ஒரு நிமிஷம் கூட எடுத்துக்கல வெறும் 30 செகண்டில் களவாடப்பட்ட 15 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்..
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக கல்லினன் (Cullinan) இருக்கின்றது. இந்த காரையே வெறும் 30 செகண்டுகளுக்குள்ளாக சிலர் களவாடி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் ஆண்டு தோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான கார் (Car) மற்றும் டூ-வீலர்கள் (ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்கள்) கை தேர்ந்த களவானிகளால் களவாடப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற மிக அதிக வாகன திருட்டால் இந்தியா மட்டுமில்லைங்க, உலக நாடுகள் சிலவும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, இரண்டு பேர் கொண்ட குழு வெறும் 30 செகண்டுகளிலேயே காரை திருடும் வீடியோ வெளியாகி இணையத்தை பரபரப்பாக்கி இருக்கின்றது. அவர்கள் திருடி இருப்பது உலகின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றாக அறியப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan)ஐயே அவர்கள் திருடி இருக்கின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிகழ்வு, தொழில்நுட்பம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கின்றது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்க வந்த தொழில்நுட்பம் இன்று திருடர்களின் களவுகளுக்கு உதவிக்க் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அதுவும், அவர்கள் கையாண்டு வரும் நவீன தொழில்நுட்பங்கள் அதிர்ச்சியின் உச்சிக்கேக் கொண்டு செல்லும் வகையில் இருக்கின்றது. இதற்கு சான்றாகவே இப்போதைய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. வாகன உற்பத்தியாளர்கள் வாகன திருட்டைத் தவிர்க்கும் பொருட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் அவற்றை தகர்த்து திருடர்கள் களவாடிச் செல்கின்றனர். ஆகையால், இதுமாதிரியான வாகன திருட்டு சம்பவங்கள் அந்த வாகனத்தின் உரிமையாளர்களைவிட அந்த குறிப்பிட்ட வாகனத்தை தயாரித்த நிறுவனத்திற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. மேலும், வாகன உற்பத்தியாளர்கள் இன்னும் தங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகின்றது.

இதுபோன்று நொடிப் பொழுதில் வாகனங்கள் திருடப்படும் சம்பவம் அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 போன்ற சூப்பர் கார்களும் 1 நிமிஷத்திற்கும் குறைவாக களவாடப்பட்டு இருக்கின்றன. நவீன கால கார்கள் பல தற்போது கீ ஃபாப் உடன் விற்பனைக்கு வருகின்றன.
இதில் இருந்து வரும் சிக்னலே அதன் உரிமையாளரை சாவியே இல்லாமல் காருக்குள் நுழையவும், வாகனத்தை இயக்கவும் அனுமதிக்கின்றது. இதுவே சுலபமான களவிற்கு காரணமாக இருக்கின்றது. திருடர்கள் கீ ஃபாப்-இல் இருந்து வரும் சிக்னலை திருடி அல்லது சிக்னலை உருவாக்கியே கார் திருட்டை அரங்கேற்றுகின்றனர்.
இதுமாதிரியான திருட்டு நிகழ்வுகளில் இருந்து தங்களுடைய வாடிக்கையாளர்களைக் காக்கும் விதமாக டெஸ்லா நிறுவனம், அவர்களின் கார்களில் ஓடிபி வகை பின்-ஐ உள்ளீடு செய்து பின்னர் காரை இயக்கும் வசதியை வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தால் கார் திருட்டில் இருந்து சில டெஸ்லா கார்கள் தப்பி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதவிர, கை ரேகையைப் பயன்படுத்தும் முறையையும் டெஸ்லா நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், நீங்கள் உங்கள் கார் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக கருதினால், உங்கள் காரின் கீ ஃபாப்பை உலோக பெட்டி அல்லது சிக்னலை தடுக்கும் ஸ்பெஷல் உறை ஆகியவற்றில் வைத்துக் கொள்ளலாம்.
இதன் வாயிலாக உங்கள் கீ ஃபாப்-இல் இருந்து வெளி வரும் சிக்னல் திருடப்படுவதை தடுக்க முடியும். அதேவேளையில், நீங்கள் உங்கள் காரை அதிகம் விரும்பக் கூடியவர் என்றால், சாவியில்லாமல் இயங்கும் கார்களுக்கு பதிலாக, சாவியுள்ள கார்களை வாங்கிப் பயன்படுத்தலாம். ஏனெனில், இன்றைய கால திருடர்கள் எந்த மாதிரியான நவீன தொழில்நுட்பமாக இருந்தாலும், அதையுடைத்து காரை திருடிச் சென்றுவிடுகின்றனர். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 30 செகண்டுகளுக்கும் குறைவான நேரத்தில் கார் களவாடப்பட்டு இருப்பது கார் ஆர்வலர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. திருடப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகம் ஆகும். அதேவேளையில், இந்த கார் திருட்டு சம்பவம் போலியானது என்றும் சிலர் சமூக வலைதளங்களிக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









