எங்கும் கேள்விப்பட்டிராத திருட்டு சம்பவமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே இந்த விநோத திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. களவாடப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையின் மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இந்த அதிக விலையைக் கொண்டிருக்கின்ற ஒரே காரணத்தினாலேயே அதை திருடர்கள் தற்போது லாவமாக பெயர்த்துச் சென்றிருக்கின்றனர்.
இந்த தகவல் பெங்களூரு வாசிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதுவும், அந்த பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்ட ஒரே மாத்திற்குள் திருடப்பட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பெங்களூருவின் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் ஒன்றான கன்னங்ஹாம் சாலை பேருந்து நிறுத்தமே களவாடப்பட்டு இருக்கின்றது.
பெங்களூரு நகர போக்குவரத்து கழகத்தின் (Bengaluru Metropolitan Transport Corporation) வாயிலாக பராமரிக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தங்களில் இந்த பேருந்து நிறுத்தமும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், பேருந்து நிறுத்த நிழற்குடை திருட்டு குறித்து பிஎம்டிசி அதிகாரிகள் தற்போது காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸார், நிழற்குடையை களவாடிய மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிறுத்த நிழற்குடை இருந்த இடம் தெரியாத அளவிற்கே மிகவும் நேர்த்தியாக பெயர்த்தெடுத்து சென்றிருக்கின்றனர் அந்த மர்ம நபர்கள். இதுபோன்று பெங்களூரு நகரத்தில் பேருந்து நிறுத்தம் களவாடப்படுவது முதல் முறையல்ல.
இதற்கு முன்னதாக மூன்று தசாப்தங்கள் (முப்பது ஆண்டுகள்) பழைய பேருந்து நிறுத்தம் அதே நகரத்தில் இருந்து களவாடிச் செல்லப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இரவிற்கு முன்னர் வரை இருந்த பேருந்து நிறுத்தம், ஒரே ராத்திரியில் இருந்த இடம் தெரியாமல் களவாடி செல்லப்பட்டது. கல்யாண் நகர் பேருந்து நிறுத்தமே அது ஆகும்.
1990 ஆம் ஆண்டில் லயன்ஸ் கிளப்பால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பேருந்து நிறுத்தமே அது ஆகும். இதேபோல், 2014ம் ஆண்டில் 20 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிறுத்த நிழற்குடை ராஜேஸ்வரி நகரத்திலும், 2015 ஆம் ஆண்டில் தூபனஹல்லி பேருந்து நிறுத்த நிழற்குடையும் பெங்களூருவில் களவாடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
அனைத்தும் இரவோடு இரவாகவே களவாடப்பட்டு இருக்கின்றன. சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களைதான் திருடர்கள் திருடுகிறார்கள் என்றால் பெங்களூருவில் இருக்கும் திருடர்கள் பேருந்து நிறுத்த நிழற்குடைகளையே களவாடத் தொடங்கி இருக்கின்றனர். ஏடிஎம் மையங்களுக்கு ஓர் பாதுகாப்பு பணியாளர் இருப்பதைப் போல பேருந்து நிறுத்தங்களுக்கும் இனி வரும் காலங்களில் செக்யூரிட்டியை பணியமர்த்த வேண்டும் என்பதைப் போன்ற சூழலே அங்கு உருவாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேருந்து நிறுத்த நிழற்குடை களவாடப்பட்டு இருப்பது பேருந்தில் பயணிப்போர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் வடிவேலுவின் கிணத்தை காணோம்ற காமெடியைப் போல இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். அதேவேளையில், பலரை இந்த தகவல் வியக்கவே செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








