புகாட்டி சிரோன் ஹைப்பர் கார் வாங்கினாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகாட்டி சிரோன் கார் வாங்கியதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்கிறார். கடந்த ஆண்டு யூரோ 2016 கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனை கொண்டாடும் விதத்தில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகாட்டி வேரான் சூப்பர் காரை வாங்கினார்.

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடலாக போற்றப்படும் புகாட்டி வேரான் காரை ரொனால்டோ வாங்கியது பற்றிய செய்திகள் மீடியாக்களில் படபடத்தன. இந்த நிலையில், அவரது பெயர் மீண்டும் புகாட்டி பிராண்டுடன் இணைத்து படபடக்கப்படுகிறது. ஆம், இந்த முறை அவர் புகாட்டி சிரோன் ஹைப்பர் காரை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கு காரணம், புகாட்டி சிரோன் காருடன் ரொனால்டோ நிற்பது போன்ற படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், புகாட்டி நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியானதுதான். இந்த படங்கள் ஏராளமான லைக்குகளை வாரி குவித்துள்ளன.

கடந்த ஆண்டுதான் புகாட்டி வேரான் காரை அவர் வாங்கிய நிலையில், தற்போது புகாட்டி சிரோன் காரையும் அவர் வாங்கி இருப்பதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இளைஞர்களின் உச்சபட்ச கார் கனவாக புகாட்டி பிராண்டு விளங்குகிறது.

உலகின் அதிவேகமான இந்த புகாட்டி சிரோன் ஹைப்பர் கார் மாடல் கடந்த ஆண்டுதான் வெளியிடப்பட்டது. இந்த காரில் இருக்கும் 8.0 லிட்டர் எஞ்சின் 1,500 பிஎச்பி பவரை வாரி வழங்க வல்லது. மணிக்கு 420 கிமீ வேகம் வரை செல்லும் திறன வாய்ந்தது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

புகாட்டி வேரான் காரை ஓட்டி பார்த்த ருசியில், அடுத்து அதன் வழித்தோன்றலாக வந்த புகாட்டி சிரோன் காரையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் அவர் முன்பதிவு செய்திருக்கலாம் என்ற தகவலும் தெரிவிக்கிறது.

இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.17.31 கோடி விலை மதிப்பு கொண்டது. ஆனால், இதுவரை இந்த தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. இது ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதா அல்லது விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.

அதேநேரத்தில், இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட மற்றொரு படத்தில் லம்போ, போர்ஷே, ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட மாடல்களின் மூக்குப்பகுதியுடன் காட்சியளிக்கின்றன. இந்த குழபப்பத்திற்கு இன்று விடை கிடைத்து விடும் என்று ஐரோப்பிய மீடியாக்கள் ஆவலோடு காத்திருக்கின்றன. நாமும்தான்...!!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








